திமுக ஒன்றிய பொறுப்பாளராக தாமரைச்செல்வன் நியமனம்!
'போதுண்டா சாமி, பொறந்தநாள் கண்டிருச்சு'ன்னு ஒரு பேச்சு வழக்கு உண்டு. ஒருவேலை அல்லது இலக்கை அடைவதற்குள் ஏற்படும் சிரமங்கள், தடைகள், ஒருகட்டத்தில் நடக்குமா? நடக்காதா?; முடிக்க முடியுமா? முடியாதா? என்று பல குழப்பங்கள் வந்து, இறுதியில் அப்பணியை செய்துமுடித்து நிம்மதிப்பெருமூச்சிட்டு சொல்லும் சொற்றொடர் இது. அந்தளவுக்குச் சற்றும் குறையாதது தான் திமுக-வில் கட்சிப்பதவிகளைப் பெருவது என்பதும். கட்சியில் கடைநிலைப்பதவியை அடைவதற்குக்கூட சாதிபலம், பணபலம், வாரிசு பலம் தாண்டி கொஞ்சம் அறிவுபலம், சித்தாந்த பலமும் தேவைப்படும். 1949-இல் தொடங்கப்பட்டு பவளவிழாக்காணும் இக்கட்சியில் தலைமுறை தலைமுறையாக தொண்டராக அரசியல் பிரவேசம் தொடங்கி தொண்டராகவே வாழ்ந்துமுடிந்தவர்கள் பலருண்டு.

இப்படியான ஒரு கட்சியில், அதுவும் இன்று மாநிலத்தை ஆளும்கட்சியாக உள்ள நிலையில், அக்கட்சியில் ஒன்றியச் செயலாளர் அந்தஸ்திலான பதவியை தனது கடின உழைப்பால் பெற்றுள்ளார் அனிமூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் வி.தாமரைச்செல்வன்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள பொம்மக்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இருபது வயதில் திமுக-வில் இணைத்துக்கொண்டு கிளைக்கழக பிரதிநிதியாக அரசியலில் அடியெடுத்து வைத்தவர், அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் திருச்செங்கோடு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளாராக நியமிக்கப்பட்டார்.

இளமைக்கே உரித்தான துடிப்போடும், துள்ளளோடும் கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்பட்ட தாமரைச்செல்வன், மாவட்ட நிர்வாகிகளின் பார்வைபட்டு, பாராட்டுபெற்று, அபிமானமும், ஆதரவும் பெற்றதோடு மட்டுமல்லாமல் நம்பிக்கையையும் பெற்றார். விளைவு, அடுத்த நான்கு ஆண்டுகளில் நாமக்கல் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து 2019-இல் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளாராக போட்டியிடும் வாய்ப்புப் பெற்றபோது, அதையும் வெற்றியாக்கி ஊராட்சி மன்றத் தலைவரானார்.
ஐந்தாண்டுகால அனிமூர் ஊராட்சிமன்றத் தலைவராக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட சாதனைகளுடன் விருதுகள் பலவென்று பொதுமக்களிடம் கட்சியின் செல்வாக்கு உயர தன் உழைப்பைத் தீனியாக்கினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 200 என்ற இலக்கை நிர்ணயித்துள்ள கட்சித்தலைவரின் முயற்சியை வெற்றிபெறச்செய்வதற்கான வியூகத்தின் அடிப்படையில், திமுக அமைப்புரீதியாக பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் புதிய மாவட்டம், ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் ஊராட்சி மன்றத்தலைவராக பணியாற்றி மக்களின் பேரன்பு, மாவட்டச் செயலாளர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கை கரணமாக நாமக்கல் மேற்குமாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்செங்கோடு தெற்கு ஒன்றியக் கழக பொறுப்பாளராக வி.தாமரைச்செல்வன் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுகழகம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்றுவரை இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் மூன்றாம், நான்காம் தலைமுறையாக பயணித்து பல தியாகங்கள் செய்தவர்கள் உண்டு.
இருந்தபோதிலும், கிளைக்கழக செயலாளர், ஊராட்சி மன்றத் தலைவர் தாண்டிய வாய்ப்புகளை கட்சி வழங்கியதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிய அளவிலான பொறுப்புகள் வழங்கப்படுவதுண்டு. மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், கட்சி அமைப்புகளில் மாற்றங்கள் செய்தாகவேண்டிய கட்டாயத்திலுள்ள அரசியல் கட்சிகள் விசுவாசிகளையும், நம்பிக்கையாளர்களையும் தேடுகிறது. அதன்பலனாக, காலம்காலமாக கழகத்திற்காக தியாகம் செய்த சமூகங்களுக்கு எந்தவகையிலும் குறைவில்லாமல் தியாகம் செய்த கம்பளத்தாருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் இதுவரை கிட்டாத நிலையில், தாமரைச்செல்வன் போன்ற இளம் தலைவருக்கு ஒன்றிய பொறுப்பாளர் பதவி தற்போது வழங்கப்பட்டுள்ளது சமுதாயத்திற்கு சற்று ஆறுதல் தருவதாக உள்ளது. இதுபோன்ற வாய்ப்புகளை தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கட்சிக்காக உழைக்கும் கம்பளத்தார்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்பதே சமுதாயத்தின் விருப்பம்.

திருச்செங்கோடு தெற்கு ஒன்றியப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வி.தாமரைச்செல்வன் அவர்களின் பணிசிறக்க வாழ்த்துவதோடு, தலைமையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மென்மேலும் உயர வாழ்த்துகிறோம். வி.தாமரைச்செல்வனை இப்பொறுப்பிற்கு பரிந்துரை செய்த மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கம்பளத்தாரின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

