🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆளும்கட்சியை கடுமையாக சாடுகிறதா சாதிய அமைப்புகள்? அமைப்புகளின் விளக்கம் என்ன?

ஆளுங்கட்சி சமுதாய உறவுகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் வணக்கம்.

தேர்தல் காலம் தொடங்கிவிட்டது. 2014 முதல் DNT ஒற்றைத்சான்றிதழ் வேண்டி அரசிடம் சாதாரண முறையில் கோரிக்கை வைக்கத்தொடங்கி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளோம்.  இக்கோரிக்கைக்காக பல இன்னல்கள், வழக்குகள், மிரட்டல்களை சந்தித்து, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி, 60 வயதைத்தாண்டிய பலர் 10 நாட்களுக்கும் மேலாக நடத்தியுள்ளனர். குறிப்பாக பெண்கள் திருமதி.தவமணிதேவி அவர்களின் தலைமையில் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்றனர். எதற்காக? யாருக்காக? முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த திருமதி .தவமணிதேவி அவர்கள் ஓய்வுபெற்ற BDO. அவரின் சமுதாயத்தில் 8 மந்திரிகள் உண்டு, 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் உண்டு. அவரின் வாரிசுகள் மென்பொருள்துறையில் பொறியாளர்கள். தானும், தன் குடும்பமும், சமுதாயமும் நல்லநிலையில் உள்ளனரே என்று ஒதுங்கி ஓய்வெடுத்துக் கொள்ளாமல், 68 சமுதாயங்களுக்காக உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டார்.  இவையெல்லாம் சமுதாய அமைப்பினர் தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த வருங்கால தலைமுறையினர் கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை பெற்று இந்நாட்டில் கௌரவமாக வாழவேண்டும் என்பதற்காக மட்டுமே தவிர வேறு என்ன பலனை,  ஆதாயத்தை பெறப்போகின்றனர் என்பதை தயவு செய்து நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். 

ஒருபக்கம் நாங்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க போராடி வரும் வேளையில், ஆளும்கட்சி தன் அரசியல் ஆதாயத்திற்காக நம் இனத்தின் அடிப்படை உரிமைகளை பறித்துக் கொண்டுள்ளது.எம்.பி.சி பட்டியலிலுள்ள 108 சாதிகளில் 107 சாதிகளின் நலன்களையும், உரிமைகளையும் புறந்தள்ளி விட்டு, யாருடைய கருத்தையும் கேட்காமல் ஒருசாதிக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்கிவிட்டது. 

எந்த சாதிக்கு வேண்டுமானாலும் வழங்கிக்கொள்ளட்டும், ஆனால் முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, யார் யார் எவ்வளவு சதவீதம் மக்கள்தொகை இருக்கிறார்களோ அதற்கு ஏற்றாற்போல் தாராளமாக வழங்கட்டும். 

இது தற்காலிகம் தானே, ஆறு மாதத்தில் குலசேகரன் ஆணையத்தின் அறிக்கைப்படி மாற்றம் செய்து கொள்ளலாம் என்று முதல்வர் சொல்லிவிட்டாரே என்கின்றீர்கள். 

இச்சட்டத்தில் ஆறுமாதம் தான் செல்லுபடியாகும் என்று எங்காவது ஒருவரி இருந்தால் காட்டுங்கள்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நீதியரசர். குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டபொழுது அனைவருமே வரவேற்றோம். ஆனால் இன்றைய எதார்த்தநிலை என்ன? அந்த ஆணையத்தின் அலுவலகம் எங்கேயுள்ளது தெரியுமா? அக்குழுவின் இதர உறுப்பினர்கள் யார்? அந்த ஆணையம் பணிகளை தொடங்கிவிட்டதா? நீதியரசர் குலசேகரன் ஆணையம் பணிகளைச்செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டதா? ஆணையத்தின் ஊழியர்கள் யார்? அலுவலக தொலைபேசி எண்ணாவது உண்டா? 

இது எடப்பாடிஅரசின் ஏமாற்றுவேலை, வட்டார அரசியல், சாதி அரசியல் நடக்கிறது

என்று அரசியல் திறனாய்வாளர்களும், அவரின் முன்னாள் சகாக்களும் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்பொழுது, நாங்கள் இந்த இடஒதுக்கீடு அநீதியானது என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? நீங்கள் கோபப்பட எதுகாரணம்? 

