சொல்லமறந்த திமுக! சொல்லியடித்த அமமுக!
DNT ஒற்றைச்சான்றிதழ் கோரிக்கை தொடர்பாக 2014-முதல் பலகட்டப்போராட்டங்களை நடத்தி வருகிறோம். அரசு செவிசாய்க்காத நிலையில், MBC பட்டியலிலுள்ள ஒருசாதிக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்கிய தற்போதைய அரசு நமது சமுதாயம் உள்ளிட்ட 115 சமுதாயங்களுக்கு அநீதி அளித்துவிட்டது.
DNT-ஒற்றைச்சான்றிதழ் வழங்குவோம் என்ற உறுதியை ஆளும்கட்சியை தவிர்த்த பிறகட்சிகள் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு உறுதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக உள்ளிட்ட பலகட்சிகளிடம் சீர்மரபினர் நலசங்கத்தின் சார்பில் வேண்டியிருந்தோம். தற்பொழுது அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.
இதில் பிரதான எதிர்க்கட்சியான திமுக நமது கோரிக்கையை நேரடியாக ஏற்றுக்கொள்ளாமல், வரிசை எண் 336-இல் மறைமுகமாக சாதிப்பெயர் மாற்றம், உள்ஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு சமுதாயங்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் DNT-சீர்மரபினர் மக்களின் கோரிக்கையை ஏற்று ஒற்றை சான்றிதழ் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
அமமுக இன்னும் ஒருபடி மேலாக, நமது சமுதாயதின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பான தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் போடிநாயக்கனூர் தொகுதியில் கம்பளத்தாருக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக தன் தேர்தல் அறிக்கையில் சமுதாயத்தின் மற்றொரு கோரிக்கையான மாவீரன் கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கையை சீர்தூக்கிப்பார்க்கையில், சிலை என்பது இனத்தின் அடையாளத்திற்கானது, DNT-என்பது சமகால வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டது. சிலையை விட நம் குழந்தைகளின் வாழ்க்கை முக்கியமானது. அந்த வகையில் அமமுக-வே நமது கோரிக்கையை முழுமையாகவும், வெளிப்படையாகவும் ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் வேட்பாளராகவும் கம்பளத்தாருக்கு வாய்ப்பளித்த வகையில் அமமுக நமது நெஞ்சங்களை வெல்வதில் முன்னனியில் உள்ளது.
கம்பளத்தாரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமமுக-விற்கு எங்களின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.