ஊமைத்துரையின் உயிர் காத்தவள்!!! - வீரவணக்கநாள் கட்டுரை.
ஊமைத்துரையின் உயிர் காத்தவள்!
1801 பிப்ரவரி 2 அன்று இரவு பாளையங்கோட்டைச் சிறையை, மருது சகோதரர்களும் மக்களும் இணைந்து உடைத்து ஊமைத்துரையை விடுதலை செய்தனர். பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்த ஊமைத்துரையை அப்பகுதி மக்கள் எழுச்சியோடு வரவேற்றனர். பாஞ்சாலங்குறிச்சியில் இருந்த தங்கள் கோட்டையை வெள்ளையர் இடித்துத் தள்ளியிருப்பதைக் கண்ட ஊமைத்துரை, அக்கோட்டையை மீண்டும் எழுப்ப எண்ணினார்.
கருப்பஞ்சாறு, பதநீர், முட்டை, கரும்புச்சக்கை ஆகியவற்றைக் கொண்டு கோட்டை கட்டப்பட்டன. 500 அடி நீளமும், 300 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டதாகக் கோட்டை அமைந்தது. கொத்தளங்கள், மறைவிடங்கள், போர்க் கருவிகளைப் பதுக்கி வைக்கும் இடங்கள் என அமைந்த அந்தக் கோட்டை ஆறு நாட் களில் கட்டி முடிக்கப்பட்டது.
ஆம்! வெள்ளையர் எதிர்ப்பிலும், ஊமைத்துரை மீது கொண்ட பற்றிலும் அந்தப் பகுதி மக்கள் இணைந்ததன் விளைவால் எழுந்தது புதிய கோட்டை!
1801 பிப்ரவரி 8 அன்று வெள்ளையர் படையுடன் பாஞ்சாலங்குறிச்சி விரைந்தனர். புதிய கோட்டையைக் கண்டு அதிர்ந்தனர். அதனால் திரும்பிச் சென்று பெரும் படையுடன் பாஞ்சாலங்குறிச்சிக்கு வரத்திட்டமிட்டனர்.
அதே நேரத்தில் வெள்ளையர் ஆதிக்கத்திலிருந்த தூத்துக்குடியை ஊமைத்துரை கைப்பற்றினார். 'பர்க்கட்' என்ற வெள்ளையர் தளபதியைக் கைது செய்து பாஞ்சாலங்குறிச்சிக்குக் கொண்டு வந்தார். தளபதி பர்க்கட் கைது செய்யப்பட்டதை அறிந்த ஆங்கிலேயர் அலறினர். பர்க்கட்டை எப்படி விடுவிப்பது என்று ஆலோசித்தனர்.
அப்போது பர்க்கட்டின் மனைவி மேரி வினோவா பாஞ்சாலங்குறிச்சிக்கு விரைந்தாள். ஊமைத்துரையைச் சந்தித்துக் கண்ணீர் வடித்து, தன் கணவனை விடுதலை செய்ய வேண்டினாள். ஆங்கிலேயர்களால் அண்ணன் கட்டபொம்மனையே இழந்தார், பாஞ்சாலங்குறிச்சியைப் பறி கொடுத்தார். இருந்தும் ஒரு பெண்மணி கண்ணீர் விடுவதைக் கண்டு ஊமைத்துரை கலங்கினார். மேரி வினாலோவின் விருப்பப்படி அவள் கணவனை விடுதலை செய்து, இருவருக்கும் விருந்து கொடுத்து மரியாதையோடு ஊமைத்துரை அனுப்பி வைத்தார்.
1801 மார்ச் 31 அன்று எட்டப்பனின் தூண்டுதலால் மேஜர் மெக்காலே தலைமையில் ஆங்கிலேயரின் பெரும்படை பாஞ்சாலங்குறிச்சிக்கு விரைந்தது. வழியிலேயே ஊமைத்துரை படை வெள்ளையரை எதிர்த்து வீரச்சமர் புரிந்தது. அதன்பின் நவீன ஆயுதங்களைக் கொண்டு வெள்ளையர், பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்ப்பதில் ஈடுபட்டனர். கோட்டையின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஆங்கிலப்படையின் உயிர், ஊமைத்துரை படையால் பறிக்கப்பட்டது. பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் ஊமைத்துரையின் வீரர்கள் தாங்கிய வெட்டரிவாளும், வேல்கம்பும் வெற்றி கண்டன.
ஆம்! ஆயுதங்களைவிட தேசபக்தியும், நெஞ்சுறுதியும் வலிமைமிக்கது என்று மண்ணின் மைந்தர்கள் நிரூபணம் செய்தனர்.
