🔴 LIVE | முப்பெரும் விழா 2023


3-கோடி மக்களுக்கெதிரான சதி முறியடிக்கப்பட்டது! பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் முற்றுகைப்போராட்டம் முழுவெற்றி!!!

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலில் மொத்தமுள்ள 109 சாதிகளுக்கு 20% இடஒதுக்கீட்டை மாநில அரசு வழங்கிவருகிறது. இதில் DNT பிரிவிலுள்ள 68 சாதிகள் தவிர 41 பிற வகுப்பினரும் உள்ளனர். இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும் 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டம் என்ற பெயரில் கடந்த மாதம் இரயில்களை மறித்தும், கல்வீசியும் தாக்குதல் நடத்தினர்.இது சமூக ஊடகங்களில் பெரும் விவாதப்பொருளானது. பா.ம.க.போராட்டத்தில் ஈடுபட்ட மூன்றே மணி நேரத்தில் பா.ம.க தலைவர்களை நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் தமிழக முதல்வர். அதனைத்தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தேவையான புள்ளி விபரங்களை சேகரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.


தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எல்லா தரப்பினரும் ஆதரவும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். ஆனால் இந்த ஆணையம் தனது பணியை துவக்கும் முன்பே, வரும் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து அரசியல் கட்சிகள் சித்து விளையாட்டை தொடங்கின. அதன் ஒருபகுதியாக MBC பட்டியலில் உள்ள 109 சாதிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் 20% இடஒதுக்கீட்டில், வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும் 13% இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்ததாக தகவல் வெளியாயின. இதற்கு துணைமுதல்வர் திரு.O.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் பரவியதும், அதற்கு மறுப்பு தெரிவித்து துணைமுதல்வர் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேற்கு மாவட்டத்தையும், வடமாவட்டத்தையும் குறிவைத்து அரசியல் காய்நகர்தல்களை மேற்கொண்டு வரும் ஆளும்கட்சியின் மேலிடம், கூட்டணிக்கட்சியின் கோரிக்கையை நிறைவேற்றுவதின் மூலம் அக்கட்சியையும், வாக்குகளையும் தன்பக்கம் திருப்பமுடியும் என்று நம்பியது. 


இதற்கு ஏதுவாக தான் அமைத்த ஆணையம் பணியைத்துவங்கும் முன்பே, அவசர அவசரமாக எந்த புள்ளி விபரமும், தரவுகளும் இல்லாதநிலையில் உள்ஒதுக்கீடு வழங்கும்பணியை நிறைவேற்றிட தீவிரம் காட்டியது ஆளும்கட்சி மேலிடம். 


இதற்கு ஏதுவாக மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையைப் பெறுவதற்காக, அவசர அவசரமாக ஆணையக்கூட்டம் நேற்று (21.01.21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை அறிந்துகொண்ட MBC-பட்டியலில் உள்ள வன்னியர் அல்லாத 108 சமுதாயத்தினர் நேற்று ஆணையக்கூட்டத்தை நடத்தக்கூடாது என்று முற்றுகைப்போராட்டம் நடத்தினர். முதலில் போராட்டக்குழுவினரை சந்திக்க முடியாது, போலீசார் அவர்களை கைது செய்யவேண்டும் என்று மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் கூறியதாக போராட்டக்காரர்களிடம் போலீஸ் தரப்பு தெரிவித்தது. ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் வன்னியர் சமுதாய ஆதிக்கம் உள்ளதாக பிற சமுதாயங்கள் கூறிவரும் நிலையில், ஆணையத்தின் தலைவரும் அதேபோக்கை கடைபிடிப்பதை ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியதையடுத்து, போராட்டக்குழுவினரை சந்திக்க அனுமதித்து, கோரிக்கை மனுவைப்பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆணையக்கூட்டத்தில் உள்ஒதுக்கீடு குறித்து எடுத்த முயற்சிகளுக்கு பிற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத்தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


முன்னதாக 108-சமுதாயத்தைச்சேர்ந்த போராட்டக்குழு பிரதிநிதிகள், நேற்று காலை 7 மணியிலிருந்து முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து மனு அளிக்க முயன்றபொழுது போலீசார் தடுத்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்குவந்த ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் போராட்டக்குழுவினரை சமாதானப்படுத்தி, முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். ஆனால் முதல்வர் போராட்டக்குழு பிரதிநிதிகளை சந்திக்காமல் வெளியே புறப்பட்டு சென்றார்.


நேற்று சரியான நேரத்தில் முற்றுகைப்போராட்டத்தை அறிவித்து 108 சாதிகளைச்சேர்ந்த 3-கோடி மக்களுக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலையை முறியடித்த அனைத்து சமுதாய சொந்தங்களுக்கும் சீர்மரபினர் நல சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved