🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தாரின் கதவைத்தட்டும் வாய்ப்புகள்!

கல்வியை ஒரு சமுதாயப்பணியாக செய்வது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சமுதாய நோக்கோடு தங்களால் இயன்ற பங்களிப்பை கல்வியின் வாயிலாக செய்துள்ளனர். இதன் பலனாக சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பல சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிகளைத் தொடங்கி, கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வணிக மேலாண்மை கல்லூரி, மருத்துவக்கல்லூரி என இன்று ஆலமரமாக வளர்த்தெடுத்துள்ளதைப் பார்க்கிறோம். துரதிஷ்டவசமாக, பல சமூகங்கள் எப்போது கல்வியின் முக்கியத்தை உணர்ந்து பயணிக்கத்தொடங்கியதோ அப்போது நம் கம்பளத்தார் சமூகம் உச்சநிலையிலிருந்து சரியத்தொடங்கியது. இதன் விளைவாக கல்வி, அரசியல், தொழில் என அனைத்து குறியீடுகளிலும் வளர்ந்துவிட்ட சமூகங்களைக் காட்டிலும் குறைந்த பட்சம் அரை நூற்றாண்டுகள் பின் தங்கியுள்ளோம்.

நல்வாய்ப்பாக,சமூகம் முற்றும் அழிந்து செயலிழந்துபோகாமல் மீண்டும் துளிர்விடத் தொடங்கியிருப்பது மிகுந்த ஆறுதலைத் தருவதாக உள்ளது. தற்போது மூத்தகுடிமக்களாக இருப்பவர்கள் குறிப்பிடத்தக்க அளவு அரசுப்பணிகளைப் பெற்றிருந்தாலும், அதில் ஆசிரியர் பணியிடங்களை ஆக்கிரமித்த அளவிற்கு வேறு துறைகளில் இடம்பெறவில்லை. குறிப்பாக மத்திய அரசுப்பணிகளில் பணியாற்றியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதற்கு அன்றைய சமூக சூழலும், போதுமான விழிப்புணர்வும், வழிகாட்டுதலும் இல்லாமல் போனது காரணமாக இருக்கலாமே தவிர தகுதி அடிப்படையில் காரணமாக இருக்க முடியாது.

புதிய நூற்றாண்டு புதிய பொருளாதாரக் கொள்கையோடு பிறந்ததால் தொழில்துறையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. என்ன விலை கொடுத்தாவது குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டுமென்ற உணர்வை அன்றாடம் காய்ச்சிக்குக்கூட ஏற்படுத்தியுள்ளது வரவேற்கத்தகுந்த மாற்றம். அதே உணர்வு நமது சமுதாயத்திலும் மேலோங்கியிருப்பது மகிழ்ச்சி தரத்தக்கது.

எனினும், தற்கால இளைஞர்களின் போக்கு குறைந்தபட்சம் பொறியியல் பட்டமும், அதன் தொடர்ச்சியாக ஒரு நல்ல மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு அமர்வது என்பது தான் லட்சியமாக உள்ளது. ஒருசிலர் மருத்துவக்கனவை லட்சியமாகக்கொண்டு படிப்பதும், அதில் வெற்றியைச்சுவைப்பதும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கியபின் இயல்பாக நடந்து வருகிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஐஐடி போன்ற பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பை ஓரிருவர் பெறுகின்றனர். ஆனால் இன்னும் போதுமான அளவில் உயர்தர நிறுவனங்களில் படிப்போர் எண்ணிக்கை உயரவில்லை என்பதை சமூகம் கவனிக்க வேண்டும். அதேபோல் சட்டம் படிப்பை தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்த அளவிலேயே உள்ளது. பெருகிவிட்ட தொழில்நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வரிவிதிப்பு முறைகளால் சட்டத்துறை புத்துயிர் பெற்றுள்ளது என்றால் மிகையல்ல. பல தனியார் நிறுவனங்கள் மென்பொறியாளருக்கு இணையான அல்லது அதற்கும் அதிகான சம்பளத்தில் சட்டம் பயின்றவர்களை பணியமர்த்தி வருவதை புள்ளி விவரங்கள் விளக்குகின்றன.

