தடகள வீரர் சந்துருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்: திரு.இராமமோகன்ராவ் அறிவிப்பு.
சிவகாசியில் நேற்று (21.02.2021) வடுகர் (எ) கம்மவார் சங்கம் சார்பில் தெலுங்கர் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் முன்னாள் தலமைச்செயலாளர் திரு.இராமமோகன் ராவ் அவர்களும், விடுதலைக்களம் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜனும் கலந்துகொண்டனர். அப்பொழுது தேசிய அளவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் 1500 மீ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த மாணவன் எம்.சந்துருவை திரு.இராமமோகன்ராவ் அவர்களிடம் திரு.கொ.நாகராஜன் அறிமுகம் செய்துவைத்தார்.
அக்கூட்டத்தில் தலைமையுரை ஆற்றும்பொழுது மாணவன் சந்துருவை கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்தி, அவரின் சாதனையை வாழ்த்திப்பேசினார். இதனைத்தொடர்ந்து மாணவன் சந்துரு கலந்துகொள்ள இருக்கிற போட்டிகள் குறித்து கேட்டறிந்த திரு.இராமமோகன் ராவ் அவர்கள், குடும்ப பொருளாதாரம் குறித்து கவலைப்படாமல் பயிற்சிகளை மேற்கொள்ளுமாறும், மேலும் நிரந்தரமாக தரமான பயிற்சி கிடைக்க தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள் மாணவன் சந்துருவை அழைத்து வாழ்த்தினர்.
ஏழைகூலித்தொழிலாளி குடும்பத்தைச்சேர்ந்த மாணவன் சந்துரு, போதிய வசதி வாய்ப்புகள், தேவையான உபகரணங்கள் இன்றி வெறும் காலில் தார்சாலைகளில் பயிற்சிமேற்கொண்டு வருவதாகவும், கொரோனா காலவிடுமுறையில் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் கூலிவேலை செய்து வரும் வருமானத்தைக்கொண்டே போட்டிகளில் கலந்துகொள்வதாக தொட்டியநாயக்கர்.காம் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
திறமையான மாணவனை அடையாளம் கண்டு, உரிய நேரத்தில் மாணவனை நாமகிரிப்பேட்டையிலிருந்து சிவகாசிக்கு அழைத்துச்சென்று தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கச்செய்ய உறுதுணையாக இருந்த விடுதலைக்களம் நிறுவனத் தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.