உள்ஒதுக்கீடுக்கெதிராக வழக்கு தொடர தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் தீவிரம்!
தமிழகஅரசு கடந்த வாரம் 20% MBC இடஒதுக்கீட்டில் ஒருசாதிக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்க சட்டமியற்றியுள்ளது. இச்சட்டத்தால் MBC பட்டியலில் உள்ள தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட 115 சமுதாயங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால், தென்மாவட்டங்களில் பல்வேறு சமுதாயத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உள்ஒதுக்கீட்டால் தொட்டிய நாயக்கர் சமுதாய குழந்தைகளின் எதிர்காலம் பாதித்துவிடக்கூடாது என்பதால் சமுதாய அமைப்புகள் நமது உரிமையை நிலைநாட்ட முன்வரவேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சமுதாய மக்களின் அச்சம் குறித்தும், நமது உரிமைகளை தக்கவைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விடுதலைக்களம், நாமக்கல் தொட்டிய நாயக்கர் நலச்சங்கம், இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை, சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் கூட்டாக அலோசனை மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் வழக்கு தொடரப்படவுள்ளது.
இதற்கிடையே இன்று உயர்நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துள்ளது குறித்து கவலைப்படத்தேவையில்லை என்றும், சிலர் திசைதிருப்பும் நோக்கில் வழக்கு தொடுத்துள்ளதாக சீர்மரபினர் நலசங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.