வங்கி லாக்கர் பாதுகாப்பானதா? திருட்டுப்போனால் யார் பொறுப்பு?
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வங்கி லாக்கர் பாதுகாப்பானது இல்லை என்று வதந்தி பரவியது. ஊடகங்களும் தங்கள் தரப்பில் தப்பு தப்பாக எழுதி குழப்பத்தை மேலும் அதிகரித்தன. தற்போது வெளிநாட்டில் அல்லது வெளியூர்களில் வேலைசெய்யும் தங்கள் பிள்ளைகளைக் காணச்செல்லும் பெற்றோர்கள் அல்லது நீண்டநாள் சுற்றுலா செல்பவர்கள் தங்களிடமுள்ள முக்கியமான பொருட்களை, ஆவணங்களை எப்படி பாதுகாப்பாக விட்டுச்செல்வது என்ற அச்சம் எழுவது இயல்பு. அதற்குத்தான் லாக்கர் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வும், புரிதலும் தேவைப்படுகிறது.
முதலில், லாக்கரில் வைக்கும் பொருட்களுக்கும் வங்கிக்கும் என்ன வகையான உறவு என்பதை முதலில் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் .
ஒரு வாடிக்கையாளர் வங்கியில் பணம் டெபாசிட் செய்யும்போது பணத்தை வங்கியிடம் ஒப்படைக்கிறார். வங்கி அதற்கான ரசீது தருகிறது. டெபாசிட் பணத்தைப் பயன்படுத்தி கடன் கொடுத்து வங்கி இலாபம் சம்பாதிக்கிறது. ஆகவே டெபாசிட் பணத்திற்கு வங்கி முழுப் பொறுப்பு ஏற்கிறது. ஏற்றாக வேண்டும்.
நகை அடமானம் வைத்து நகைக் கடன் பெறப்படும்போதும் ஒப்படைப்பு , பெற்றுக் கொள்வது நடக்கிறது. ரசீதும் தரப்படுகிறது. ஆகவே அடமானம் வைக்கப்பட்ட நகைக்கு வங்கி முழுப்பொறுப்பு.
வீட்டுக்கடன் மற்றும் பத்திரங்களை அடமானம் வைத்து வியாபாரக் கடன் வாங்கும் போதும் பத்திரங்களை வங்கியிடம் தருவது மட்டுமல்லாமல் பத்திரப்பதிவு அலுவலகத்திலும் கடன் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன . அதன் ஒரு நகல் கடனாளிக்குத் தரப்படும். எனவே அடமானம் வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு வங்கி முழுப்பொறுப்பு ஏற்கிறது .
கடன் பெற்று கார் , பைக் வாங்கினால் நிலைமை சற்று மாறுபடுகிறது . இங்கு சம்பந்தப்பட்ட வாகனங்கள் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டில் இருப்பதால் அவை பழுதுபட்டாலோ திருடு போனாலோ வங்கி பொறுப்பேற்காது.
லாக்கர் விஷயத்தில் என்ன நடக்கிறது ? பாதுகாப்புப் பெட்டகத்தில் இருக்கும் லாக்கரில் எலிவங்கு போன்ற சிறியதொரு இடத்தை வாடிக்கையாளர் வாடகைக்கு எடுக்கிறார் . லாக்கரைத் திறப்பதற்கு மட்டும் ஒரு அதிகாரியின் உதவி தேவை . மற்றபடி முழு சுதந்திரத்துடன் லாக்கரை ஒருவர் பயன்படுத்திக் கொள்ளலாம் . நீங்கள் உள்ளே என்ன வைக்கிறீர்கள் என்பது வங்கிக்குத் தெரியாது. அவசியமும் இல்லை. நகை தான் வைக்க வேண்டும் என்றில்லை. என்ன பொருள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஏதும் வைக்காமலும் இருக்கலாம். ஆண்டு வாடகையை முறையாகச் செலுத்தினால் போதும் . இங்கு வங்கி LESSOR, வாடகைக்கு விடுபவர். வாடிக்கையாளர் LESSEE, வாடகைக்கு எடுப்பவர். உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாத நிலையில் எப்படிப் பொறுப்பேற்பது?
