இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டுக்கள்! நீளும் உதவிக்கரங்கள்!
கடந்த மாதம் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிளான 1500 மீட்டர் தடகளப்போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்ற நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த M.சந்துரு-வுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. சாதாரண கூலித்தொழிலாளியின் மகனாக, வெறும் காலோடு, தார்சாலைகளில் பயிற்சி செய்து, முறையான பயிற்சியாளர் மற்றும் ஷூ போன்ற எந்த உபகரணமுமின்றி சாதனை படைத்த சந்துரு, வரும் 24-ஆம் தேதி நேபாள நாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகி வருகிறார்.
பொருளாதார சூழலை காரணம் காட்டி பெற்றோர்கள் தயக்கம் காட்டிய நிலையில், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.02.21) சந்துரு-வுக்கு பாராட்டு விழாவும், நிதியுதவி வழங்கப்பட்டது. சமுதாய முக்கியஸ்தர்களும் சந்துரு-வை நேபாள போட்டியில் கலந்துகொள்ள ஊக்குவித்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று (08.02.21) கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்த ப்ரியா கேட்டரிங் உரிமையாளரும், தொழிலதிபருமான திரு.பிரகாஷ்தேவ் குடும்பத்தினர் சந்துரு மற்றும் குடும்பத்தினரை கோவைக்கு அழைத்து விருந்தளித்து உபசரித்து, நேபாளத்தில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்துகொள்வதற்கு குடும்பத்தினர் சார்பில் நிதியுதவியளித்து ஊக்கப்படுத்தினர்.