தமிழக முதல்வர் கயத்தாறு வருகை! நிறைவேறுமா சென்னையில் சிலை அமைக்கும் கோரிக்கை?
தமிழக முதல்வர் கயத்தாறு வருகை...
தமிழக முதல்வர் மாண்புமிகு.எடப்பாடி.பழனிச்சாமி அவர்கள் 2021-சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முன்தினம் (27.12.2020) சென்னையில் தொடங்கினார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர், 03.01.2021-இல் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகைதரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எற்கனவே கொரோனா ஆய்வுப்பணிக்காக தூத்துக்குடி வருகையின்பொழுது மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அவரது சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மாவீரன் கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாளான ஜனவரி 03-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகைதரும் தமிழக முதல்வர், அன்று காலை 8 மணிக்கு கயத்தாறு மணிமண்டபத்திலுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதி செய்யும்வகையில் இன்று கயத்தாறு மணிமண்டபத்திற்கு வருகைதந்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர்.இராஜு அவர்களும், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் ஆகியோர் பார்வையிட்டு முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் முதல்வரின் கயத்தாறு வருகையின்பொழுது விமர்சையாக வரவேற்பது குறித்து நாளை (29.12.20) காலை அமைச்சரின் இல்லத்தின் சமுதாய அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம் நடத்தவிருப்பதாக த.வீ.க.பொ. பண்பாட்டுக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் வலசை திரு.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலைவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்திருந்தநிலையில், இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகைதரும் தமிழக முதல்வர் வரும் சட்டமன்றத்தேர்தலுக்கு முன் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு இராஜகம்பளத்தார் சமுதாயத்தினரிடையே ஏற்பட்டுள்ளது.
தகவல் உதவி:
திரு.மாரிச்சாமி, பாளையங்கோட்டை.