1801 மே 21 அன்று கர்னல் அக்னியூ பெரும்படையுடன் வந்து மெக்காலேயுடன் சேர்ந்தான். ஒருவழியாக கோட்டையை வெள்ளையர் தகர்த்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பெண்கள் சிலர் வெள்ளையரைக் கொன்றனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். ஊமைத்துரையும் சில வீரர்களும் கோட்டையிலிருந்து வெளியேறினர். ஊமைத்துரை சிக்காததால் ஆங்கில அதிகாரிகள் ஆத்திரம் கொண்டனர். ஊமைத்துரையைத் தேடி ஒவ்வொரு கிராமமாக அலைந்தனர். ஆங்கிலேயருக்கு எட்டப்பன் துணை நின்று ஊமைத்துரையைத் தேடி அலைந்தார்.
கர்னல் அக்னியூ தலைமையில் சென்ற ஆங்கிலப்படை ஊமைத்துரை இருந்த இடத்தைக் கண்டு பிடித்தது. ஊமைத்துரை இருக்கும் படை வீரர்களைக் கொண்டு வெள்ளையரை எதிர்த்தார். இரண்டு தரப்பிலும் சேதங்கள் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் உடம்பெல்லாம் வெட்டுப்பட்டு ஊமைத்துரை மண்ணில் சாய்ந்தார். உயிரற்றும், உயிருக்குகப் போராடிக் கொண்டும் பலர் ஊமைத்துரை அருகில் கிடந்தனர்.
இந்த வேளையில் முத்தம்மாள் என்பவளுக்கு அவளுடைய மகன் யுத்தக்களத்தில் சாகடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. அவள் களத்திற்கு ஓடினாள். இறந்தும், உயிருக்குப் போராடிக் கொண்டும் கிடந்த குவியலில் தன் மகனைத் தேடினாள்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தன் மகனைக் கண்டாள். அவனை மடியில் கிட த்தி முத்தம்மாள் கதறினாள். அப்போது அவளுடைய மகன், "அம்மா! நான் பிழைக்க மாட்டேன்... இன்னும் சிறிது நேரத்தில் என் உயிர் பிரிந்து விடும். அதனால் என்னைக் காப்பாற்றும் முயற்சியைக் கை விடு! அதோ! படுகாயமுற்றுக் கிடக்கும் என் சாமியைக் காப்பாற்று!" என்று ஊமைத்துரையைச் சுட்டிக்காட்டி விட்டு தாயின் மடியிலேயே அவன் உயிர் விட்டான்.
இறந்த மகனை முத்தம்மாள் தரையில் கிடத்தினார். மகன்யிட்ட ஆணையை நிறைவேற்ற முயன்றாள். படுகாயமுற்ற ஊமைத்துரையைத் தன் வீட்டுற்குத் தூக்கிச் சென்றாள். முத்தம்மாள் கிராமத்தை வெள்ளையர் படையும், எட்டப்பன் படையும் முற்றுகையிட்டன. தங்கள் மன்னனை எதிரிகள் பார்த்து விடுவார்களோ என்று முத்தம்மாள் கவலைப்பட்டாள். இறுதியில் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. மஞ்சளை அரைத்து ஊமைத்துரை உடல் முழுவதும் முத்தம்மாள் பூசினாள். வெள்ளைத் துணியால் ஊமைத்துரை மேனியை மூடினாள். வேப்பிலைக் கொத்துகளை வீட்டு வாசலில் செருகினாள். பக்கத்து வீட்டுப் பெண்களை எல்லாம் அழைத்து வந்து, ஊமைத்துரையைச் சுற்றி அமரவைத்து ஒப்பாரி வைத்தாள்.
வெள்ளையர் முத்தம்மாள் வீட்டை நெருங்கினர். வீட்டுக்குள்ளிருந்து வரும் ஒப்பாரிச் சத்தம் கேட்டு வாசலிலேயே நின்று விசாரித்தனர். அதற்கு முத்தம்மாள், "எனக்கு ஒரே மகன். அவனும் அம்மை நோய்க்குப் பலியாகி விட்டான்" என்று சொல்லி கதறினாள். அம்மை நோய் என்றதும் தேடி வந்த வெள்ளையர் திரும்பி ஓடினர். பல நாட்கள் முத்தம்மாள் பாதுகாப்பிலேயே இருந்த ஊமைத்துரை உடல்நலம் தேறியதும் முத்தம்மாளின் உதவிக்கு நன்றி சொல்லிவிட்டு, அந்த ஊரைவிட்டு வெளியேறினார். ஊமைத்துரை வெள்ளையரிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று முத்தம்மாள் அவளுக்குத் தெரிந்த எல்லாத் தெய்வங்களிடமும் வேண்டிக் கொண்டாள்.
ஆம்! தன் ஒரே மகனைக் களத்தில் பலி கொடுத்தும், அவனுடைய வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக ஊமைத்துரைக்கு மருத்துவ உதவி செய்து, பாதுகாத்து வழியனுப்பினாள் முத்தம்மாள்.
ஆம்! முத்தம்மாள் போன்ற வீரத்தாய்கள் இந்த மண்ணில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றி, இந்த மண்ணின் மகத்துவத்தைப் பேச வைக்கிறார்கள்!
(இன்று ஊமைத்துரையை வெள்ளையர்கள் தூக்கிலிட்ட நாள்)
பதிவு: தோழர் K. Jeevabharathy Ramamoorthy