சட்டமன்றத்தேர்தலில் களமிறங்கிய விடுதலைக்களம்!
ஏப்ரல்'06-இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இருபிரதானக்கட்சிகளிலும் கம்பளத்தார் யாருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் திரு.முத்துசாமி அவர்கள் போட்டியிடுகின்றார்.
தொட்டிய நாயக்கர் சமுதாயத்தில் பல்வேறு அமைப்புகள் இருந்தாலும் அவை அனைத்தும் சமுதாயப்பணியுடன் தங்கள் எல்லைகளை சுருக்கிக்கொள்கின்றன. விடுதலைக்களம் ஒன்று மட்டுமே சமுதாயப்பணியோடு அரசியலையும் முன்னெடுத்து வருகிறது. தற்போதைய நிலையில் கம்பளத்தாரின் அரசியல் முகமாக இருப்பது விடுதலைக்களம் மட்டுமே. அதற்கேற்றாற்போல் இதுவரை ஏழு மாநில மாநாடுகளையும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களையும் நடத்தியுள்ளது. விடுதலைக்களம் போராட்டங்களை சமுதாயத்துடன் மட்டும் சுருக்கி விடாமல், ஏழு தமிழர் விடுதலை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை என பொதுப்பிரச்சினைகளிலும் கலந்துகொண்டு தனது பங்களிப்பை செவ்வனே செய்துள்ளது.
இதுவரை அரசியலில் கம்பளத்தாருக்கு உரிய வாய்ப்பினை கட்சிகள் வழங்காதநிலையில், இந்தத்தேர்தலில் கம்பளத்தார்களை களமிறக்கியே ஆகவேண்டும் என்ற ஆதங்கம் இளைஞர்களிடையே இருந்ததை உள்வாங்கிக்கொண்ட விடுதலைக்களம் அமைப்பு இந்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாவதற்கு ஏதுவாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிப்'28-இல் மாநாடு நடத்தி சமுதாயத்தினரை உற்சாகப்படுத்தியது.
மாநாடு முடிந்தகையோடு சென்னை சென்ற விடுதலைக்களம் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், அரசியல் கட்சிகளை அணுகி கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். ஒருசில கட்சிகள் விடுதலைக்களத்தின் ஆதரவினை மட்டும் கோரியநிலையில், சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடுவதில் விடுதலைக்களம் தீவிரம் காட்டியது. இருபிரதான அணிதவிர்த்த மாற்று அணியில் இரண்டுகட்டப்பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சியொன்று திடீரென வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இதனால் விடுதலைக்களத்தை தங்கள் அணியில் தக்கவைத்துக்கொள்ள கூட்டணியில் உள்ள மற்ற கட்சித்தலைவர்கள் விரும்பியபொழுதும், தாங்கள் விரும்பும் தொகுதிகள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் தனித்து களமிறங்க விடுதலைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி,விடுதலைக்களத்தின் அவசர ஆலோசனைக்கூட்டம் இன்று (12.03.21) திருப்பூரில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்தியூர் சட்டமன்றத்தொகுதியில் விடுதலைக்களம் சார்பில் கூகலூர் ஊர்நாயக்கரும், பட்டக்காரருமான திரு.K.A.பிரதாபன் அவர்களும், பவானி சட்டமன்றத்தேர்தலில் திரு.P.செந்தில்குமார் அவர்களும் வேட்பாளராக போட்டியிடுவதாக விடுதலைக்களம் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் அறிவித்துள்ளார்.