திருநெல்வேலி ஆட்சியர் வளாகத்தை மீண்டும் அலங்கரிக்கும் மாவீரன் கட்டபொம்மனாரின் சிலை!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மைய அரங்கில் வைக்கப்பட்டிருந்த இந்திய சுதந்திரப்போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் சிலை பராமரிப்புப்பணிக்குப்பின் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது. இதனால் கடந்த ஒருவாரமாக நிலவிவந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் மாவட்ட ஆட்சியர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதன் விவரம் பின்வருமாறு,
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென்மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இம்மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் மழைவெள்ளத்தில் மூழ்கியதில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மிக்ஜாம் புயலின் பாதிப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் விட்டுவைக்கவில்லை. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சூழந்த வெள்ளநீரால் அங்குள்ள மக்கள் குறைதீர்ப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த இந்திய சுதந்திரப்போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் சிலை சேதமடைந்தது. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படும் இச்சிலையானது எளிதில் சேதமடையக்கூடிய உலர்ந்த ஜிப்சம் (Plaster Of Paris) கலவையால் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளப்பாதிப்பிற்குப்பின் சிலை வைக்கப்பட்டிருந்த அரங்கில் சீரமைப்புப்பணி நடைபெற்றுவந்த நிலையில் சேதமடைந்த கட்டபொம்மனாரின் சிலை சரி செய்யப்படுவதற்காக அங்கிருந்து அகற்றப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே கூட்ட அரங்கு சீரமைப்புப்பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வந்தநிலையில் கட்டபொம்மனாரின் சிலை மட்டும் மீண்டும் நிறுவப்படாமல் இருந்து வந்தது. இது மக்களின் கவனத்தைப்பெறவே மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்திலிருந்த கட்டபொம்மன் சிலை அகற்றப்பட்டதாக செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவியது. இதுகுறித்தான புகார் மனுக்கள் தமிழக முதல்வர் வரை கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.
இதற்கிடையே இப்பிரச்சினையை கையிலெடுத்த பல்வேறு அமைப்புகள் மீண்டும் அதே இடத்தில் கட்டபொம்மன் சிலை வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக விடுதலைக்களம் கட்சி அறிவித்திருந்த நிலையில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த தொழிலதிபர் வலசை கண்ணன் தலைமையிலான குழுவினரிடம் ஆகஸ்டு'15 சுதந்திர தினத்திற்குள் மீண்டும் சிலை அதே இடத்தில் நிறுவப்படும் என்று வாக்குறுதியளித்திருந்தார். மாவட்ட ஆட்சியருடனான சந்திப்பின்போது உடனிருந்த தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் உள்ளிட்டோரும் நிச்சயம் கட்டபொம்மன் சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சீர்செய்யப்பட்ட கட்டபொம்மனாரின் சிலை மாவட்ட ஆட்சியர் அலூவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு இரவோடு இரவாக சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை தொழிலதிபர் வலைசை கண்ணன் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்று கட்டபொம்மனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்து அறிவிக்கப்பட்ட நாளுக்கு முன்பாகவே சிலையை மீண்டும் நிறுவ உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் சிலை அகற்றப்பட்ட விசயத்தை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததில் பெரும்பங்காற்றிய மதிமுக பிரமுகரும் நல்லப்பசுவாமிகளின் வாரிசுதாரருமான பாளையங்கோட்டை மாரிச்சாமிக்கு வாழ்த்து பலரும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தொட்டியநாயக்கர்.காம் இணையதளத்திடம் பேசிய மாரிச்சாமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த வாரம் செல்ல நேரிட்டபொழுது தற்செயலாக மாவீரன் கட்டபொம்மனாரின் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றபோது, அங்கு சிலை இல்லாதது குறித்து அதிர்ச்சி அடைந்ததாகவும், இதுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டவுடன் பல்வேறு தரப்பிலிருந்தும் தன்னிடம் விசாரித்ததோடு, சிலையை மீண்டும் நிறுவிட எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்ததாக தெரிவித்தார். இப்பிரச்சினையை இவ்வளவு சீக்கிரம் முடிவுக்குக்கொண்டு வந்ததில் அனைவரும் காட்டிய ஆர்வமே காரணம் என்பதோடு, இந்நிகழ்வு பரங்கியரால் பீரங்கிகொண்டு துவசம் செய்யப்பட்ட பாஞ்சை கோட்டையை மீண்டும் ஒருசில நாளில் ஊமைத்துரை உயிர்ப்பித்த மகிழ்ச்சியைத் தருவதாக தெரிவித்தார்.

