வாக்குக்கு பெயர்போன கம்பளத்தாருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர்? - சுவரொட்டியால் பரபரப்பு
இராஜகம்பள சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலைவைக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த 2019-ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மாண்புமிகு.எடப்பாடி.பழனிச்சாமி அவர்கள், அக்கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு.கடம்பூர்.ராஜு அவர்களும் மாவீரன் சிலை சென்னையில் அமைக்கப்படும் என்று பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில் செப்'14-இல் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுகுறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாதது கம்பளத்து சமுதாய மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதனைத்தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ரீதியாக கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர், விருதுநகர் வருவதையொட்டி, தமிழ்நாடு இராஜகம்பளத்தார் முன்னேற்றக்கழகம் சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்கட்சியின் நிறுவன தலைவர் திரு.G.ரவி நாயக்கர் (இவரைபற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) புகைப்படம் சேர்த்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், முதல்வர் கம்பளத்தாருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.