உள் ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் பெற்றார் கரூர் மாணவர் N.கோகுலன்!
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி-ஈசநத்தம் அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.நாகராஜ்-திருமதி.கவிதா தம்பதியினர், கோவை மாவட்டம் துடியலூர் அருகே கதிர் நாயக்கன்பாளையம் கிராமத்தில் சிறிய மளிகை கடையும், தண்ணீர் கேன் சப்ளையும் செய்துவரும் சாமானிய குடும்பத்தைச்சேர்ந்தவர்களின் அன்புமகன் N.கோகுலன், தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசுப்பள்ளிப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.50% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின் மூலம் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார் என்ற மகிழ்ச்சிக்குரிய செய்தி சமுதாய மக்களிடையே மகிழ்ச்சியையும், மாணவ-மாணவியருக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு அறிமுகமாகியபின் கம்பளத்தார் சமுதாயத்திலிருந்து மருத்துவம் செல்வது முற்றிலும் தடைபட்டிருந்த நிலையில், தமிழக அரசு சமீபத்தில் கொண்டுவந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு சட்டப்படி, துடியலூர் அருகேயுள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவரான N.கோகுலனுக்கு மருத்துவ இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அரசின் உள் ஒதுக்கீட்டுப்பலன் உடனடியாக கிராமப்புற ஏழை தண்ணீர் கேன் விநியோகம் செய்பவரின் மகன் முதல்தலைமுறை பட்டதாரியாக மருத்துவத்துறையில் பெற்றிருப்பது இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் அனைவருக்கும் உணர்த்தும்.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றுள்ள மாணவர் N.கோகுலன் அங்கு சேர்வதற்காக இன்று (19.11.2020) தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடியில் கோகுலனுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுக்க த.வீ.க.பொ.பண்பாட்டுக்கழக மாவட்ட தலைவரும், பிரபல தொழிலதிபருமான வலசை.திரு.கண்ணன் அவர்களிடம் சென்னை சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டதைத்தொடர்ந்து, அவரும் தேவையான உதவிகளை செய்துதர விரைந்துள்ளார். தமிழக அளவில் 5-வது இடம் பெற்ற கவுந்தப்பாடி மாணவர் கே.பூபதி சென்னை எம்.எம்.சி-யில் இடம் பெற்றுள்ளார்.
சமூகநீதி மண் என்று அழைக்கப்படும் தமிழக மண்ணிலிருந்து, தமிழக அரசின் தொலைநோக்குப்பார்வையாலும், கடையனுக்கு கடையனுக்கும் கல்வியை கொண்டு சேர்க்கவேண்டும் என்ற உயரிய சித்தாந்தத்தின் அடிப்படையில், சாதாரண விவசாயக்கூழித்தொழிலாளியின் மகன் மருத்துவம் படிக்கச்செய்யும் அளவில், மிகுந்த போராட்டத்திற்கிடையே, உள் ஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவந்து இது சாமானியனின் அரசு, சமூகநீதிக்கான அரசு என்று பறைசாற்றிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும், தமிழக அரசு இச்சட்டத்தை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும், தொட்டிய நாயக்கர் சமுதய மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஓபிசி மக்களுக்கு 1990-இல் சமூகநீதிக்காவலர் திரு.வி.பி.சிங் அவர்கள் பாரத பிரதமராக இருந்தபொழுது, மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி அகில இந்திய அளவில் மத்திய அரசின் நேரடி அரசுப்பணிகளிலும்,இரயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கோடிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்களிலும், கல்வியிலும் 27% இடங்களை வழங்க உத்திரவிட்டும், ஆண்டுகள் 30 கடந்தநிலையிலும் இதுவரை வெறும் 12% சதவீதத்திற்கும் குறைவான இடங்களே நிரப்பப்பட்டுள்ளது. இந்த அவலநிலை நீக்கி இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட, அடிப்படை உரிமையான 27% இடஒதுக்கீடு பெற்று, அனைத்து மத்திய அரசுப்பணிகளிலும், மத்திய அரசின் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களிலும் நமது தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவ-மாணவியரும் அமர வேண்டும் என்ற அடிப்படையில், அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக்குழுவுடன் (AI OBC CC) இணைந்து, விடுதலைக்களம், சென்னை, வீ.க.பொ.சமுதாய நலச்சங்கம் மற்றும் நாமக்கல் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை போன்ற கம்பளத்தார் சமுதாய அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இடஒதுக்கீட்டில் கல்வி பெற்று முதல்தலைமுறை பட்டதாரிகளாகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றுபவர்கள், மென்பொருள் வல்லுனர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் இடஒதுக்கீட்டின் பலனை மனதில் நிறுத்தி, அதன்பலனை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் வகையில் குழந்தைகளுக்கும், சமுதாயத்தினருக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.