நீங்கள் வகிக்கும் கட்சி பதவி சமுதாயத்தால் வந்தது. கட்சியில் சீட் வாங்க சமுதாயம் வேண்டும். நீங்கள் தேர்தலில் நின்றால் வாக்களிக்க சமுதாயம் வேண்டும். உங்கள் பெண்களுக்கு டாக்டர்,எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு சமுதாயம் வேண்டும். உங்கள் சமுதாயம் தான் இவை எல்லாவற்றையும் உங்களுக்கு தருகிறது. ஆனால் உங்களுக்கு உறுதுணையாகவும், வாக்களிக்கவும்,  கட்சிகளிடம் வாக்குவங்கியை நிரூபிக்க உதவும் சமுதாயத்திலுள்ள சாமானியனுக்கு, அவன் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமை தவிர வேறென்ன வேண்டும்? ஏன் உங்கள் குழந்தைகளின் கல்விக்கும்,வேலைவாய்ப்பிற்கும் அதுதானே வேண்டும்? அப்படி வந்தால் தானே மற்ற சமுதாயங்களுக்கு சமமாக, சமஅந்தஸ்தில் வாழமுடியும். அதுதானே சமூகநீதி.

கட்சி வழங்கிய பதவியே, உங்கள் சமூகத்தை பிரதிநிதித்துப்படுத்தி, சமுதாய வாக்குகளை வாங்குவதற்குத்தானே? ஆனால் இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொள்ளாமல், நீங்கள் பிறந்த சமுதாயத்தை பற்றி சிந்திக்காமல், கட்சி பொறுப்பு, பதவிகளில் இருப்பதால் அக்கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்றீர்.  ஆனால் சொந்த சாதிக்காரன் என்று உங்களுக்கு வாக்களித்த சமுதாயத்தைச் சேர்ந்த சாமனியனுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதுவந்தாலும் அதுபற்றி நீங்கள் கவலை கொள்வதில்லை. நீங்கள் அவ்வளவு தூரம் கட்சிக்கு விசுவாசி என்றால், உள்ளூரிலே சொந்த சாதிக்காரன் உங்கள் கட்சியில் உங்களைவிட உழைக்க தகுதியுடன் வந்தாலாவது ஏற்றுக்கொண்டு வழிவிட்டு, கட்சிக்கு உங்கள் விசுவாசத்தை நிரூபித்துள்ளீரா? நீங்கள் கட்சியில் சேர்ந்த காலத்திலிருந்து கிளைக்கழக செயலாளர் பதவியில் கடைசிவரை ஒட்டிக் கொண்டுள்ளீர்களே தவிர, திறமைகளை வளர்த்துக்கொண்டு அடுத்த இடத்திற்கு நகரவே இல்லை. அதனால் சமுதாயத்திலிருந்து திறமையான இளைஞர்கள் அரசியலுக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை. இவையெல்லாம் சுயநலம் தானேயின்றி வேறென்ன? 

தேர்தலில் ஏன் போட்டியிட வாய்ப்புகிடைக்கவில்லை என்றால் சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை என்கின்றீர். ஒற்றுமையை ஏற்படுத்த நீங்கள் எடுத்த முயற்சி என்ன? அரசியலில் இருப்பதால் சமுதாய கூட்டங்களுக்கு வருவதில்லை என்றீர்கள். நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஏனெனில் நீங்கள் அரசியலில் சமுதாயத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பதற்காக.

ஒருசமுதாயம் அரசியலில் மட்டும் ஓருசிலர் பிரதிநிதித்துவம் பெற்றால் போதுமா? அரசியலில் இல்லாதவர்களின் உரிமைகள், வாழ்வாதாரம் நிலைநாட்டப்பட வேண்டாமா? அரசு நிர்வாகம், நீதித்துறை, பத்திரிக்கைத்துறை போன்றவற்றில் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் வேண்டாமா? மருத்துவர்களும், பொறியாளர்களும், ஆடிட்டர்களும், தொழில் அதிபர்களும் நமது சமுதாயத்திற்கு வேண்டாமா? அதைப்பெறுவது எப்படி? இடஒதுக்கீட்டு உரிமை தானே ஜனநாயகம் வழங்கியுள்ள ஒரே வழி. அதுபறிபோகையில் தடுக்காமல் சமுதாய அமைப்புகளுக்கு வேறென்ன வேலை இருக்கப்போகிறது?

