🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழக மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்கும் முயற்சியை உடனே கைவிடுக - விடுதலைக்களம்


தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை அபகரிக்கும் முயற்சியை உடனடியாக நிறுத்துக – தமிழக அரசுக்கு விடுதலைக்களம் கோரிக்கை:-

தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் 11-ம் வகுப்பில் மாணவர்களின் சேர்க்கைக்கான பாடப்பிரிவுகள் மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டு,  மொழிப்பாடங்களுக்கான ஒன்று மற்றும் இரண்டு ஆகிய பகுதிகள் தவிர்த்து, எஞ்சியுள்ள மூன்றாம் பகுதியில் முக்கிய பாடங்களுக்கென நான்கு பிரிவுகளை உருவாக்கி அவை ஒவ்வொன்றிலும் மொத்தம் 300 மதிப்பெண்கள் இருக்கும் வண்ணம் மூன்றே பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும் தலா 100 மதிப்பெண்கள்) மட்டுமே இருக்கும் வகையில் புதிய பிரிவுகள் உருவாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்,

பகுதி 1 : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்பாடங்கள்.

பகுதி 2 : ஆங்கிலம்.

பகுதி 3 : முக்கியப் பாடங்கள் ( Core Subjects).

பிரிவு I : கணிதம், இயற்பியல், வேதியியல். 

பிரிவு II: இயற்பியல், வேதியியல், உயிரியல்.

பிரிவு III: கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்.

பிரிவு IV: வேதியியல், உயிரியல், மனையியல்.

என்ற வகையில் புதிய பாடப்பிரிவுகள் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கவே ஆறு பாடங்களாக இருந்தவை தற்போது ஐந்தாகக் குறைக்கப்பட்டு மொத்த மதிப்பெண்கள் 600க்குப் பதில் இனி 500 ஆக இருக்குமென்றும் இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் உயர் கல்வியில் பயில விரும்பும் படிப்பிற்கான (Course) தேர்வினை 11-ம் வகுப்பில் சேரும்போதே இறுதி செய்துகொண்டு அதற்கேற்ப கூடுதல் பாடங்களைப் படிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது. மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ பள்ளிக்கல்வி மாணவர்களின் மன அழுத்தம் போக்கவே பாடங்களைக் குறைத்திருப்பது போன்ற மாயத்தோற்றம் இருந்தாலும், அதன் உள்நோக்கம் சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது.

தற்பொழுது வழக்கத்திலுள்ள நடைமுறைப்படி கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் பிரிவைத் தேர்வு செய்யும் மாணவர்கள் மருத்துவம் அல்லது பொறியியல் ஏதாவது ஒன்றில் கட்டாயம் இடம்பெறமுடியும் என்ற நிலையில், மருத்துவமா அல்லது பொறியியலா என்பதை பதினைந்து வயது மாணவனைத் தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திப்பது, தொடக்கத்திலிருந்தே மாணவர்களையும், பெற்றோர்களையும் பதட்டத்தில் வைத்து உளவியல் ரீதியான தாக்குதல் தொடுக்கும் முயற்சியேயின்றி வேறில்லை. மருத்துவம் படிக்க விரும்பி பிரிவு-II தேர்ந்தெடுப்பவர்கள் , மருத்துவ இடம் கிடைக்காத பட்சத்தில் பொறியியல் பக்கமே வரமுடியாத சூழலை அரசு உருவாக்குகிறது. 

ஏற்கனவே “நீட்” தேர்வின் மூலம் அரசுப்பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்துக்கொண்ட அரசு, தற்பொழுது புதிய பாடப்பிரிவை நடைமுறைப்படுத்த முயல்வதின் மூலம் மீதியுள்ள மாணவர்களின் கனவையும் பறித்துக்கொள்ள முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அரசு தொடர்ந்து கல்வித்துறையில் மாற்றங்கள் என்ற பெயரில் தடைகளை ஏற்படுத்தி வருவது சாமானிய மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கல்வியை தட்டிப்பறிக்க முயல்கிறதோ என்ற ஐயத்தை விதைக்கிறது.

சமூகநீதிக்கெதிரான இந்த முடிவை தமிழக அரசு உடனே இத்திட்டத்தைக் கைவிட்டு, ஏற்கனவே உள்ள நடைமுறையில் மாணவர் சேர்க்க நடத்த முன்வரவேண்டும். சமுதாய நலனுக்காக இயங்கும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து வலுவாக குரல்கொடுக்க வேண்டும் என்று விடுதலைக்களம் கேட்டுக்கொள்கிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved