நீதிகேட்டு தமிழக முதல்வரிடம் முறையிடுவோம்- தலைவர் திரு.பழனிச்சாமி அறிக்கை.
![](https://thottianaicker.com/img/post/thumbimage/2021/02/19/1613715405.jpg)
இராஜகம்பளத்து உறவுகளுக்கு வணக்கம்.
பிப்- 21ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி கபிலர்மலைக்கு தமிழக முதல்வர் அவர்கள் வருகை தர உள்ளார்கள்.ஏற்கனவே கடந்த மாதம் நாமக்கல், முல்லம்பட்டியில் (பாப்பிநாயக்கன்பட்டி)க்கு தமிழகமுதல்வர் வருகைதந்தபொழுது, நாம் வலியுறுத்தி போராடிவரும் DNT கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார் என்று ஆளும்கட்சி சார்பில் பேசிய தலைவர்கள் நம்பிக்கை அளித்திருந்தனர். இதனால் முதல்வர் கலந்துகொண்ட அக்கூட்டதிற்கு தொட்டிய நாயக்கர் சமுதாயம் சார்பாக பெரும்கூட்டத்தை கூட்டி முதல்வருக்கு ஆதரவு தெரிவித்தோம்.ஆனால் கூட்டத்தில் பேசிய முதல்வர், டிஎன்டி கோரிக்கை பற்றி எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்கள். இது அங்கு கூடியிருந்த நம் சொந்தங்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. முதல்வரின் பாராமுகத்தால் 68 சமுதாய மக்களும் தொடர்ந்து போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
அதன்பிறகு பல்வேறுகட்ட தொடர்போராட்டங்களை நடத்திக்கொண்டு வரும் அதேவேளையில், அமைச்சர் பெருமக்களுக்கும், ஐஏஎஸ் மட்டத்திலான அரசு அதிகாரிகளுக்கும் DNT கோரிக்கை சார்ந்த எல்லா ஆவணங்களையும், சட்ட ஆதாரங்களையும் வழங்கியுள்ளோம். இதுதவிர, தேசிய DNT நலவாரியத்தலைவர் மதிப்பிற்குரிய திரு.பிகுராம்ஜி இதாதே அவர்களும் தமிழகத்தில் வாழும் 2கோடி சீர்மரபின பழங்குடி மக்களுக்கு DNT என்று ஒற்றைச்சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற பரிந்துரையை தமிழக அரசுக்கு கடிதம் மூலம் வழங்கியுள்ளார். மேலும் இக்கடிதத்தில், மத்திய அரசு சமர்ப்பித்துள்ள 2021-22 நிதிநிலை அறிக்கையில் DNT மக்களுக்கு SEED என்ற சிறப்பு திட்டத்தின் பலன்களை பெறுவதற்கு இந்த ஒற்றைச்சான்றிதழ் பேருதவி புரியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வளவு ஆதாரங்கள், நியாயங்கள், பரிந்துரைகள் இருந்தும், என்ன காரணத்தினாலோ DNT சமுதாயத்தை ஆளும்கட்சி தொடர்ந்து புறக்கணிப்பு செய்துவருவது வேதனையாக உள்ளது. அதேவேளையில் மத்திய அரசு தன்சொந்த நிதியை ஒதுக்கி, DNT மக்கள்தொகை பற்றிய புள்ளிவிபரங்களை திரட்டி 31.12.2020-க்குள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டபொழுது, தமிழக அரசு மத்திய அரசின் வேண்டுகோளை நிறைவேற்றக்கூடாது, அப்படி நடந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவர் திரு.இராமதாஸ் அவர்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விட்டதை ஏற்றுக்கொள்ளும் வகையில், மத்திய அரசின் உத்தரவை நிறைவேற்றாமல், 2-கோடி மக்களின் நலனை கருத்திகொள்ளாமல், மருத்துவர் அறிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு நடந்து கொள்வது DNT மக்களுக்கு வருத்தமாக உள்ளது. மேலும் மருத்துவர் திரு.ராமதாஸ் அவர்கள் ஒரு அறிக்கை விட்டால் அமைச்சர்கள் நேரில் சென்று சமாதானம் செய்கிறார்கள், போராட்டம் நடத்தினால் ஒருசில மணித்துளிகளில் முதல்வரே நேரடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனால் கடந்த ஆறுமாதமாக 68 சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தொடர்போராட்டம் நடத்தியும் முதல்வர் கண்டுகொள்ளவேயில்லை.
ஒருவேளை ஆளும்கட்சிக்கு தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர், வீரபோயர், முத்தரையர், முக்குலத்தோர் உள்ளிட்ட 68 சமுதாய வாக்குகள் தேவையில்லையா? கடந்த பாராளுமன்றத் தேர்தலில் உசிலம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தானே கேட்கிறோம். முதல்வரின் வாக்குறுதியை இதுவரை நிறைவேற்ற முடியாமைக்கு நியாயமான விளக்கமாவது அளியுங்கள், நாங்கள் அமைதியாக சென்று விடுகிறோம் என்று சமூக நீதி கேட்டு கபிலர்மலை வருகைதரும் முதல்வரிடம் முறையிடுவோம்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலின்பொழுது மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைத்துத் தருவேன் என்று முதல்வர் வாக்குறுதி அளித்தார். கடம்பூர் திரு.இராஜூ போன்ற அமைச்சர் பெருமக்களும் வாக்குறுதி அளித்தனர், இதுவரை நிறைவேற்றவில்லை. மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலையணிவிக்க முதல்வர் வருகைதரவிருப்பதாக பலமுறை அறிப்பு செய்தார்கள், நடக்கவேயில்லை. கடந்த ஜனவரி-03-இல் கயத்தாறுக்கு முதல்வர் வருகைதர விருப்பதாக அறித்து கடைசி நிமிடத்தில் இரத்து செய்தார்கள். கயத்தாரிலிருந்து 3-கிமீ தூரத்தில் முதல்வர் இருந்தபொழுதும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியை இரத்து செய்தது கம்பளத்தார்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் நாங்கள் இதுகுறித்தெல்லாம் பெரிய அளவில் கவலைகொள்ளவில்லை. நமக்கு உயிர்நாடி பிரச்சினையாக இருப்பது இடஒதுக்கீடு, DNT பிரச்சினைகளே. இதில் தான் நம் குழந்தைகளின் எதிர்காலமுள்ளது. ஏற்கனவே நிலபுலங்களை இழந்துவிட்ட நமக்கு, கல்வி மட்டுமே நம் குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. அதை நமது குழந்தைகளுக்கு பெற்றுத்தர DNT என்ற ஒற்றைச்சான்றிதழே பேருதவியாக இருக்கும்.
நாங்கள் தமிழக முதல்வரை இன்னும் நம்புகிறோம். அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அவரது கடமை. நிறைவேறும்வரை தொடர்ந்து அவருக்கு நினைவுபடுத்துவது நமது கடமை. அந்தக்கடமையை நிறைவேற்ற நாம் அனைவரும் பெருந்திரளாக ஒன்றுகூடி கபிலர்மலை வருகைதரும் முதல்வரிடம் வலியுறுத்துவோம். அனைவரும் கபிலர்மலை திரண்டு வருக என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
தலைவர், தொட்டியநாயக்கர் நலச்சங்கம், நாமக்கல்.