இவையெல்லாம் அறிவுசார் வளர்ச்சியில் கம்பளத்தாரின் வளர்ச்சிக்குறியீட்டை உயர்த்தினாலும், அரசு நிர்வாகத்தில் கம்பளத்தார் மக்கள்தொகைக்கேற்ற விகிதத்தில் பிரதிநிதித்துவம் பெருகிறோமா என்பதில் தான் சமூகத்தில் வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. அதாவது நாம் மேய்ப்போனாக உள்ளோமா? அல்லது மேய்க்கப்படுவோனாக உள்ளோமா? என்பதில் தான் சமுதாயத்தின் மதிப்பு அடங்கியுள்ளது. இதில் நாம் மேய்ப்போனாக இருந்து மேய்க்கப்படுவோனாக தேய்ந்துள்ளோம் என்பதே எதார்த்த நிலை. அதிகாரத்தை பரிபாலனம் செய்யக்கூடிய அரசியல், நிர்வாகம், நீதித்துறை என அனைத்திலும் போதாமையோடுதான ஒரு நூற்றாண்டைக்கடந்து வாழ்கிறோம். இதற்கான தீர்வினை சமுதாய அமைப்புகள் முன்வைத்து இயங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஆண்டுதோறும் உயர்கல்வி முடித்து வெளியேறுபவர்களில் கம்பளத்தார் சமுதாய இளைஞர்கள் சுமார் பத்தாயிரம் பேர் என தோராயமாக எடுத்துக்கொண்டாலும், அதில் பத்து சதவீதம் பேர் அதாவது ஆயிரம் பேராவது அரசுப்பணிக்கு செல்ல தயாராவதற்கு சமுதாய அமைப்புகளும், பெரியவர்களும் ஊக்குவிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க அளவு மத்திய அரசுப்பணிகளுக்கான தேர்வெழுதவும் ஊக்கப்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் குறைந்தபட்சம் இரண்டு சதவீத இடங்களை நிரப்புவதை குறிக்கோளாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோமேயானால் அடுத்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய வெற்றியை சாத்தியமாக்கலாம்.

இதற்காக நாம் அதிக முதலீடுகளை செய்யவேண்டும் என்பதில்லை. தகுதியானவர்களை அடையாளம் கண்டு, சரியான வழிகாட்டினாலே போதும். உதாரணமாக, கடந்த ஆண்டு கட்டபொம்மன் அகாடமியின் முதலாம் ஆண்டு (2023-24) இலவச பயிற்சிக்காக மாணவ, மாணவியரை தேர்வு செய்யும் வாய்ப்பு பெற்றோம். இதில் விண்ணப்பித்தவர்களில் 15 சதவீதமானோருக்கு வாய்ப்பு வழங்கி, ஓராண்டு தொடர் பயிற்சி வழங்கியுள்ள நிலையில் அதில் 50 சதவீதமானோர் நம்பிக்கையளிக்கும் வகையில் தேர்வுகளில் செயல்பட்டுள்ளனர். முதல் முயற்சியில் அவர்களே அடுத்த தேர்வுக்கு தயாராகும் நிலைக்கு உத்வேகம் பெற்றுள்ளனர் என்பதைப் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு குரூப்1 மற்றும் யுபிஎஸ்சி தேர்வுக்காக அணுகினர். இதில் உண்மையான ஆர்வமும், அக்கறையும், ஈடுபாடும் கொண்ட நால்வரை தேர்வு செய்து பயிற்சியளிக்க தீர்மானித்தோம். இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் திரு.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் தனிப்பட்ட நட்பின் அடிப்படையில்  ஒரு நல்லவாய்ப்பை இம்மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடிந்தது. இந்தியாவில் மிகச்சிறந்த நிறுவனமாகவும், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி வழங்க தேர்வாகியுள்ள நிறுவனமும், பல மாநில அரசுகளுக்காகவும், மத்திய அரசுக்காகவும் பயிற்சி வழங்கிவரும் நிறுவனமான சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் மிகக்குறைந்த செலவில் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர். சுமார் ஒரு லட்சம் முதல் 2.25 லட்சம் வரையிலான பயிற்சிக்கட்டணத்தில் பெரும்பகுதியைக்குறைத்து, அதையும் தவணைமுறையில் கட்டுவதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்து மிகப்பெரிய உதவியை அமைதியான முறையில் செய்துமுடித்துள்ளார் திரு.இராதாகிருஷ்ணன்.

இதன் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு மட்டுமல்லாமல் வங்கித்துறை, ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்துவகையான போட்டிதேர்வுகளில் ஆர்வமுள்ளவர்களுக்கும் தரமான பயிற்சி மையங்களில் மிகக்குறைந்த செலவில் பயிற்சி பெருவதற்கான சூழல் உருவாகிவருகிறது.

ஒருபுறம் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முனைப்புக்காட்டி வருகிறது. இதன் வெளிப்பாடாக 2025 ஆம் ஆண்டு தேர்வு நடைபெறும் தேதியை முன்கூட்டியே அறிவித்துள்ள தேர்வாணையம் சமீபத்தில் நடைபெற்ற குரூப்4  தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 2500 காலியிடங்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

 எனவே, போட்டித்தேர்வுகளில் விருப்பமுள்ள மாணவ, மாணவியர் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு குறைவான செலவில் நிறைவான பயிற்சியும், அதன் தொடர்ச்சியான மாதாந்திரத் தேர்வுகளிலும் பங்கேற்று போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். சமூகம் உங்கள் பின் நின்று உயர்த்தும்.  

கட்டுரையாளர் : பி.இராமராஜ், முன்னாள் இயக்குநர், மத்திய பொதுப்பணித்துறை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved