திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுடன் தொட்டியநாயக்கர் சமுதாய தலைவர்கள் சந்திப்பு!
வரும் 2021- சட்டமன்றத் தேர்தலில் இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர்களுக்கு சட்டமன்றத்தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட ஐந்து அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (22.12.2020) செவ்வாய்கிழமை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை "இராஜ கம்பளத்தார் சமுதாய கூட்டமைப்பு" சார்பாக, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், மத்திய அரசின் பொதுப்பணித்துறையின் ஓய்வு பெற்ற அதிகாரியுமான திரு.இராமராஜ் அவர்களின் தலைமையில் சென்ற குழுவினர் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
மேலும், வரும் ஜனவரி மாதம் 03-ஆம்தேதி மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாளை அண்ணா அறிவாலயத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோளும் வைக்கப்பட்டது. இக்கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக திமுக தலைவர் தெரிவித்தார். இக்குழுவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.S.இராதாகிருஷ்ணன், திரு.சீனிவாசன் மற்றும் திரு.ஆறுமுகசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.