குரூப் தேர்வுகளில் தொடர் வெற்றி - மாஸ் காட்டும் மல்லம்பாளையம்!
குரூப் தேர்வுகளில் தொடர் வெற்றி - மாஸ் காட்டும் மல்லம்பாளையம்!
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பள்ளபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கிராமம் மல்லம்பாளையம். முழுக்க முழுக்க இராஜகம்பளத்தார் சமுதாயத்தினர் வசிக்கும் இக்கிராமத்தில் சுமார் 30 குடும்பங்கள் உள்ளன. விவசாயம் மற்றும் விவசாயக்கூலி, இதுவே பல தலைமுறை வாழ்க்கை. காலங்காலமாக பெருங்கனவுகளோடு இம்மண்ணில் உழன்ற முன்னோர்கள் சிந்திய வியர்வைத்துளியிலிருந்து முளைவிடத்தொடங்கியுள்ளது ஒரு இளந்தலைமுறை.

ஆம், இக்குக்கிராமத்திலுள்ள இளைஞர்கள் அரசுப்பணியில் சேர்வதை லட்சியமாகக்கொண்டு தொடர்ந்து குரூப் தேர்வுகளில் பங்குபெற்று வெற்றிக்கனியை பறித்து வருகின்றனர். 80-90 களில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த இந்த இளைஞர்கள், பெற்றோர்களுக்குத்துணையாக விவசாயப்பணிகள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, குடும்பத்திலிருந்து முதல்முறையாக கல்லூரிகளுக்குள் காலடி எடுத்து வைக்கும் முதல் நபர், முதல்தலைமுறைப்பட்டதாரி என்ற வெற்றுப்பெருமிதத்தோடு நின்றுவிடாமல், ஆண்டபரம்பரை கதைகளையெல்லாம் பரணில் தூக்கிப்போட்டுவிட்டு, நிதர்சன உண்மையுணர்ந்து, பட்டம் பெற்ற அதே வேகத்தோடு, அரசுப்பணியில் சேர்வதையும் லட்சியமாகக் கொண்டு உழைத்ததின் பயனாக தொடர் வெற்றிகள் மூலம் இராஜகம்பளத்தார் இனத்திற்கு பெருமை தேடித்தந்து வருகின்றனர்.

அரசுப்பணிக்கு தேர்வு நடத்துவதே அரிது என்ற நிலையில், அவ்வப்போது நடைபெறும் தேர்வுகளுக்கு தங்களைத் தொடர்ந்து தயார் செய்துவந்த மல்லம்பாளையம் கிராம இளைஞர்களுக்கு 2012 இல் செல்வக்குமார் என்பவர் குரூப்2 தேர்வில் வெற்றி பெற்றது புதிய நம்பிக்கையளித்தது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஒவ்வொரு குரூப் தேர்விலும் யாராவது ஒருவர் வெற்றிபெற்று அரசுப்பணியில் சேர்ந்து வருவது அக்கிராமத்திற்கேயுண்டான தனிச்சிறப்பாக இருந்து வருகிறது.
2016-இல் குரூப்4 தேர்வில் கார்த்தி, 2017-இல் மோகன்ராஜ், 2018-இல் நாகராஜ், 2019-இல் பசுபதி, 2021-இல் தினேஷ், 2024-இல் கோவிந்தசாமி என தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் குடும்பத்திற்கொரு அரசு ஊழியர் என்ற இலக்கை விரைவில் எட்டமுடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இக்கிராம உறவுகள். பள்ளிப்பருவத்திலிருந்தே மாணவர்களை அரசு அதிகாரத்தில் அமர்த்த வழிகாட்டுவதும், ஊக்கமளிப்பதும், உற்சாகப்படுத்துவம், உதவிசெய்வதும் மண்ணிற்கான சுபாவமாக மாறிவிட்டதாகச் சொல்கின்றனர் வெற்றியாளர்கள். இதன் மூலம் அரசின் ஒவ்வொருதுறையிலும் மல்லம்பாளையத்தைச் சேர்ந்த ஒருவராவது பணியாற்ற வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதே இவர்களின் லட்சியமாக உள்ளது.
மல்லம்பாளையம் இளைஞர்களை முன்மாதிரியாகக்கொண்டு மற்றவர்களும் செயல்பட்டால் அதிகாரம் சாத்தியப்படும் நாள் அதிக தூரமில்லை.

