தொழில்துறையில் அறம் வளர்த்த நாயகன் ரத்தன் நேவல் டாடா மறைவுக்கு அஞ்சலி!
தொழில்துறையில் அறம் வளர்த்த நாயகன் ரத்தன் டாடா மறைவுக்கு அஞ்சலி!
பிரபல தொழில் அதிபரும், இந்திய தொழில்துறையின் பிதாமகனும், தொழில்துறையில் அறம் சார்ந்த கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு, தன் வாழ்நாளெல்லாம் கடைபிடித்து லட்சக்கணக்கான தொழில் முனைவோருக்கு ஆதர்ஷ புருசனாக வாழ்ந்து வழிகாட்டிய டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா அவர்கள், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனது 86-வது வயதில், மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.
இந்தியச் சமூகங்களில் "நீ என்ன பெரிய டாடா, பிர்லா வா?" என்ற வார்த்தை மிகப்பிரபலம். சாமானியன் தொடங்கி செல்வந்தர்கள் வரை தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களால் உச்சரிக்கப்படும் வார்த்தை அநேகமாக இதுவாகத்தான் இருக்கமுடியும். இவர்களில் பெரும்பான்மையினருக்கு டாடா யாரென்றோ, பிர்லா யாரென்றோ கூடத்தெரியாது. அப்படியிருந்தும் இப்பெயர்கள் உச்சரிக்கப்படக் காரணம், இந்தியாவில் பணக்காரர்கள் என்றால் டாடாவும், பிர்லாவும் தான் என்பது இந்திய மரபணுக்களில் ஊறிப்போன ஒன்று.
சாதாரண உப்பு முதல் விமானம் வரை எல்லாத்துறைகளிலும் கால்தடம் பதித்து, தன் 150 ஆண்டுகால இருப்பைத் தொடர்ந்து தக்கவைத்து வரும் நிறுவனம் டாடா என்றால் மிகையல்ல. ஒரு வணிக நிறுவனமாக தொடங்கப்பட்ட கிழக்கிந்தியக் கம்பெனி வணிக நலன், பொருளீட்டல் ஆகியவற்றை மட்டுமே மையமாகக் கொண்டு பல நாடுகளை கைப்பற்றியதும், காலனி ஆதிக்கத்திற்கு அடித்தளமிட்டதும், கோடிக்கணக்கான மக்களை அடிமைப்படுத்தியதும், கொன்று குவித்ததும் உலகமறிந்த வரலாறு. அதன் தொடர்ச்சியாக இன்று சாமானியன் கூட தனது முறைகேடான, நேர்மையற்ற செயலுக்கு "தொழில் தர்மம்" என்று பெயர் சூட்டி, தனது செயலுக்கு நியாயம் கற்பித்துக்கொள்வதை சாதாரணமாக பார்க்க முடிகிறது.
பொருளீட்டலை மட்டுமே மையமாகக்கொண்டு செயல்படும் தொழில்துறையில் "வாராது வந்த மாமணி" போல் ஒரு தூயவனாக அறியப்பட்டவர் ரத்தன் நேவல் டாடா. தனது பத்து வயதில் தாய் தந்தையர் விவாகரத்துப்பெற்று பிரிந்து சென்றுவிட்டபின் தன் பாட்டியாரிடம் வளர்ந்த ரத்தன் டாடா, தொழில்துறையில் அறநெறிக்கோட்பாடுகளை புகுத்தியவர். மக்களின் தேவையறிந்து குறைந்த விலையில் உயர்ந்த, தரமான பொருட்களை கிடைக்கச் செய்தவர் ரத்தன் டாடா. எளிய மக்களின் குரலையும், துயரத்தையும் பார்த்த ஒரே தொழிலதிபர் ரத்தன் டாடா. ஒரு சாமானியன் வீட்டுப்பெண் எழுப்பிய எதிர்க்குரலுக்கு ரத்தன் டாடா செவிமடுத்த ஒரு சிறிய சம்பவம் சுதா நாராயணமூர்த்தி என்ற ஆளுமை உருவாகக் காரணம். அதன் பின்னனியில் உருவான இன்போசிஸ் நிறுவனம். அதேபோல் சாதராணக் குடும்பத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் இரு குழந்தைகளோடு கொட்டும் மழையில் நனைந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றதைப் பார்த்த ரத்தன் டாடாவின் கருணை உள்ளத்தால் உருவானதுதான் நானோ வகைக் கார்கள்.
இன்று பெருநிறுவனங்கள் ஆளும் அரசுகளை கைக்குள் போட்டுக்கொண்டு டோல் கட்டணக்கொள்ளை, தொலைபேசிக்கட்டணக் கொள்ளை, பொட்ரோல், டீசல் விலையேற்றி கொள்ளை என ஒவ்வொன்றிலும் கொள்ளையோ கொள்ளை என மக்களைச் சுரண்டிக்கொழுத்து உலகப்பணக்காரர் வரிசைக்கு போட்டி போடும் போது ரத்தன் டாடா தனது வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கை அறக்கட்டளை மூலம் மக்களுக்கு சேவையாற்ற வாரிவழங்கியது ரத்தன் டாடாவை மனிதப்புனிதர் ஆக்கியது என்றால் மிகையல்ல.
இப்படி தன் ஒவ்வொரு செயலிலும் மனித நேயத்தை போதித்த ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனது 86-வது வயதில் இயற்கை எய்தியுள்ளார். உருவத்தால் மட்டும் உயர்ந்த மனிதனாக இல்லாமல் தனது செயலிலும், சிந்தனையிலும் உயர்ந்து நின்ற ரத்தன் டாடாவின் புகழ் மனிதகுலத்திற்கே ஒரு முன்மாதிரியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. அன்னாரின் மறைவுக்கு தொட்டிய நாயக்கர் சமூகம் தனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

