கம்பளத்தாரை கைவிட்ட கழகங்கள்-களம் காணும் சிங்கங்கள்
தமிழகம் முழுவதும் 40-லட்சத்திற்கும் மேற்பட்ட இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர்கள் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். சுமார் 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்து வருகின்றனர். கம்பளத்தார்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் கழகங்களின் கொடிகள் உண்டு. அந்த அளவிற்கு இரண்டு பிரதான கட்சிகளிலும் பங்கெடுத்து வருகின்றனர். தங்களது சொந்த செல்வாக்கை பிரதானமாகக்கொண்டு உள்ளாட்சி அளவில் தெலுங்குமொழி பேசும் சிறுபாண்மையினரில் அதிகப்படியான பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சுமார் 1200-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பு வகித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் சராசரியாக அதிமுக-திமுக ஆகிய கட்சிகளில் 60:40 என்ற அளவில் உள்ளனர். இக்கட்சிகள் உதயமான காலத்திலிருந்து உறுப்பினராக தலைமுறை தலைமுறையாக இருப்பவர்களும் உண்டு.
ஆனால் கட்சியின் மிகமுக்கிய பொறுப்புகளாக கருதப்படும் ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், தலைமை செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர் போன்ற பதவிகளில் விகிதாச்சாரத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை. அதுபோலவே சட்டமன்ற, நாடாளுமன்றத்தேர்தல்களிலும் போட்டியிடு வாய்ப்பையும் இவ்விரு கட்சிகளும் கம்பளத்தாருக்கு வழங்குவதில்லை. அதிமுக-வில் எம்ஜிஆர் காலத்திற்குப்பிறகு 2016-இல் விருதுநகர் தொகுதில் கம்பளதார் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. திமுக-வில் 1980-களில் திரு.சுப்பு அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பளத்தாருக்கு திமுக-வில் வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் 2021-சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 10-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்திருந்தனர். அதில் விருதுநகர் தொகுதி மீண்டும் கம்பளத்தாருக்கு வழங்கப்படும் என்று நேற்று வேட்பாளர் பட்டியல் வெளிவரும் வரை நம்பிக்கையோடு காத்திருந்தனர் சமுதாய மக்கள். ஆனால் அத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பிற்கும் மாறாக கூட்டணி கட்சியான பாஜக-விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் இராஜபாளையம் தொகுதியில் திரைப்பட நடிகை ஒருவர் போட்டியிட இருப்பதாகவும், அதற்காக தேர்தல் பிரச்சாரத்தையே தொடங்கி விட்டதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின. ஆனால் ஆளும் கட்சியில் வேட்பாளர் தேர்வில் கம்பளத்தாரை புறக்கணிக்க முடியாது என்ற அளவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால், அத்தொகுதியை கூட்டணிக்கட்சிக்கு ஒதுக்கிவிட்டது அதிமுக தலைமை.
மறுபுறம் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இதுவரை கம்பளத்தார்கள் யார் விருப்பமனு அளித்துள்ளார்கள் என்று வெளிப்படையாகவோ, சமூக ஊடங்கள் மூலமோ தெரியவரவில்லை. விருப்பமனு அளித்தவர்கள் பற்றி சமுதாயத்திற்கே தெரியாதபொழுது, தனியார் நிறுவனத்தை பணி அமர்த்தி, விஞ்ஞான ரீதியாக புள்ளி விபரங்களைக் கணக்கெடுத்து பணியாற்றி வரும் கட்சியில் வாய்ப்பு கிடைப்பது என்பது கிட்டத்தட்ட இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
பிரதான கட்சிகளில் நிலைமை இவ்வாறு இருக்க, தேசிய கட்சிகளில் விருப்பமனு கொடுத்தவர்களுக்கு இந்ததேர்தலில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது. சமீபகாலமாக கம்பளத்தார் மத்தியில் அரசியல் எழுச்சியைக்காணமுடிகிறது. அந்தவகையில் கம்பளத்தாரை புறக்கணிக்கும் கட்சிகளுக்கு பாடம் புகட்டவும், காலம்காலமாக கம்பளத்தாரை சுரண்டி வாக்குகளை பெற்றுவரும் ஒருசிலரை எதிர்த்தும் இளைஞர்கள் களம் காண தயாராகிவிட்டனர். இதன் ஒருபகுதியாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் திரு.அருண்குமார் அவர்களும், அந்தியூர் தொகுதியில் திரு.செந்தில்குமார் என்ற இளைஞரும் சுயோச்சையாக போட்டியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.