🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கலக்கும் கம்பளத்தார்கள்! கலக்கத்தில் ஓபிஎஸ்!

போடிநாயக்கனூர் தொகுதியில் துணைமுதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அவரது முன்னாள் சகாக்களாக இருந்த திரு.தங்கதமிழ்செல்வன் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பிலும், திரு.முத்துச்சாமி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் போட்டியிடுகின்றனர். 

இதில் ஓ.பி.எஸ். அவர்களும் தங்கதமிழ்செல்வன் அவர்களும் முக்குலத்தோர் சமுதாய வேட்பாளராக இருந்தாலும் ஓ.பி.எஸ் அவர்கள் மறவர் பிரிவையும், தங்கதமிழ்செல்வன் அவர்கள் கள்ளர் பிரிவையும் சேர்ந்தவர்கள். இந்த இரு பிரிவைச்சேர்ந்தவர்களும் சீர்மரபினர் பழங்குடி (DNT) பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் மிக அதிக அளவில் இத்தொகுதியில் உள்ளனர். 


DNT-யை சேர்ந்த 68 சமுதாய மக்கள் தங்களுக்கு DNC/DNT என்று தமிழக அரசு இரட்டைச்சான்றிதழ் வழங்குதால் மத்திய அரசு DNT மக்களுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகை, ஹாஸ்டல் வசதி, நவோதயா பள்ளிகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடு, முதியோர் உதவித்தொகை, விபத்துக்காப்பீடு, ஈமக்கரியைக்கு வழங்கப்படும் நிதி போன்ற பல்வேறு சலுகைகளை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே DNC என்று வழங்காமல், ஒரு எழுத்தை மட்டும் மாற்றி, DNT என்று வழங்கினால் 50-லட்சம் குடும்பங்களைச்சேர்ந்த லட்சக்கணக்கான குழந்தைகளின் தலையெழுத்தே மாற்றப்படும். DNT என்று சான்றிதழ் வழங்கப்பட்டு வந்ததை, 1979-இல் அன்றைய அதிமுக அரசால் எந்தவித காரணகாரியமும், முன்னறிவிப்புமின்றி DNC என்று மாற்றியதை, இன்றைய அதிமுக அரசு சரிசெய்து, மீண்டும் DNT என்று வழங்கவேண்டுமென்று, கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் சீர்மரபின பழங்குடி பட்டியலிலுள்ள தொட்டிய நாயக்கர், கள்ளர், மறவர், முத்தரையர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர்,போயர், ஒட்டர் உள்ளிட்ட 68 சாதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாராளுமன்ற தேர்தலின்பொழுது மீண்டும் DNT சான்றிதழ் வழங்கப்படும் என்று வாக்குறிதியும் அளித்திருந்தார். ஆனால் இன்றைய தேதிவரை அவ்வாக்குறுதியை நிறைவேற்றாமல், மேலும் இச்சமூகங்களுக்கு பெருங்கேடு விளைவிக்கின்ற வகையில் MBC பட்டியலில் இடம்பெற்றுள்ள DNT யைச்சேர்ந்த 68 சமூகங்களுடன், மேலும் 25 சாதிகளை இணைத்து 93 சாதிகளாக்கி 7% இடஒதுக்கீட்டை வழங்குவதின் மூலம், DNT சீர்மரபின பழங்குடி மக்கள் என்றைக்குமே DNT என்ற ஒற்றைச்சான்றிதழ் பெற்று, மத்திய அரசின் சலுகைகளைப் பெற்று கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும் முன்னேறிவிட முடியாத அளவிற்கு நயவஞ்சமான செயலை செய்துவிட்டார். மேலும் DNT சான்றிதழுக்காக பலவருடங்களாக போராடி வரும் 68 சமுதாயங்களை கலந்தாலோசிக்காமலும், MBC பட்டியலுள்ள 116 சாதிகளில் 115 சாதிகளை கலந்தாலோசிக்காமல், ஒரு சாதிக்கு மட்டும் அவசர அவசரமாக 10.5% இடஒதுக்கீடு வழங்கி, பிற சமுதாயத்தைச்சேர்ந்த 3 கோடி மக்களின் எதிர்காலத்தை பாழ்படுத்திவிட்டார்.