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் அடிப்படையிலும் லாக்கருக்கு வங்கிகள் பொறுப்பேற்க தேவையில்லை. ஒருவேளை லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் திருடு போனாலோ அல்லது பாதிப்படைந்தாலும் கூட வங்கிகள் பொறுப்பேற்காது. ஆனால் இயற்கை பேரிடர் அல்லது இயற்கையான சூழல் காரணமாக பல லாக்கர்கள் பாதிப்படையும் பட்சத்தில், அனைவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இந்த சூழலில் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆராயப்படும். இந்த விசாரணைக்கு வங்கிகள் ஒத்துழைக்க வேண்டும். ஒருவேளை இதில் பணியாளர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், லாக்கரை எடுத்தவருக்கு எந்தவிதமான இழப்பீடும் கிடைக்காது.
சில விலக்குகள்:
வங்கிகளின் சேவை குறைபாடுகள் காரணமாக இழப்பு ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம். அப்போது வங்கிகள் சரியான பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை அல்லது சரியான வழிமுறைகளை பின்பற்றவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.
மேலும் லாக்கர் தீ மற்றும் தண்ணீர் பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பானது என்று சொல்லிய பிறகு லாக்கரை வாடகைக்கு எடுக்கிறோம். ஒருவேளை தீ மற்றும் தண்ணீரால் பாதிப்பு வருகிறது என்னும் பட்சத்தில் இழப்பீடு கோரலாம். வங்கி குறை தீர்ப்பு மையத்தில் இது குறித்து முறையீடு செய்யலாம். ஒரு வேளை இங்கும் நீதி கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம்.
காப்பீடு எடுக்கலாம்:
லாக்கர் திருட்டு மற்றும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள காப்பீடு எடுப்பது சிறந்த வழி. காப்பீட்டு நிறுவனம் நீங்கள் பாலிசி எடுக்கும் முன்பு உங்கள் லாக்கரில் உள்ள பொருட்களின் மதிப்பு என்ன என்பதை கணக்கிட்ட பிறகு பிரீமியத் தொகை நிர்ணயம் செய்யும். ஒரு வேளை இழப்பு ஏற்படும் பட்சத்தில் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து இழப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம். பொதுவாக லாக்கரில் இருக்கும் தொகையில் ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரை பிரீமியத்தொகை இருக்கும். பொருட்கள் வீட்டில் இருந்தாலோ அல்லது லாக்கரில் என எங்கிருந்து பாதிப்படைந்தாலும் க்ளைம் கிடைக்க கூடிய பாலிசிகள் உள்ளன. இந்த வகை பாலிசிகளுக்கு அதிக பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும்.
ஹெச்டிஎப்சி எர்கோ, டாடா ஏஐஜி, ஓரியண்டல் இன்ஷூரன்ஸ், நியூ இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகிய காப்பீட்டு நிறுவனங்கள் தங்கத்துக்கு காப்பீடு வழங்குகின்றன.
வீடு மற்றும் லாக்கரில் இருந்து பாதிக்கப்பட்டாலும் காப்பீடு இழப்பீடு கோரலாம் என்றாலும், லாக்கரில் இருக்கும் போது பாதிப்படைந்தால்தான் இழப்பீடு பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு நீங்கள் நகையை வீட்டில் வைத்திருக்கிறீர்கள். 30 நாட்களுக்கு மேல் வீடு பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அதன் பிறகு நகை திருடு போனால் கிளைம் கிடைக்காது. இந்த பிரச்சினை லாக்கரில் இல்லை.
நகை சம்பந்தமான சில பாலிசிகளில் வீடு, லாக்கர், அணிந்திருக்கும் ஆபரணங்கள் போன்ற வகைகளில் பாதிப்படைந்தாலும் இழப்பீடு பெறலாம். தவிர மழை, வெள்ளம், பூகம்பம், கொள்ளை மற்றும் தீ உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். அரிதிலும் அரிதாக சில இடங்களில் சுவற்றில் ஓட்டை போட்டோ நிலத்துக்கடியில் சுரங்கம் அமைத்தோ லாக்கர் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவது நடக்கிறது. பெரும்பாலும் திருடன் பிடிபட்டு விடுகிறான். 99.9999 சதம் லாக்கர் பாதுகாப்பானது. கட்டிடம் தீயில் எரிந்தாலும் லாக்கர் தீப்பிடிக்காது. பயமின்றி பொதுமக்கள் வங்கி லாக்கர்களைப் பயன்படுத்தலாம்.