கட்சி,பதவி,பணம் எல்லாம் யாருக்கும் எப்பொழுதும் நிரந்தரமில்லை என்பதை எப்பொழுது உணர்வீர். நீங்கள் சாதாரண தொண்டராக இருக்கும்வரை தான் அக்கட்சியில் உங்களுக்கு நீண்ட ஆயுட்காலம். பதவியும்  பணம், அந்தஸ்து வருகையில் அது நிரந்தரமாக இருக்கப்போவதில்லை என்பதற்கு பல உதாரணங்கள். உங்கள் கட்சியை விமர்சிக்கக்கூடாது என்கிறீர்களே, உங்கள் ஆயுள் முழுதும் நீங்கள் அதே கட்சியில் நீடிப்பீர் என்பதற்கு என்ன உத்தரவாதம்.  கட்சி நிரந்தரமல்ல. ஏன் கட்சியில்கூட ஏதாவது ஒரு அணியில் தானே இருக்கின்றீர். உரிய பதவி, மரியாதை, ஆதாயம், வாய்ப்பு இவற்றில் ஒன்று குறைந்தாலும் மாறிக்கொள்வதில்லையா? அவையெல்லாம் மாறக்கூடியது. ஆனால் சமுதாயம் மாற்றமுடியாதது. அந்த சமுதாயம் ஆரோக்கியமாக, அந்தஸ்துடன் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் எப்பொழுது யார் விழுந்தாலும் உடனடியாக எழுந்துகொள்ள ஊன்றுகோலாக இருக்கும்.

நாங்கள் சமுதாயத்திற்காக உழைக்கின்றோம். சமுதாயத்திற்கு குறிப்பாக இடஒதுக்கீட்டிற்கு அநீதி,கேடு நேர்கையில் எச்சரிக்கை செய்கிறோம், எதிர்க்கின்றோம்.

இப்பொழுது கூட பாருங்கள் எடப்பாடி அதிமுக மீதும், அரசு மீதும் எண்ணிலடங்கா குற்றச்சாட்டுகளை சொல்லலாம். ஆனால் நாங்கள் DNT  அநீதி, இட ஒதுக்கீட்டு அநீதி குறித்து மட்டுமே விமர்சிக்கின்றோம். அதை நீங்கள் உணரவேண்டும். 

அப்படியென்ன அந்த DNT-யில் இருக்கிறது என்கிறீர்களா? DNT-என்றால் சீர்மரபின பழங்குடிகள். அதாவது வெள்ளையர்கள் இந்த நாட்டிற்குள் வந்தபொழுது அவர்களை எதிர்த்து துவம்சம் செய்தவர்கள். அவர்களுக்கு அடங்க மறுத்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை அடக்குவதற்காக தனியாக குற்றப்பரம்பரை சட்டம்  போட்டு சித்தரவதை செய்யப்பட்டவர்கள். நாடு கடத்தப்பட்டவர்கள், அந்தமானில் சிறைவைக்கப்பட்டவர்கள், கப்பலில் ஏற்றி கடலிலே தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களில் எஞ்சி இருப்பவர்களின் வாரிசுகள். இன்றும் அந்தமானில் நமது உறவுகள் இருப்பதைக்காணலாம். தங்களால் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கு வெள்ளையன் காட்டிய கருணைதான் DNT. இந்த நாட்டில் முதல்மரியாதை கொடுக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள். முதல்உரிமையே நமக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த நாட்டில் யார்யாரே சலுகைகளை அனுபவிக்கின்றார்கள். மத்திய அரசு பல சலுகைகளை நமக்கு வழங்குகிறது. மூக்குக்கண்ணாடி வாங்க 500 ரூபாயிலிருந்து, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தனி இடஒதுக்கீடு, இலவச வீடு,நிலம், மாணவர்கள் விடுதிக்கட்டணமாக மட்டும் 3.50 லட்சம் வரை பல சலுகைகளை வழங்குகிறது. நாட்டில் எல்லா மாநிலங்களிலும் வழங்கப்படுகையில், 1979-இல் எம்ஜிஆர் தலைமையிலான அரசு DNT என்பதை DNC என்று மாற்றியதால், தமிழகத்தில் மட்டும் நமக்கு ஏதுவும் கிடைக்கவில்லை. 1989-இல் MBC பட்டியலுக்கு வந்தபின் தான் நம் சமுதாயம் ஓரளவாவது கல்வியில் உயர முடிந்தது. 1979-இல் இருந்த சலுகைகள் தொடர்ந்து கிடைத்திருந்தால் நம் சமுதாயம் எவ்வளவு முன்னேறியிருக்க முடியும்?