இதில் கள்ளர், மறவர், முத்தரையர், தொட்டியநாயக்கர், போயர்,ஒட்டர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர், வேட்டைக்கார நாயக்கர், நாவிதர், மீனவர், வண்ணார் போன்ற சமுதாயங்கள் அதிமுக-வின் நிரந்தர ஓட்டு வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வெகுண்டெழுந்த இந்த சமுதாய மக்கள், இது நம் எதிர்கால நலனை பாதுக்காத்து வந்த புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தலைமையில் இயங்கிய அனைவருக்குமான அதிமுக அல்ல, வட்டார, சாதி அரசியல் செய்யும் எடப்பாடி அதிமுக என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்து, தங்கள் சமுதாய அமைச்சர்கள் என்றும் பாராமல், துணைமுதல்வர், அமைச்சர்களாகவும் இருந்தும்கூட, நம் சமுதாய நலன்களை பாதுக்காக்கத் தவறிய துரோகிகளாக குற்றம்சாட்டி தென்மாவட்டங்களில் கருப்புக்கொடி போராட்டத்திலும், வாக்காளர்களின் காலில் விழுந்து அதிமுக-விற்கு வாக்களிக்காதீர் என்ற போராட்டத்தையும் முன்னெடுத்து வருவதை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளிவந்தன. குறிப்பாக துணைமுதல்வர் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதியில் DNT மக்களின் போராட்டத்தின் வீரியம் அதிகமாக இருந்துவருகிறது.

ஏற்கனவே தனது தோட்டத்தில் பராசுர கிணறு அமைத்ததால் அருகிலுள்ள விவசாயிகளின் கிணறுகள் வற்றிப்போய், குடிநீருக்கே அல்லல் படுவதாக துணைமுதல்வருக்கெதிராக மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்க, அத்துடன் இந்தப்பிரச்சினையும் சேர்ந்துகொண்டதால் இடியாப்பச்சிக்கலில் துணைமுதல்வர் ஓபிஎஸ் சிக்கித்தவிப்பதாக அரசியல் திறனாய்வாளர்கள் பார்வையை முன்வைத்து வருகின்றனர்.


வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதைப்போல், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.முத்துச்சாமி தன்பங்கிற்கு ஓபிஎஸின் தூக்கத்தைக் கெடுத்துவருகிறார். போடிநாயக்கனூர் தொகுதியில் முக்குலத்தோர் தவிர மொழிசிறுபான்மையினராக தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இராஜகம்பளத்தார், கவரா, கம்மாவார் நாயுடு,செட்டியார், அருந்ததியர் சமுதாய மக்களும், கன்னடம் தாய்மொழியாகக் கொண்ட அனுப்பக்கவுண்டர்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தனித்தனி பிரிவாக இருந்தபோதிலும்,14-ஆம் நூற்றாண்டில் மதுரையில், விஜயநகரப்பேரரசின் குடிகளாக, போர்வீரர்களாக, தளபதிகளாக, பாளையக்காரர்களாக, மன்னர்களாக இருந்தவர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் அனைவரும் வைணவத்தை பின்பற்றுபவர்களாக, பெருமாளை வணங்குபவர்களாக, கலச்சார ரீதிலும், பண்பாட்டு ரீதியாகவும் நெருங்கிய தொடர்புடைய ஒருதாய் வயிற்று மக்களாக ஏறக்குறைய 700 ஆண்டுகள் கடந்து அப்பகுதியில் ஒற்றுமையாக வசித்து வருகின்றனர். 


அமமுக-வேட்பாளர் திரு.முத்துசாமி அவர்கள் இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் பிரிவைச்சேர்ந்தவர் என்பதால், நீண்டகாலத்திற்குப்பிறகு இத்தொகுதியில் தங்கள் தொப்புள்கொடி உறவு ஒருவர் வேட்பாளராகியிருப்பதில் மொழிசிறுபான்மையின மக்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஏற்கனவே அமமுக தேர்தல் அறிக்கையில் DNT ஒற்றைச்சன்றிதழ் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளதால் DNT-யைச் சேர்ந்த முக்குலத்தோர் வாக்குகளும், திரு.TTV.தினகரன், திருமதி.சசிகலா ஆகியோரின் மீது பற்றுக்கொண்ட முக்குலத்து சமுதாய வாக்குகளையும் திரு.முத்துச்சாமி அவர்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள சமுதாய மக்கள் திரு.முத்துச்சாமி பிரச்சாரம் செய்யும் கிராமங்களில் தேவராட்டம், ஒயிலாட்டம் ஆடி வரவேற்பு அளித்து வருகின்றனர். அதிமுக-விலும் 25-ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றிய செயலாளராக இருந்தபடியால் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ள கட்சியினரும் திரு.முத்துச்சாமிக்கு ஆதரவாக செல்ல வாய்ப்புள்ளதால் துணைமுதல்வர் ஓபிஎஸ் கலக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. துணைமுதல்வர் கட்சி, சமுதாயம், சாதனை இவற்றின்மீது நம்பிக்கையில்லாமல் பணம் சாதிக்கும் என்று நம்புகிறார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved