தளி எத்தலப்ப நாயக்கர் சிலை திறப்பு - தமிழக முதல்வருக்கு நன்றி
தமிழகத்தை ஆட்சி செய்த பாளையக்காரர்களில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு கடும் சவாலாக இருந்தவர்கள் கம்பளத்து பாளையக்காரர்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர்களில் முதன்மையானவர்கள் விருப்பாச்சி கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்டபொம்மன், தளி எத்திலப்ப நாயக்கர் ஆகிய பாளையக்காரர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு நிலைகளில் இருந்து ஆங்கிலேயர்களுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வரலாற்றில் தங்களை பதிவு செய்து கொண்டனர். மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், விருப்பாச்சி கோபால நாயக்கர் ஆகியோரின் பராக்கிரமங்களும், தியாகங்களும் பொதுமக்களிடம் சென்று சேர்ந்த அளவுக்கு தளி எத்திலப்ப நாயக்கரின் தியாகம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பது நிதர்சனமாக இருந்துவந்தது.

ஆனால் மண்ணுக்காகவும், சுமரியாதைக்காகவும் செய்யப்பட்ட உண்மையான தியாகத்தை வரலாற்றுப் பக்கங்களில் இருந்து நெடுநாள் மறைக்க முடியாது என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் தளி எத்தலப்ப நாயக்கர். தளி பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கர் மறைந்து ஏறக்குறைய 225 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அவரது வரலாறு முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை. இந்நிலையில் 2021-இல் ஆட்சிப்பொறுப்பேற்றுக்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுதந்திரப்போராட்டத் தியாகிகளுக்கு உரிய மரியாதையையும், கௌரவத்தையும் வழங்குவதில் தீவிர முனைப்புக்காட்டி வந்தார். அதனடிப்படையில் இந்த ஆட்சியில் சுதந்திரப்போராட்ட தியாகிகள் பலருக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிலை, மணிமண்டபம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பேரூராட்சி அலுவலக வளாகத்தில், தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு சிலை நிறுவவும், திருமூர்த்தி அணை அருகே அரங்கம் அமைக்கவும் 2 கோடியே 53 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து உடனடியாக கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தன.

அதன்படி உடுமலைப்பேட்டை நகராட்சியின் நிர்வாக மையமான நகரமன்ற வளாகத்தில் தளி எத்தலப்ப நாயக்கரின் முழு உருவச்சிலையும், திருமூர்த்தி மலை அருகே மணிமண்டபமும் கட்டி முடிக்கப்பட்டு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவை நேரில் கண்டு சிறப்பிக்கும் வகையில் ஏராளமான சமுதாய சொந்தங்கள் பல ஊர்களில் இருந்து திரண்டு வந்திருந்தனர்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கம்பளத்தாருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதற்கு சமுதாய தலைவர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

