ஒரே மாவட்டம், ஒரே கல்லூரியில் தொடங்கி ஒரே நேரத்தில் நீதிபதிகளாக நியமனம் வரை....
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டதின் அடிப்படையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி, உச்சநீதிமன்ற கொலீஜியம் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிவந்த மேற்படி இருவரையும் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்தது. இதனடிப்படையில் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோரை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து நீதிபதி ஆர்.சக்திவேல் மற்றும் நீதிபதி பி.தனபால் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நேற்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கிடையே, ஒரே மாவட்டமட்டுமல்லாது ஒரே கல்லூரியைச் சேர்ந்த தோழர்கள் இருவரும் சட்டத்துறையில் பட்டம் பெற்றபின் ஒரே அறையில் தங்கி, ஒருசேர நீதிபதித் தேர்வுக்கு தயார் செய்து, போட்டித்தேர்வுகளில் கலந்துகொண்டு, ஒரே ஆண்டு முதலிரண்டு இடங்களைப்பெற்று நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டு, ஒரே நேரத்தில் உயர்நீதிமனற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு, தற்போது இருவரையும் கொலீஜியம் பரிந்துரை செய்ததின் அடிப்படையில் நிரந்தர நீதிபதிகளா நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற சுவாரஸ்ய தகவல் தெரியவந்துள்ளது. இதன் விவரம் வருமாறு,
நீதிபதி சக்திவேல் அவர்கள் ஜூலை 21, 1973 அன்று கரூர் மாவட்டத்தில் பிறந்தார். அரசுப் பள்ளிகளில் தனது ஆரம்பக் கல்வியை முடித்து, திருச்சியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர், 1998 இல் வழக்கறிஞர் வாழ்க்கையைத் தொடங்கினார்.
இதன்பிறகு, 2011 ஆம் ஆண்டு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் மாவட்ட நீதித்துறையில் சேர்ந்த இவர், பல இடங்களில் நீதிபதியாகப் பணியாற்றத் தொடங்கினார். தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூரில் கூடுதல் மாவட்ட நீதிபதி, தமிழ்நாட்டின் நிர்வாகத் தலைவர் மற்றும் அதிகாரப்பூர்வ அறங்காவலர் (AGOT), சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல், கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் முதன்மை மாவட்ட நீதிபதி போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
நீதிபதி தனபால், மார்ச் 5, 1974 அன்று கரூர் மாவட்டம் ஜல்லிவடநாயக்கன்புதூரில் பிறந்தார். 1998 ஆம் ஆண்டு திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று 1998 ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 2011 ஆம் ஆண்டு நீதித்துறைப் பணியில் சேர்ந்து, கூடுதல் மாவட்ட முன்சிஃப் ஆகவும், பின்னர் தர்மபுரியில் கூடுதல் துணை நீதிபதியாகவும் பணியாற்றினார். திருநெல்வேலியில் III கூடுதல் மாவட்ட நீதிபதி, II கூடுதல் மாவட்ட நீதிபதி (PCR) மற்றும் I கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.
மேலும், கடலூரில் முதன்மை மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் புதுச்சேரியில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். இறுதியாக, உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலாக கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெறும்வரை பணியாற்றினார்.
கல்லூரித் தோழர்கள் இருவரும் ஆரம்பம் முதல் இதுவரையிலான எல்லாப்படிநிலைகளையும் சமமாகக் கடந்து நிரந்தர நீதிபதி அந்தஸ்தைப் பெற்றார்களோ அதேபோல் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகவும் இருவரும் ஒருசேர தேர்வுசெய்யப்பட்டு நீதித்துறையில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கி நீதித்துறை வரலாற்றில் நீங்க இடம்பெற இயற்கை துணைபுரியட்டும் என்று வேண்டி, நாம் எல்லோரும் வாழ்த்துவோம்.

