கம்பளத்து வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு! வாய்ப்பை வசமாக்க தேவை நுண்ணறிவு!
நடைபெறவுள்ள 2021-சட்டமன்றத்தேர்தலில் கம்பளத்தார்கள் கணிசமாக வேட்பாளராக ஆகும் வாய்ப்பு கிட்டும் என்று ஒட்டுமொத்த சமுதாயமே எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஆளும்கட்சியான அதிமுக-வில் 10-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்திருந்தும் நிராகரிக்கப்பட்டனர். இதற்கு நேர்மாறாக எதிர்க்கட்சியான திமுக-வில் கம்பளத்தார்களின் சார்பில் யார் யார் வேட்புமனு அளித்துள்ளனர் என்ற விபரம் கூட கிடைக்கவில்லை. அந்த அளவில்தான் திமுக-வில் உள்ள கம்பளத்தார்களின் அரசியல் முன்னெடுப்பு உள்ளது. இந்தவேதனையான சூழலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் போடிநாயக்கனூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், தேனி தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திரு.M.முத்துசாமி அவர்கள்.
இந்த செய்தி நேற்று வெளியானதிலிருந்து தமிழகமெங்குமுள்ள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் உற்சாகம் அடைந்துள்ளனர். திரு.M.முத்துசாமி அவர்களுக்கு வாழ்த்துச்செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியையும், ஆதரவையும் இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே DNT-ஒற்றைச்சான்றிதழ் வேண்டி ஆறு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திவரும் 68-சமுதாயங்களைச்சேர்ந்த சீர்மரபினர் நலசங்கத்தினர், போடி தொகுதியில் போட்டியிடும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக வீடுவீடாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். போடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரும், ஒன்பது கம்பளங்களில் ஒரு பிரிவைச்சேர்ந்த அனுப்பர்களும் வசித்து வருகின்றனர். DNT-ஒற்றைச்சான்றிதழ் மறுப்பு, வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு ஆகியவற்றால் கொதிநிலையில் உள்ள கள்ளர், மறவர் உள்ளிட்ட பிற சாதி மக்களும் அதிமுக-விற்கு எதிராக ஆவேசமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வாக்குகளை ஒருமுகப்படுத்தும் பட்சத்தில் ஓ.பி.எஸ் அவர்களின் பணபலம், படைபலத்தை தாண்டி எளிமையான திரு.M.முத்துசாமி அவர்களின் வெற்றி உறுதி நிச்சயம் செய்யப்படும்.
இதற்கான வியூகங்களை வகுக்க தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளும், இராஜகம்பளத்தார் OBC-DNT உரிமை மீட்புக்குழு, DNT- சீர்மரபின நலச்சங்கத்தினர் மற்றும் அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.