அதிகாரமில்லா இனம் ஆண்மையற்ற இனமன்றோ? அந்தியூர் மாநாடு குறித்து திரு.இராதாகிருஷ்ணன்
விடுதலைக்களம் சார்பில் ஈரோடு மாவட்டம், அந்தியூரில் பிப்ரவரி மாதம் (28-02-2021) ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 3 மணி அளவில் நடைபெறவுள்ள தொட்டிய நாயக்கர் அரசியல் திருப்புமுனை மாநாட்டில் சமுதாய மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு, வருங்கால தலைமுறையினருக்கு வலுவான அரசியல் அடித்தளம் அமைத்திட வேண்டும் என்று சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் திரு.S.இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொட்டிய நாயக்கர் சமுதாய உறவுகளுக்கு அவர் விடுத்துள்ள அழைப்புச் செய்தியில்,
1371-இல் கம்பிளி தேசத்திலிருந்து குமாரகம்பணன் தலைமையில் வராகக்கொடியேந்தி புறப்பட்ட விஜயநகரப்படை, மதுரையை ஆண்டுவந்த முகமதியர்களை வெற்றிகொண்டு, சங்கம் வளர்த்த மதுரையில் வராகக்கொடியை பறக்கவிட்ட மாவீரர்கள் தொட்டிய நாயக்கர்கள்.குமாரகம்பணனில் தொடங்கி தமிழகத்தில் பாளையக்காரர் முறையை தோற்றுவித்த விஸ்வநாத நாயக்கரின் வழித்தோன்றல்களாக, மதுரை பேரரசின் கீழ் உருவான 72 பாளையங்களில், 50-க்கும் மேற்பட்ட பாளையங்களை ஆட்சி செய்தது தொட்டிய நாயக்கர் இனம். 700 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர், ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வரும்வரை ஏறக்குறை 300 ஆண்டுகளுக்கு மேலாக இம்மண்ணில் அதிகாரம் செலுத்தியவர்கள் என்பது வரலாறு சொல்லும் செய்தி.
இம்மண்ணில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டியதில் கம்பளத்தாரின் பங்கு மிக அதிகம். தெலுங்கை தாய்மொழியாகக்கொண்ட விஜயநகர சாம்ராஜ்ஜியம் அமைந்தபொழுது, இம்மண்ணில் வாழ்ந்த பூர்வகுடிகள் மீது மொழி திணிப்பையோ, பண்பாட்டுத்திணிப்பையோ மேற்கொள்ளாத பெருந்தணக்காரர்கள் தொட்டிய நாயக்கர்கள்.பண்டைய மன்னர் ஆட்சிகளில் பிடிபட்ட மண்ணிலிருந்து செல்வங்களையும், உடைமைகளையும், பெண்களையும் அபகரித்து, சூறையாடிச்செல்லாமல்,மேட்டை தரிச்சாக்கி, மண்ணை வளமாக்கி, பாசனம் பெருக்கி, கோபுரம் கட்டி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என மண்ணின் மைந்தர்களுக்கு பாளையக்காரர் பட்டம் சூட்டி அதிகாரம் பகிர்ந்தளித்து, குடிகளை பாதுகாத்து நிர்வாகத்திறமையை நிலைநாட்டியவர்கள் கம்பளத்தார்கள்.
ஆயுதம் தரித்து கும்பினியர் படை சூண்டபொழுது, பாளையக்காரர்களை திரட்டி கும்பினிகளை மண்ணிலிருந்து விரட்டியடிக்க சமர் செய்ததில் தொட்டிய நாயக்கர்களின் பங்கு காலத்தால் அழியாதது. மாவீரன் வெள்ளையத்தேவன், தானாதிபதிப்பிள்ளை, மாவீரன் சுந்தரலிங்கம் என சாதி-மத பேதமின்றி சகலருக்கும் வாய்ப்பளித்து சமத்துவம் பேனிய மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனை ஈன்றது கம்பளத்தார் இனம். ஊமைத்துரைக்கு உயிர்கொடுக்கும் நட்புடன் மருது சகோதரர்கள், நாடிழந்து வாடிவந்த மங்கை வேலுநாச்சியாரை, சொந்த மகள் போல மடிசாய்த்து, வீரமங்கை வேலுநாச்சியாராக்கி, மீண்டும் அரியணையேற்றிய வரலாற்றுச் சாதனைக்கு விதைபோட்ட விருப்பாச்சி கோபால் நாயக்கரின் சரித்திரம் பேசும் உறவுக்கு உயிர்கொடுத்த தொட்டிய நாயக்கர்களின் மாண்பை. திப்பு சுல்தான், தீரன் சின்னமலை, தேவதானப்பட்டி பூசாரி நாயக்கர், மணப்பாறை லட்சுமி நாயக்கர், நத்தம் லிங்கம நாயக்கர் ஆகியோரோடு கூடிக்கட்டிய தீபகற்ப கூட்டணிக்கு சக்கரவியூகம் அமைத்து சாதித்துக்காட்டியவன் கம்பளத்து விருப்பாச்சி. தென்னாட்டில் மட்டுமல்ல கொங்குநாட்டிலும் தொட்டியரின் வாள்சுழன்று தலையிழந்து புதைபட்ட வெள்ளையரின் நடுகல்லில் எத்திலப்பநாயக்கரின் வீரம் என இந்திய வரலாற்றின் கம்பளத்தாரின் சரிதம் மிக நீண்டநெடிய பக்கங்களைக் கொண்டது என்றால் மிகையல்ல,என தொட்டிய நாயக்கர்களின் வரலாற்றுப்பெருமைகளை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திர இந்தியாவில் புகழ்மிக்க போர்க்குடிகளில் ஒன்றான கம்பளத்தார் இனம், ஜனநாயகம் மலர்ந்தபின் அரசியல், நிர்வாக அதிகாரம் ஏதுமின்றி நிற்கதியாய் நிற்பது வேதனையிலும் வேதனை. கடந்த 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில், இதுவரை ஒருசிலரே சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளதும், இதுவரை ஒரு எம்பி கூட கம்பளத்தார் சமுதாயத்திலிருந்து வரவில்லை என்பதும், கம்பளத்தார்கள் ஜனநாயக அரசியலை இன்னும் கற்றுத்தேறவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஒரு இனம் அதிகாரமற்று இருப்பது ஆண்மையற்று இருப்பதற்குச்சமம். ஆயிரமாயிரம் ஆண்டுகள் போர்க்களத்தில் வாள்சுழற்றி வந்த இனம், ஆண்மையற்ற இனமாக எப்படி இருக்கமுடியும்? ஜனநாயகம் வந்தபின் வீரம் விடைபெற்று, விவேகம் முளைத்த பின், காலத்தை கணிக்காமல், பழம்பெருமை பேசி பாழாய் போனது நிஜமா? வீண்பெருமை பேசி வீணாய் போனதுதான் கனவா? என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.
மதி இன்றியா மண்ணை வென்றோம். அறிவின்றியா ஆயிரம் ஆண்டுகள் அகிலம் ஆண்டோம். ஒருநூற்றாண்டு ஓய்வெடுத்தது போதும், எழுந்துவ எம்மினமே என அழைக்கும் விஜயநகரப்பேரரசி கங்காதேவியின் குரல் உம் காதுகளில் விழவில்லையா கம்பளத்தாரே என்று கேட்டுள்ளார் திரு.இராதாகிருஷ்ணன்.
அந்திமாலைப் பொழுதில்
அமணமலைக்குன்றிலிருந்து
அன்றொருத்தி ஆணையிட்டால்....
வீழ்ந்தது மதுரையென
வீறுகொண்டு புறப்பட்ட
விஜயநகர விதைகள் நாம்....
ஆண்டுகள் ஆயிரம்போனாலென்ன
அரசியல் அதிகாரம் வென்றெடுக்க
அந்தியூரில் அணிசேர்வோம் வாரீர்... வாரீர்...
என தொட்டிய நாயக்கர் எழுச்சி மாநாட்டிற்கு அனைவரும் வருக என்று அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.