🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வந்ததும், வென்றதும், வாழ்ந்ததும், வீழ்ந்ததும், மீண்டதும் யாராலே?

கல்வியில் மிகப்பின்தங்கியிருந்த பல சமூகங்களில் இராஜகம்பளத்தார் சமூகமும் ஒன்று. கடந்த கால்நூற்றாண்டுகாலமாக அனைவருக்கும் கல்வி என்ற இலக்கோடு பயணித்து வரும் தமிழகத்தில், இராஜகம்பள சமூகமும் கல்வியின் பால் ஈர்க்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளாக பெண்கள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டதோடு, சமுதாயத்தையும் அடையாளப்படுத்தி வருகின்றனர். கம்பளத்தார் சமுதாயத்தைபொறுத்தவரை மதுரையை மீட்க படைகொண்டு வந்ததும், வென்றதும், வீழ்ந்ததும், மீண்டதும் அனைத்தும் பெண்களால் மட்டுமே என்பதை வந்த வழி சொல்லும் வரலாறு.

பொறியியல், மருத்தும், சட்டம் என பலதுறைகளில் சாதித்துவரும் இராஜகம்பள சமுதாயப்பெண்கள், தற்போது தொழில்துறையிலும், விளையாட்டுத்துறையிலும் சாதிக்கத்தொடங்கியிருப்பதின் மூலம் இராஜகம்பள சமூகம் நூற்றாண்டுகாலமாக இழந்திருந்த பெருமையை மீட்கத்தொடங்கியுள்ளது. இதற்கு பெண்கள் தான் மிகமுக்கிய காரணம் என்றால் மிகையல்ல. இதையுணர்ந்து வீரபாண்டிய இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்  வரலாற்றில் முதல்முறையாக 2020-இல் முதல் மகளிர் மநாட்டை நடத்தியதில் பெருமைகொள்கிறது. உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் இராஜகம்பள சமுதாய பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சிகொள்கிறோம்.


1977 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மகளிர் தினம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் தொழிலாளர் இயக்கங்களின் செயல்பாடுகளிலிருந்து முதன்முதலில் தோன்றியது.


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்திற்கான விதை 1908ல் போடப்பட்டது. நியூ யார்க் நகரில் 15 ஆயிரம் பெண்கள் பணி நேர குறைப்பு, தகுந்த ஊதியம், வாக்களிக்கும் உரிமை கோரி மாபெரும் பேரணி சென்றனர். ஒரு வருடம் கழித்து அமெரிக்க சோசியலிஸ்ட் கட்சி அந்த நாளை தேசிய மகளிர் தினமாக அறிவித்தது.1910இல் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற ‘சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு’ மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. “அனைத்துத் தேசிய இனங்களையும் சார்ந்த சோஷலிஸ்ட் பெண்கள் ஒரு தனிச் சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தைக் (Women’s Day) கடைப்பிடிக்க வேண்டும். சமூகப் பிரச்சினைகள் பற்றிய சோஷலிசக் கண்ணோட்டத்துடன், பெண்கள் பிரச்சினை அனைத்துடனும் வாக்குரிமைக் கோரிக்கையை இணைத்து விவாதிக்க வேண்டும்” என்கிற அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதான் சர்வதேச மகளிர் நாள் உருவாகக் காரணமாக அமைந்தது. அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்து, மகளிர் நாள் தீர்மானத்தை முன்மொழிந்தவர் கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரா ஜெட்கின்.


இந்த மாநாட்டில் மகளிர் நாளுக்கான தேதி இறுதிசெய்யப் படவில்லை. அதனால், 1911இலிருந்து பல நாடுகளில், பல தேதிகளில் ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்பட்டுவந்தது. ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சிக்கு எதிராக 1917 நவம்பர் 7 அன்று லெனின் தலைமையில் புரட்சி நடந்தது. அதற்கு முன்னோடியாக அந்த ஆண்டு மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்களின் புரட்சி தொடங்கியது. இதில் ஆண் தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். ரஷ்யப் பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூரும் வகையில் இனிமேல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று 1921இல் மாஸ்கோ நகரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலம் அமைப்பின் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதிலிருந்துதான் உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச உழைக்கும் மகளிர் நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.


குடும்பத்தை கட்டமைப்பதிலும்,சமூகத்தை வடிவமைப்பதிலும், வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க வைப்பதிலும் பெண்கள் முக்கியப்பாங்காற்றியுள்ளனர். மானிட சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த பெண்களின் சாதனைகளுக்கு உலகம் நன்றியோடு தலைவணங்க வேண்டும். பெண்களை மதிக்காத வீடும், நாடும் வளர்ச்சியை நோக்கிப்பயணிக்காது என்பதையுணர்ந்து செயல்பட வேண்டும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved