🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வீரத்தின் அடையாளம் மாவீரன் ஊமைத்துரை - வீரவணக்கநாள் கட்டுரை.

ஊமைத்துரை நினைவுநாள் 16.11.1801

ஊமைத்துரையைப் பற்றி மிகவும் நேர்மையான முறையில் மிகச்சிறந்த ஆய்வை செய்து கட்டபொம்மன் வரலாற்று ஆய்வாளர் முனைவர் வே.மாணிக்கம் அவர்கள் "ஊமைத்துரை வரலாறு" என்ற புத்தகத்தை தந்துள்ளார். அவருடைய புத்தகத்தில் இருந்து மாவீரனைப் பற்றி ஒரு சில வரிகள்...

அறிவும் ஆற்றலும் நிரம்பிய ஊமைத்துரை குறுகிய காலத்தில் எதிரிகள் வியக்கும் வண்ணம் திட்டமிட்டுத் திறமையாகப் போராடினார். எனினும் இறுதியில் அவர் தோல்வியடைந்தார். இதற்குரிய காரணங்கள் பல. ஊமைத்துரையின் கூட்டணியில் காடல்குடி, குளத்தூர், கோலார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், பாவாலி, விருப்பாட்சி, தளி, திண்டுக்கல், சிவகங்கை, ஆகிய பாளையக்காரர்கள் இணைந்திருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் நின்று கும்பினியார் மீது தாக்குதல் தொடுக்கவில்லை, 02.02.1801 முதல் 24.05.1801 வரை கும்பினியாருடன் ஊமைத்துரை தனித்து நின்று பாஞ்சாலங்குறிச்சியில் போரிட்டார், பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்ததும் தன்னுடைய கடுமையான முயற்சி மூலம் சேகரித்த ஆயுதங்களையும், சிறு பீரங்கிகளையும், வெடி மருந்துகளையும், உணவுப் பொருட்களையும், உடைமைகளையும் விட்டு விட்டு வெறும் கையோடு மருதுபாண்டியரிடம் சென்றார். சிவகங்கையில் 02.06.1801 முதல் 24.10.1801 வரை நடைபெற்ற போரும் பின்னர் விருப்பாட்சியில் நடைபெற்ற போரும் தோல்வியில் முடிந்தன. ஊமைத்துரையின் கூட்டணியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவகங்கையில் போரைத் தொடங்கியிருந்தால் போரின் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும்.

ஆங்கிலேயரிடமிருந்த புதிய ஆயுதங்களும் அவர்களுடைய வெற்றிக்கு ஓர் காரணம் எனலாம். அவர்கள் சக்திவாய்ந்த 22 பவுண்டு, 18 பவுண்டு பீரங்கிகளையும் ஏராளமான அளவில் வெடிமருந்தையும் வைத்திருந்தனர். பாஞ்சை வீரர்கள் கும்பினி வீரர்களை நேருக்கு நேர் சந்தித்து போரிடுவதற்காக முன்னேறி வரும்போது நெருங்க முடியாதவாறு பீரங்கித் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஆங்கிலேயரிடம் முறையான பயிற்சி அளிக்கப்பட்ட நிலையான படைவீரர்கள் இருந்தனர், மேலும் எட்டையபுரத்தார், புதுக்கோட்டை அரசர், தஞ்சை சரபோஜி மன்னர், திருவனந்தபுரம் அரசர், ஆகியோர் கும்பினிக்கு துணையாகப் படைகளை அனுப்பி உதவினர். அவர்கள் ஆலோசனையும் வழங்கினர்.

வெள்ளையர் தங்கள் எதிரிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். அக்னியு பாஞ்சாலங்குறிச்சியில் 24 மணி நேரமும் இடைவிடாது தாக்குதல் நடத்தினார். புரட்சியாளர்களையும் அவர்களுடைய தந்தை, மகன், சகோதரன், உறவினர் என்று அனைவரையும் அவர்கள் ஒரே இடத்தில் தூக்கிலிட்டுக் கொன்றனர். விலங்குகளை வேட்டையாடுவதைப் போல அவர்கள் புரட்சியாளர்களை வேட்டையாடினர். ஆனால் ஊமைத்துரையினது போரில் மனிதாபிமானமும், இரக்கமும் இருந்தன. போரில் ஆட்களைக் கொல்லுவதை விட ஆயுதங்களை பறிப்பதிலேயே நாட்டமாக இருந்தார். தூத்துக்குடி கோட்டையில் இருந்த வீரர்களிடம் ஆயுதங்களை மட்டும் பறித்துக் கொண்டு அவர்களை உயிரோடு பிழைத்துப் போகும்படி விட்டதும், பக்கெட்டின் மனைவியின் வேண்டுகோளை ஏற்று அவரை விடுதலை செய்ததும், போரில் காயமடைந்த கும்பினி வீரர்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியதும் ஊமைத்துரையின் மனிதாபிமானம் கலந்த போருக்குச் சான்றுகளாகும்.

ஊமைத்துரை சாதி,மத, இன உணர்வுகளைக் கடந்த ஓரு கூட்டணியை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டினார். பல ஆயிரக்கணக்கான வீரர்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி விரும்பி வந்து ஊமைத்துரையிடம் இணைந்து தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். வெள்ளையரை நாட்டை விட்டு விரட்டுவதே தங்கள் ஒரே நோக்கமாகக் கொண்டு ஊமைத்துரையின் அணியினர் செயல்பட்டனர்.

02.02.1801-இல் தொடங்கிய ஊமைத்துரையின் போராட்டம் 16.11.1801-இல் முடிவடைந்தது. இத்தகைய நீண்ட போரை ஆங்கிலேயர் அந்தக் காலகட்டத்தில் வேறு எங்கும் சந்திக்கவில்லை. வேறு எங்கும் இல்லாத அளவு வெள்ளையர் இப்போரில் பெரும் இழப்பிற்குள்ளாயினர். பாஞ்சையில் நடைபெற்ற முதல்நாள் போரில் மட்டும் ஆங்கிலேயர் பக்கம் நாற்பத்தொன்பது வீரர்களும் பதின்மூன்று அதிகாரிகளும் மடிந்தனர். இருநூற்று நாற்பத்து நான்கு பேர் காயம் அடைந்தனர். மைசூர் போரில் ஆங்கிலேயர் சிந்திய குருதியை விட, ஊமைத்துரையுடன் நடத்திய போரில் மிகுதியாக குருதி சிந்தினர் என்று பதிவேடுகள் குறிப்பிடுகின்றன, ஊமைத்துரை கைது செய்யப்பட்ட பின்னரே தென்னாட்டில் எழுந்த புரட்சி முடிவுக்கு வந்தது என்று மேஜர் இன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இந்தியாவின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த மாவீரன் ஊமைத்துரையின் நினைவு நாளில் அவரின் வீரத்தை, தியாகத்தை, நினைத்துப்  போற்றுவோம்.


தொகுப்பு:

பாஞ்சை போர்முழக்கம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved