எம்.பி. பதவியே போனாலும் பாஞ்சாலங்குறிச்சி வருவேன் - துரைவைகோ ஆவேசம்!
இராஜகம்பளத்தாரின் தெய்வமாக விளங்கும் அன்னை வீரசக்கதேவி ஆலயத்தின் 69-ஆம் ஆண்டு சித்திரைத்திருவிழா கடந்த 9 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதிவரை மூன்று நாட்கள் பாஞ்சாலங்குறிச்சியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் நாடுமுழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான கம்பளத்தார்கள் கலந்துகொண்டு அன்னையின் அருள்பெற்றனர்.
திருவிழாவின் முதல்நாளான 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ கலந்துகொண்டு சக்கதேவி அன்னையையும், அருகிலுள்ள கோட்டையில் வீற்றிருக்கும் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனாரையும் வழிபட்டார். அதன்பிறகு கூடியிருந்த பொதுமக்களிடையே உரையாற்றிய துரைவைகோ, அன்னை வீரசக்கதேவியை வழிபட்டால் பதவி பறிபோய்விடும் என்று அரசியல் வட்டாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள பொய்மாயையை தகர்த்தெரிந்து, எம்.பி பதவியே பறிபோனாலும் பாஞ்சாலங்கிறிச்சி வருவேன் என்று கூட்டம் அதிர துரைவைகோ முழங்கினார். துரைவைகோ அவர்கள் பாஞ்சாலங்குறிச்சியில் ஆற்றிய உரையின் முழுவிபரம் வருமாறு,

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போர் முழக்கம் எழுப்பி போரிட்டு தூக்கு கயிறை முத்தமிட்டு வீரமரணம் எய்தியவர் நம் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
நம் மன்னரின் குலதெய்வம் ஸ்ரீ வீரசக்கதேவி ஆலயத்தின் 69 ஆம் ஆண்டு விழாவில் நான் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
வீரபாண்டியகட்டபொம்மன் அவர்களை நாம் நினைவுகூரும்போது, நம் நினைவுக்கு வருவது அவரது வீரம் மட்டுமல்ல, அவரது அறநெறி மட்டுமல்ல, அவரது தியாகம் மட்டுமல்ல அவர் ஊட்டிய சமூக நல்லிணக்கமும் தான் நினைவுக்கு வருகிறது.

ங்கிலேயர்களின் பீரங்கிகளை, துப்பாக்கிகளை எதிர்கொண்டு அவர் போருக்குச் செல்லும் போது அவருக்கு துணையாக இருந்தது அவருடைய வீரவாள் மட்டுமல்ல, ஒருபக்கம் பகதூர் வெள்ளையத்தேவன், இன்னொரு பக்கம் வீரன் சுந்தரலிங்கம், மற்றொரு பக்கம் தானாதிபதி பிள்ளை ஆகியோரோடுதான் போருக்கு என்றார்.
அன்றைய காலத்திலேயே நாட்டின் விடுதலைக்காக சமூக ஒற்றுமையை வித்திட்டவர் நம்முடைய மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள்.
இன்றைக்கு சாதி மத பிளவுற்ற இந்த சமுதாயத்தில் அவர் ஊட்டிவளர்த்த சமூக நல்லிணக்கத்தை நாம் பேணிக்காக்க வேண்டும். மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும்; ஒரு மனிதரை அவர் என்ன சாதி என்ன மதம் என்று பார்க்காமல் அவரது நற்குணங்களைக் கொண்டு நாம் எடைபோட வேண்டும். இதை தான் அன்றே மன்னர் நமக்கு கற்றுக்கொடுத்தார்.

