தி.மு.க மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராக ஒன்றியக்குழு உறுப்பினர் நியமனம் - கம்பளத்தார் மத்தியில் உற்சாகம்.
கோவை கிழக்கு மாவட்ட திமுகழக பொறுப்புக்குழு உறுப்பினராக மதுக்கரை ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.K.மாசிலாமணி - 9942185828 (இவரைப்பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இது இராஜகம்பள சமுதாய மக்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய சமுதாயப்பிரமுகர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கோவை மாவட்டம் வடக்கு பகுதியான மேட்டுப்பாளையம் தொடங்கி காரமடை, கோவையின் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள், கிணத்துக்கடவு ஒன்றியம், பொள்ளாச்சி, ஆனைமலை என கோவை மாவட்ட தென்பகுதி எல்லையான வால்பாறை வரை, மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தபொழுதும், அரசியல் கட்சிகளில் கிளைக்கழக செயலாளர், ஊராட்சி செயலாளர் என்ற அளவிலேயே பதவி வகித்து வருவது நீண்டகாலமாக சமுதாய மக்களுக்கு பெறுத்த ஏமாற்றமாக இருந்து வந்ததாக குறிப்பிடுகிறார். சமீப காலமாக அரசியல் கட்சியிலுள்ளவர்கள் மாவட்ட அளவில் பொறுப்புகளை பெற்றுவருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளவர், அரசியலில் அடுத்த அடியை எடுத்துவைப்பதற்கு சமுதாயத்திற்கு எழுபது ஆண்டுகள் தேவைப்பட்டிருப்பதாக வேதனையுடன் தெரிவித்தார். தாமதமாகிவிட்டபொழுதிலும் வரும் தலைமுறை அரசியல்வாதிகள் இக்குறையை போக்குவார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியவர், மற்ற மாவட்டங்களில் இருப்பவர்களும் தங்கள் வெளிவட்டார தொடர்புகளை விரிவுபடுத்திக்கொண்டு, அடுத்தடுத்த நிலைகளுக்கு உயரவேண்டும் என்ற வேண்டுகோளை அனைத்துக்கட்சி பிரமுகர்களிடமும் கோரிக்கையாக வைத்துள்ளார்.
மாவட்ட பொறுப்புக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.K.மாசிலாமணி பேசுகையில், 25-ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் பணியாற்றி வருவதாக தெரிவித்தவர், தன்மீது நம்பிக்கை வைத்து இப்பதவியை வழங்கியுள்ள கட்சியின் தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சண்முகசுந்தரம், மாவட்ட பொறுப்பாளர் திரு.சேனாதிபதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
மேலும், விவசாயிகள் பிரச்சினை, நீட், புதியகல்விக்கொள்கை, இடஒதுக்கீடு, கூட்டுறவு நகைக்கடன் வட்டி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டரின் தாறுமாறான விலை ஏற்றம் என மத்திய,மாநில அரசுகளின் தொடர் மக்கள் விரோதப்போக்கால், சாமானிய மக்களின் வாழ்க்கை கடுமையாக பதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டவர், இதுகுறித்து மக்களிடன் திண்ணை பிரச்சாரம் மூலம் கொண்டு சென்று, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, தளபதியார் தலைமையில் திமுகழக அரசமைக்க பாடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.
செய்தி உதவி: புயல்.குமார்.