கரும்பூஞ்சை நோய் ஆபத்து! - கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் வேண்டாம்-கம்பளத்தார் கூட்டமைப்பு!
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் வேண்டாம். இராஜகபளத்தார் சமுதாய மக்களுக்கு தலைவர்கள் வேண்டுகோள்.
இராஜகம்பளத்தார் சமுதாய கூட்டமைப்பின் தலைவர் நாமக்கல் திரு.M.பழனிச்சாமி மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.P.இராமராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று 2-வது அலையின் தாக்கம் மிக வீரியமாக உள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் இருந்து அழைக்கும் சமுதாய உறவுகள், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப உறவுகளுக்கு ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கை வேண்டி உதவி கோருகின்றனர். மற்றொருபுறம் கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரழக்கும் செய்திகளும் தினம் தினம் தொடர்ந்து வந்த வண்ணமே இருப்பது நெஞ்சை பதறச்செய்கிறது.
அரசு தொடர்ந்து தன்னால் இயன்ற அளவு மக்களைக்காப்பாற்ற சுற்றிச்சுழன்று பணியாற்றி வந்தாலும், பொதுமக்களின் அலட்சியமும், ஒத்துழைப்பு இல்லாமையும் பெரும் சவாலாக உள்ளது. மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழிவதை தொடர்ந்து செய்தி ஊடகங்களில் மக்கள் பார்த்து வந்தாலும், சுயக்கட்டுப்பாட்டுடன் இயங்க மறுப்பது வேதனையளிக்கிறது.
கிராமங்களில் இருந்து பேசும் உறவுகள், கொரோனா தாக்கத்தின் விளைவுகள் பற்றி அலட்டிக்கொள்ளாமல், திருமண நிகழ்ச்சிகளுக்கும், இறுதிச்சடங்குகளுக்கும் வழக்கம்போல் கட்டுபாடின்றி சென்று வருவதாக சொல்வதை எண்ணி மனம் மிகுந்த வேதனை கொள்கிறது. இந்தியாவின் மிகப்பெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி, இளம் தொழிலதிபர்களின் ஆதர்ச நாயகன் திரு.இரத்தன் டாட்டா அவர்கள், இந்த ஆண்டு உயிர் பிழைத்திருந்தால் போதுமானது, மற்ற எதை எண்ணி கவலை கொள்ளத்தேவையில்லை என்று சொல்லியிருப்பது, உலகம் எந்த அளவிற்கு ஆபத்தில் உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
ஒருபுறம் நிலைமை கைமீறிக்கொண்டிருக்கும் வேலையிலும், நிதிச்சுமை, வருவாய் பற்றாக்குறை என எதைப்பற்றியும் கவலைகொள்ளாத அரசு, மக்களைக்காக்க நிவாரண உதவிகளையும், தடுப்பூசி முகாம்களையும் இலவசமாக நடத்தி வருகிறது. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் ஏனோ பெரிய அச்சம் நிலவி வருகிறது. ஏற்கனவே மூடநம்பிக்கைகளிலும், மாய மந்திரங்கள், எந்தர-தந்திரங்களில் நம்பிக்கை கொண்டவர்களான இராஜகம்பளத்தார் சமுதாய மக்களிடம், தடுப்பூசியின் அவசியமும்,முக்கியத்துவம் குறித்து சரியான புரிதல் இல்லாமல் இருப்பது கொடுமையாக உள்ளது.
கடந்த சிலநாட்களாக "கொரோனா"வைக்காட்டிலும் கொடிய நோயான "கரும்பூஞ்சை நோய்" குறித்தான தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. சர்க்கரை, இதயநோய், இரத்தக்கொதிப்பு, உறுப்புமாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகும்பொபொழுது, அவர்களை "கரும்பூஞ்சை" நோய் தாக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனா நோயில் இறப்புவிகிதம் 1.5%-க்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கரும்பூஞ்சை நோய்க்கு ஆளானவர்களின் இறப்புவிகிதம் 50% என்கிறது மருத்துவ உலகம்.
மேலும், முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ்கள் வந்தவண்ணமுள்ளது. இந்த ஆபத்துகளில் இருந்து நம்மை முழுமையாக காக்கும் ஒரே ஆயுதம் "தடுப்பூசி" மட்டுமே. எனவே, சமுதாய மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னுரிமை அளித்து, விலைமதிக்க முடியாத தங்கள் உயிரையும், குடும்பத்தினரையும், சுற்றுப்புறத்தினரையும் காப்பாற்றிக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், நமது சமுதாய மருத்துவர் பேசுகையில் நடுத்தர மற்றும் இளைய சமுதாயத்தினர் மிக அதிகமாக "குளிர் பானங்கள்" அருந்துவதாகவும், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் வேகமாக நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தவர், மேற்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் 60 வயதிற்கும் குறைவான நான்கு உறவுகள் இறந்து போனதாகவும், அதன் பின்னனியில் அவர்களுக்கு இந்த குளிர்பான மோகம் அதிகம் இருந்ததை உணர முடிந்ததாகவும் தெரிவிக்கின்றார்.
எனவே, நமது சமுதாய இளைஞர்கள், பட்டதாரிகள், அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்களும் போதிய ஒத்துழைப்பு வழங்கி உயிரிழப்பை தடுத்திட வேண்டுமாய் அன்புக்கட்டளையிடுகிறோம்.