இன்று நமது வீரபாண்டிய கட்டபொம்மனின் வம்சாவளியான உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும், நல்ல பொருளாதார நிலையை அடைய வேண்டும், அதன்பின் இந்த சமுதாயத்தில் பின் தங்கியவர்களை முன்னேற்ற வேண்டும். அதுதான் நாம் செய்ய வேண்டிய கடமை.
தலைவர் வைகோ அவர்களை நாம் வாழும் கட்டபொம்மன் எனறுதான் சொல்லவேண்டும். இந்த மண்ணுக்காக, தென் தமிழ்நாட்டின் விடுதலைக்காக உயிர் துறந்த நம்முடைய மன்னர் கட்டபொம்மன் அவர்களின் நினைவாக தபால்தலை வெளியிட வேண்டும் என்று முதன்முதலில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் வாழும் கட்டபொம்மன் தலைவர் வைகோ ஆவார்.
அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு அன்றைய முதலைச்சர் கலைஞர் அவர்கள் கட்டபொம்மனின் தபால்தலை வெளியிட வாழும் கட்டபொம்மன் தலைவர் வைகோ அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அதுமட்டுமல்ல தலைவர் வைகோ அவர்களின் 61 ஆண்டு கால பொதுவாழ்க்கையில், பொடா சிறைவாசக்காலம், கொரோனா பெருந்தொற்றுக்காலம் இதனைத் தவிர்த்து, அக்டோபர் 16 ஆம் நாள் மன்னர் உயிர் துறந்த அந்த நாளில் தூக்கு கயிற்றில் ஏற்றப்பட்ட கயத்தாறுக்கு சென்று இன்றல்ல நேற்றல்ல 61 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்துபவர் தான் நமது தலைவர் வைகோ அவர்கள்.
அதுமட்டுமல்ல, நமது மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசான குருசாமி நாயக்கர் அவர்களுக்கு தூக்கு தண்டனை நிச்சயம் செய்த பிறகு, அவரை தூக்கு கயிறிலிருந்து காப்பாற்றியவர் வாழும் கட்டபொம்மன் தலைவர் வைகோ அவர்கள்.
அதேபோல, பல ஆண்டுகளுக்கு பிறகு ராஜ கம்பள சமுதாயத்திலிருந்து ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியவர் நமது தலைவர் வைகோ அவர்கள்.
நேற்றல்ல இன்றல்ல என்றைக்கும் உங்களுக்கு அரணாகவும், பாதுகாவலனாகவும் தலைவர் வைகோ அவர்களும், இந்த துரை வைகோவும், மறுமலர்ச்சி திமுகவும் இருக்கும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைக்கு 69 ஆம் ஆண்டு விழா; வீரசக்கதேவி அம்மனின் ஆண்டுவிழா. நான் அந்த கோவிலுக்கு சென்று அம்மனிடம் வேண்டும் போது ஒன்றே ஒன்றைத்தான் கேட்டேன். இந்த சமுதாய மக்களுக்கு நல்வழிகாட்டுங்கள். இந்த சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் வேண்டினேன்.
என்னிடம் பலரும் சொன்னார்கள், பாஞ்சாலங்குறிச்சிக்கும் தஞ்சை பெரியகோவிக்கும் போக கூடாதென்று, போனால் பதவி பறிபோய்விடும் என்று. அதற்கெல்லாம் வாழும் கட்டபொம்மனின் மகன் பயந்திடுவேனா..? மாட்டேன்!
இந்த பாஞ்சாலங்குறிச்சி மண்ணுக்கு வருவதனால் என் எம்பி பதவி போனால் பரவாயில்லை; நான் பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவேன். கட்டபொம்மனுக்கு அஞ்சலி செலுத்துவேன், அவரது சிலைக்கு மாலை அணிவிப்பேன். வீரசக்கதேவி கோவிலுக்கு சென்று வழிபடுவேன். பதவி போனாலும் பரவாயிலை; பரவாயில்லை என்று உறக்க சொல்வேன்.
என் உரையை முடிப்பதற்கு முன்பாக உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். சாதி மதங்களை கடந்து நாம் சிந்திக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை பற்றி இன்றைக்கு திராவிட இயக்கங்கள் கூறுகின்றன. ஆனால் அதை அன்றே வித்திட்டவர்தான் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன். சாதி மதங்களை கடந்து மனிதர்களாக நாம் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு துரைவைகோ பேசினார்.
முன்னதாக சித்திரைத்திருவிழாவிற்கு வருகைதந்த துரைவைகோ எம்.பிக்கு ஆலௌஅக்குழுவின் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அதேபோல் 2023 இல் நடைபெற்ற முப்பெரும்விழாவிற்கு வாழ்த்துச்செய்தி வழங்கியமைக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்து பொன்னாடை அணிவித்து முப்பெரும்விழா மலரை வழங்கினார். அப்போது சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜு, ஆலோசகர் கே.லோகநாதன், ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி, ஆறுமுகசாமி, மதிமுக மாநில இளைஞரணி துணைசெயலாளர் பூப்பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

