கட்டபொம்மன் நேரடி வாரிசுகளுக்கு அரசுப்பணி! உதவிக்கரம் நீட்டிய தமிழக முதல்வர்.
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் நேரடி வாரிசுதாரராக இருப்பவர் திரு.வீமராஜா (எ) திரு.ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை அவர்கள். தமிழகம் முழுவதும் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவீரன் கட்டபொம்மனை தொடர்ந்து சமுதாய மக்களுக்கு நினைவுபடுத்தி வரும் பெரும்பணியை செய்பவர், தலைப்பாகை கட்டிய தோற்றத்தால் குழந்தைகளாலும், இளைஞர்களாலும் வாழும் கட்டபொம்மனாக அறியப்படுபவர் திரு.வீமராஜா அவர்கள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திரத்திற்காக முதல்முழக்கமிட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட வெள்ளையர்கள், அவரைச் சார்ந்தவர்களையும் வேறோடும், வேறடி மண்ணோடும் அழிக்கத்துணிந்தது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டபொம்மன் சந்ததியினர், 200 ஆண்டுகள் கழிந்து விட்டபோதிலும் இன்னும் முழுமையாக மீட்டெடுக்க முடியாமல் திணறிவருகிறார்கள். சுதந்திரம் பெற்றபின் அமைந்த அரசுகள் அவ்வப்பொழுது உதவிகள் செய்தாலும் சோதனைகள் முழுமையாக விட்டபாடில்லை.
இதற்கிடையே, நேரடி வாரிசுதாரரான திரு.வீமராஜா அவர்கள் தன் வாரிசுகளான J.முருகதேவி மற்றும் J.கணபதிராஜா ஆகியோருக்கு சிறப்பு அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டுமென்று பத்தாண்டுகளுக்கும் மேலாக துணைஜனாதிபதி, முதல்வர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் வலியுறுத்தி வந்தார். இவரின் கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத நிலையில், இந்த மண்ணிற்காக மாவீரன் சிந்திய இரத்தம் மதிக்கப்பட வேண்டும் என்று நினைத்த அரசுத்துறையில் பணியாற்றிய சில நல் உள்ளங்கள், இவரின் மனுவை தொடர்ந்து அரசுக்கு அனுப்பி வந்தனர். மாவீரன் வணங்கிய சக்கதேவியின் அருளாலும், திருச்செந்தூர் முருகனின் ஆசியாலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்த திரு.சந்தீப் நந்தூரி அவர்களின் கருணையாலும், தொல்லியல் துறையின் மண்டல அதிகாரியான திரு.ஒலி மாலிக் அவர்களின் தீவிர முயற்சியாலும், தமிழக அரசு திரு.வீமராஜா அவர்களின் வாரிசுகளுக்கு அரசுப்பணி வழங்க முன்வந்தது.
இதனடிப்படையில், நேற்று (08.01.21) காலை தமிழக முதல்வரை தலைமைச்செயலகத்தில் சந்தித்த திரு.வீமராஜா அவர்களின் முன்னிலையில் அவரது வாரிசுகளுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார் முதல்வர். அப்பொழுது தமிழக தொல்லியல்துறை அமைச்சர் மாண்புமிகு மாஃபா.பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கட்டபொம்மனின் நேரடி வாரிசுகளுக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு, இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.