அந்தக்கட்சி கொடுப்பார்களா? இந்தக்கட்சி கொடுக்குமா என்று எதிர்க்கேள்வி கேட்கின்றீர்... உடம்பில் சாதாரண வியாதிதான், மருத்துவரிடம் சிகிச்சை பெற்றோம். அவரின் இறுத்திக்காலம் வரை குணப்படுத்த முடியவில்லை. தவறான மருந்தை வேறு தந்துவிட்டார். நாங்கள் என்ன செய்ய? மாற்று மருத்துவரை தேடுவது இயல்பு தானே. அதுபோல் உங்கள் கட்சி ஆளும் கட்சியாக இருந்தது, கேட்டோம் கொடுக்கவில்லை. இவர் வேண்டாம் நம்பிக்கையான வேறுயாரவது இருக்கிறார்களா என்று பாருங்கள் என்று சொல்கிறோம். அக்கட்சிகளிலும் வேறுயாருமில்லை,  உங்களைப்போன்ற சொந்தங்கள் தான் அங்கு உள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் பெற்ற பலனை அவர்களும் அனுபவிக்கட்டும், அறுவடை செய்யட்டும், உங்கள் இடத்தில் அமரப்போவது உங்கள் சகோதரனைத் தவிர வேறியாருமில்லையே. அதுதானே சமூகநீதி.

எக்கட்சி வந்தாலும் அவர்களிடமும் இதே கோரிக்கையை வைப்போம், நிறைவேறும் வரை போராடுவோம். அடுத்த தேர்தலுக்குள் செய்யவில்லை எனில் அவர்களையும் எதிர்ப்போம்.  எனவே ஆளும் கட்சியை தான் விமர்சிக்கின்றார்கள், தோற்கடிக்க நினைக்கின்றார்கள் என்று எக்கட்சியினரும் நினைக்க வேண்டாம். எங்கள் எதிர்ப்பை அறுவடை செய்ய நினைக்கும் உங்களுக்கும் இது எச்சரிக்கையே. 

ஆதலால் ஆளும்கட்சியில் இருப்பவர்கள் அமைப்புகள் மீது கோபம் கொள்ளாமல், இந்தப் பிரச்சினையை மையப்படுத்தி, எங்கள் சமுதாய மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள், அவர்களை சமாதானப்படுத்த அந்த சமுதாயத்தைச்சேர்ந்த எங்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகளை வழங்குங்கள் அல்லது மக்களை வேறு வழியிலாவது சமாதானப்படுத்துங்கள் என்று மாற்றியோசித்து நீங்களாவது ஆதாயம் பெற்றால் எங்களுக்கு மகிழ்ச்சியே. சமுதாயத்தின் தூதுவராக கட்சியில் இருங்கள், தேவைகளை நிறைவேற்றுங்கள். மாற்றாக கட்சியின் செயல்திட்டங்களை சமுதாயத்தின் மீது திணிக்காதீர். 

முக்குலத்தோரை பார்க்கின்றோம். எங்கள் சமுதாய்த்திற்கு துணைமுதல்வர், அமைச்சர் பதவிகள் முக்கியமல்ல. அந்த நபர்களும் முக்கியமல்ல, இடஒதுக்கீடே முக்கியம் என்று தெருவில் இறங்கி சொந்த சாதி அமைச்சர்களுக்கு எதிராக போராடுகையில், அரசியல் முக்கியத்துவமற்ற நிலையில் உள்ள வேட்டுவக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர், தொட்டியநாயக்கர், போயார், ஒட்டர் போன்ற சமூகங்களுக்கு இடஒதுக்கீடு தாண்டிய நாதி ஏது?

எங்கள் இலக்கு ஒன்று தான். ஒரே DNT சான்றிதழ், இடஒதுக்கீட்டு உரிமை, சமூக நீதி. இடஒதுக்கீடு விசயத்தில் எப்பொழுதும், யாரோடும் சமரசமில்லை. அது தவிர்த்து உங்கள் அரசியலில் நாங்கள் தலையிடமாட்டோம்.

எனவே நீங்கள் மக்களிடம் உங்கள் கட்சியின் சாதனைகளை சொல்லுங்கள்,  நாங்கள் மறுக்கப்பட்ட, பறிக்கப்பட்ட உரிமைகளை பட்டியலிடுகிறோம். இறுதி எஜமானர்கள் மக்களே....


இவண், 

தொட்டிய நாயக்கர் மற்றும் 68 சமுதாய சீர்மரபின பழங்குடியினர் நலசங்கம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved