🔴 LIVE | முப்பெரும் விழா 2023


டிஎன்டி ஒற்றை சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி அமைச்சர் மெய்யநாதனுடன் சந்திப்பு!

தமிழகத்தில் தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர், பிரன்மலைக்கள்ளர், போயர் உள்ளிட்ட 68 சீர்மரபு வகுப்பினர் டிஎன்டி ஒற்றை சாதிச்சான்றிதழ் கேட்டு 2014 முதல் போராடி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 2021-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் சாதிச்சான்றிதழ் சம்மந்தமாக பல அமைப்புகள் போராடி வருவதை கணக்கில் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அப்பிரச்சினைகள் களையப்படும் என்று வாக்குறுதியளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக அன்றைய தேர்தல் பரப்புரைக்கூட்டங்களில் பேசிய அக்கட்சியின் தலைவரும், இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் டிஎன்டி ஒற்றை சாதிச்சான்றிதழ் கேட்டு சீர்மரபு வகுப்பினர் போராடி வருவதைக் குறிப்பிட்டு  திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் அக்கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என்று வாக்குறுதியளித்திருந்தார்.

எதிர்பார்த்தது போலவே அத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. ஆனால் தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றும் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்கள் சார்பில் பல போரட்டங்களும், அதிகாரிகள், அமைச்சர்களுடனான சந்திப்புகளும் நடைபெற்றன. ஆனால் அதற்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதனால் 68 சமுதாய மக்களும் திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் இருந்தனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது இதை உணர்ந்துகொண்ட திமுக அரசு, தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டு டிஎன்டி ஒற்றைச் சாதிச்சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆனால் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு டிஎன்டி சமூகங்களின் கோரிக்கையை நிறைவேற்றப் போதுமானதாக இல்லை என்றும், முதல்வரின் அறிவிப்பில் ஏகப்பட்ட குளறுபடிகளும், தெளிவான வழிகாட்டலும் இல்லையென அப்போதே கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கேற்றாற்போல் இரட்டை சாதிச்சான்றிதழில் இருந்த அதே குளறுபடி ஒற்றைச் சாதிச்சான்றிதழிலும் தொடர்ந்தது. அதற்கு முன்னர் டிஎன்சி/டிஎன்டி என்று தனித்தனியாக இரண்டு தாள்களில் சாதிச்சான்றிதழ் கொடுத்த அரசு தற்போது ஒரே தாளில்  வழங்கியது தவிர வேறு வித்தியாசமில்லை என்பதே அனைவரின் குற்றச்சாட்டாக இருந்தது.

எனினும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது தேனி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன், அத்தொகுதியில் அதிகமுள்ள டிஎன்டி சமூககங்களின் வாக்குகளைப்பெறுவதற்காக "தான் தேர்தலில் வெற்றிபெற்றால் டிஎன்டி சமூகங்களின் கோரிக்கை தமிழக முதல்வரின் தனி கவனத்திற்கு கொண்டுசென்று ஒரே சாதிச்சான்றிதழ் பெற்றுக்கொடுப்பேன்" என்று வாக்குறுதியளித்திருந்தார்.


அத்தேர்தலில் "தங்க.தமிழ்ச்செல்வன்" வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இதனையடுத்து அன்றைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இராஜ.கண்ணப்பன் அவர்களைச் சந்தித்து டிஎன்டி ஒற்றை சாதிச்சான்றிதழ் வழங்குபடி தொடர்ந்து வலிறுத்தப்பட்டது. ஆனால் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தபாடில்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு, சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டதும், சில புதுமுகங்கள் அமைச்சராகும் வாய்ப்பும் பெற்றனர். அதன்படி சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த சிவ.வீ.மெய்யநாதன் வசம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் கடந்த சனிக் கிழமையன்று மாலை 6.30 மணி அளவில், தமிழக பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் அவர்களது இல்லத்தில் சந்தித்து, DNT ஒற்றை சாதிச்சான்றிதழ் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 

அம்மனுவில்,  DNT 68 ஜாதிகளை உள்ளடக்கிய சீர்மரபு பழங்குடி மக்களுக்கு வழங்கிவரும் சாதி சான்றிதழில்,  DNC /DNT என இல்லாமல்,1979 -ம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போல DNT என்று மட்டும் ஒரே சாதிச்சான்றிதழ் வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

அமைச்சருடனான இந்த சந்திப்பிற்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாமல், அவரும் நேரடியாக கலந்துகொண்டு கோரிக்கை மனுவை அமைச்சருக்கு பரிந்துரை செய்தார். மனுவைப்பெற்றுக்கொண்ட அமைச்சர் கோரிக்கையை பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதியளித்தார்.

இச்சந்திப்பின்போது டிஎன்டி சமுதாயப்பிரதிநிதிகளோடு தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜு கலந்துகொண்டார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved