🔴 LIVE | முப்பெரும் விழா 2023


துணைமுதல்வர் இல்லம் முற்றுகை! வலுக்கும் போராட்டம்! - போராட்ட களத்தில் தொட்டிய நாயக்கர்கள்...

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சாதிகளை உள்ளடக்கிய சீர்மரபின பழங்குடிகளுக்கு (DNT) சமுதாயத்தினருக்கு ஒரே சாதிச்சான்றிதழ் வழங்கக்கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கடந்த 14.12.2020 முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதல்கட்டமாக கடந்த 14-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தை நடத்திய இச்சங்கத்தினர், அரசு தங்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் டிசம்பர் 25-ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.


டிசம்பர் 25-ஆம் தேதி மதுரையில் தொடங்கும் போராட்டம் தொடர்ந்து மூன்று நாட்கள் முற்றுகைப்போராட்டம் நடத்துவதாக சீர்மரபினர் நலசங்கம் அறிவித்திருந்த நிலையில், அவசர அவசரமாக கலந்துரையாடல் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தது அரசு தரப்பு. இதனையடுத்து கடந்த 22-ஆம்தேதி சென்னை எழிலகத்தில் நடைபெற்ற 68 சமுதாயப்பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் சீர்மரபினர் நலசங்க ஆணையாத்தின் தலைவர் திரு.சோ அய்யர் IAS (Rtrd) தலைமையில் நடைபெற்றது. இதில் 68 சமுதாயப் பிரதிநிதிகளும் தங்கள் குறைகளை எடுத்துக்கூறிய நிலையில், அரசு தரப்பில் பேசியவர்கள், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.


ஏற்கனவே பலமுறை அரசுக்கு கோரிக்கைவிடுத்தும் செவிசாய்க்காத அரசு, தொடர் போராட்டத்தை நீர்த்துப்போக செய்யவே கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததாக குற்றம் சாட்டும் சீர்மரபினர் நலச்சங்கம், ஏற்கனவே திட்டமிட்டபடி கடந்த 25-ஆம் தேதி முதல் போராட்டத்தை மதுரையில் தொடங்கியது. மதுரை சொக்காவூரணியில்  500-க்கும் மேற்பட்டோர் திடீர் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, அரசு கைது செய்து சிறைவைத்தது. இப்போராட்டத்தில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் 60-க்கும் மேற்பட்டோர் தலைவர்.திரு.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் கலந்துகொண்டனர். 


இரண்டாம்நாள் போராட்டதினமான 26-ஆம் தேதி மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் கலந்து கொண்டதுடன், சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் போராட்ட நிதியாக ரூ.10000/- வழங்கப்பட்டது. இதனிடையே மதுரை போராட்டத்தின் இறுதிநாளான நேற்று தேனி பெரியகுளத்திலுள்ள துணைமுதல்வர் திரு.பன்னீர்செல்வத்தின் வீட்டை அதிரடியாக முற்றுகையிட்ட சீர்மரபின நலசங்கத்தினர் 80-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இப்போராட்டத்தில் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஏற்பாட்டில் தேனி மாவட்டம் ஆனைமலயான்பட்டினத்தைச்சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் திரு.ஜக்குசாமி தலைமையில் கலந்துகொண்டு கைதாகினர்.


இந்தப்போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று காலை 10 மணியளவில் சென்னை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெறும் போரட்டத்தை சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலசங்கத்தின் மண்டலப்பொறுப்பாளர் திரு.யுத்தீஸ்வரன் தலைமையேற்று நடத்துகிறார். இதேபோல் வரும் 29-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் போராட்டத்தை விடுதலைக்களம் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் தலையேற்று நடத்துகிறார்.

மாநிலம் முழுவதும் தீவிரமடைந்துள்ள DNT போராட்டத்தில், தொட்டிய நாயக்கர் சமுதாய உறவுகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வென்றெடுக்க உதவிடுமாறு சமுதாய அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved