வெற்றிகரமாக நடைபெற்ற DNT சமுதாய மக்களின் உரிமை முழக்க போராட்டம் !
இன்று (14.12.20) காலை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற DNT உரிமை முழக்கப் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி உரிமை முழக்கமிட்டனர்.
இதில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.கருணாஸ் கலந்துகொண்டு, போராட்டக்காரர் அமர்வதற்கு பந்தல் கூட அமைக்க அனுமதி மறுத்த தமிழக அரசை வன்மையாக கண்டித்தார். மேலும் DNT சமுதாய மக்களின் கோரிக்கையை அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திரைப்பட இயக்குனர் திரு.கௌதமன் பேசுகையில் பூர்வகுடி மக்களின் உரிமைக்கான போராட்டம் எங்கு, எப்பொழுது நடந்தாலும், முதல் ஆளாக தான் களத்துக்கு வந்து போராட தயாராக இருப்பதாக தெரிவித்தவர், ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரத்திற்காக பாடுபட்ட DNT சமுதாயத்திற்கான இடஒதுக்கீட்டை போராடினாலும் வழங்காத அரசு, உயர்சாதியினருக்கான இடஒதுக்கீட்டை கேட்காமலேயே கொடுப்பதாக கடுமையாக சாடினார்.
இந்தப்போராட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் மத்திய அரசின் முன்னாள் அதிகாரி திரு.இராமராஜ் அவர்களின் தலைமையில் சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவை, இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் தொட்டிய நாயக்கர் நலச்சங்கம் சார்பில் தலைவர் திரு.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் பலர் கலந்து கொண்டனர். விடுதலைக்களம் சார்பில் துணைப்பொதுச்செயலாளர் திரு.சிங்கராஜ் ராஜகம்பளம் கலந்துகொண்டார்.