7.5% உள்ஒதுக்கீடு பலன் பெற்றோம் முதல்வரே!!! - கோடானகோடி நன்றிகள்...
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள குண்டுமல்ல நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக்கூலி தொழிலாளி திரு.குமார்-திருமதி.பார்வதி அவர்களின் மகன் கு.பூபதி, தமிழக அரசின் கிராமப்புற மருத்துவ உள்ஒதுக்கீடு சட்டப்படி வெளியான தரவரிசைப்பட்டியலில் மாநில அளவில் 5-வது இடம் பெற்று மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார் என்ற மகிழ்ச்சிக்குரிய செய்தி சமுதாய மக்களிடையே மகிழ்ச்சியையும், மாணவ-மாணவியருக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு அறிமுகமாகியபின் கம்பளத்தார் சமுதாயத்திலிருந்து மருத்துவம் செல்வது முற்றிலும் தடைபட்டிருந்த நிலையில், தமிழக அரசு சமீபத்தில் கொண்டுவந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு சட்டப்படி, கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவரான கு.பூபதி அவர்களுக்கு இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அரசின் உள் ஒதுக்கீட்டுப்பலன் உடனடியாக கிராமப்புற எழை விவசாயி மகனுக்கு கிடைத்திருப்பது இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் அனைவருக்கும் உணர்த்துகிறது.
சமூகநீதி மண் என்று அழைக்கப்படும் தமிழக மண்ணிலிருந்து, தமிழக அரசின் தொலைநோக்குப்பார்வையாலும், கடையனுக்கு கடையனுக்கும் கல்வியை கொண்டு சேர்க்கவேண்டும் என்ற உயரிய சித்தாந்தத்தின் அடிப்படையில், சாதாரண விவசாயக்கூழித்தொழிலாளியின் மகன் மருத்துவம் படிக்கச்செய்யும் அளவில், மிகுந்த போராட்டத்திற்கிடையே, உள் ஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவந்து இது சாமானியனின் அரசு, சமூகநீதிக்கான அரசு என்று பறைசாற்றிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும், தமிழக அரசு இச்சட்டத்தை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.