கம்பளத்தாரின் கண்களை பறித்ததா கரும்பூஞ்சை? ஐயகோ என்ன செய்வேன்...
உறவுகளே, எது நடந்துவிடக்கூடாது என்று இரண்டு நாட்களாக மனதை வாட்டியதோ, அது நடந்தே விட்டது. இப்பொழுதெல்லாம் காலை எழுந்தவுடம் முகநூலையோ, வாட்ஸ் அப் பதிவுகளையோ பார்க்கக்கூடாது என்று வைராக்கிய முடிவெடுத்தாலும், வகிக்கும் பொறுப்புகள் விடுவதில்லை. அறியாமை மக்களின் அலங்கோல நிலையை எண்ணி மனம் துடிக்கிறது. மரண ஓலங்களைக்கேட்டு கேட்டு மனம் இறுகிப்போனது. சில காலமாவது www.thottianaicker.com இணையதளத்திற்கு விடுமுறை கொடுத்துவிடலாமா என்றுகூட எண்ணத்தோன்றுகிறது.
ஆம் உறவுகளே, கேட்கும் செய்திகளும், பார்க்கும் காட்சிகளும் மரணத்தைவிட கொடுமையாக உள்ளது. சென்னையில் மருந்துகிடைக்குமா? கோவையில், நாமக்கல்லில், சேலத்தில் மருத்துவர்கள் யாரேனும் உண்டா? ஆக்சிஜன் படுக்கையுள்ள மருத்துவமனை கிடைக்குமா? என்ற விசாரிப்புகளில் தொடங்கியது, இன்று அடுத்த கட்டத்தை அடைந்துள்ளதை உணரமுடிகிறது. கொரோனா தொற்று கிராமப்புறங்களில் வேகமெடுக்கும் அதேவேளையில், கரும்பூஞ்சை நோயும் சேர்ந்தே பயணிக்கும் ஆபத்து வந்துவிட்டது.
அதை உறுதிப்படுத்தும் செய்திதான் இன்று காலை வந்தது. எப்பொழுதாவது பேசும் தொழிலதிபர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆச்சரியத்துடன் முன்னுரிமை அளித்து திறந்து பார்த்தால், அது கரும்பூஞ்சை நோய்க்கான மருந்தின் புகைப்படம் என்பது தெரிந்தது.அதனுடன் செய்தி ஏதுமில்லை என்பதால், ஒருவேளை எச்சரிக்கை செய்கிறார் போலும் என்று நினைத்துக்கொண்டாலும், மனதின் ஓரத்தில் அச்சம் இருந்தது. நேரடியாகவே கேட்டுவிடலாம் என்று தொடர்புகொண்டேன். பரஸ்பர நல விசாரிப்புகள் முடிந்து, அவர் அனுப்பிய புகைப்படத்தின் நோக்கம் கேட்டேன். கொடுமை, துன்பம்,பெருந்துயரம் என்று எந்தசொல்லாலும் அதன் வேதனையை விளக்கிவிடமுடியாது.
ஆம் உறவே,முப்பதைத்தாண்டிய இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கோவையில் பிரபலமான மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். கோரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்டவரை, டிஸ்சார்ஜ் செய்யவும் மருத்துவமனை நிர்வாகம் அனுமதி வழங்கிவிட்டது. இருந்தாலும் பயம் அல்லது முன்னெச்சரிக்கையாக மேலும் இரண்டுநாட்கள் மருத்துவமனையிலேயே இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார்கள். அந்தோ பரிதாபம், இரண்டாவது நாளில் பேரிடியாக வந்தது அந்த செய்தி. ஆம், கரும்பூஞ்சை நோய் பற்றிக்கொண்டது என்ற செய்திதான் அது. மருத்துவர்கள் சுதாகரிப்பதற்குள் "கண்களை தாக்கிவிட்டது". இப்பொழுது கண்களை எடுத்தே ஆகவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். கண்களை எடுத்தாவது உயிரை காப்பாற்ற முடியுமா? என்றால், கரும்பூஞ்சை நோய்க்கான மருந்து மருத்துவமனையில் கைவசமில்லை. கண்களை தாண்டினால் அடுத்து மூளையை பாதித்து மெல்ல உயிரை பறிக்கும். கரும்பூஞ்சை நோய்க்கான "Liposomal Amphotericin B Injection" மருந்தின் புகைப்படம் தான் தொழிலதிபர் அனுப்பியது.
நாங்கள் சென்னையில் இருப்பதால், ஓரளவு எல்லோரும் தெரிந்த சங்கமாக இருப்பதால், தமிழகத்தின் பலதரப்பட்ட இடங்களில் இருந்தும், யார் மூலமாவது தொடர்பு எண்களைப்பெற்றும் உறவுகள் தொடர்புகொள்கின்றனர். நாங்களும் எங்களால் முடிந்த அளவு உதவிடவே முயற்சி செய்கிறோம். ஆனால், உண்மையில் நாங்களும் கையறு நிலையில் தான் உள்ளோம் என்பதை இந்த வேளையிலாவது சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.
கம்பளத்தார் சமுதாய மக்கள்தொகையில் மருத்துவர்கள் விகிதம் லட்சத்திற்கு ஐவர்( 100000:1), சமுதாயம் சார்ந்த மருத்துவர்கள் நடத்தும் மருத்துவமனையின் விகிதம் பத்து லட்சம் பேருக்கு ஒன்று (1000000:1), செவிலியர்கள் விகிதம் லட்சத்திற்கு ஒருவர் (100000:1), மருந்து விற்பனையாளர்கள் விகிதம் ஐந்து லட்சத்திற்கு ஒருவர் (500000:1). இதுதான் தோராயமாக இருக்கும் எதார்த்தநிலை. இதில் பெரும்பாலன மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்தாலும், வேலைப்பளு காரணமாகவோ அல்லது இந்த உதவிக்காகத் தான் இருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில், அவர்களாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாலோ என்னவோ, இப்பொழுதெல்லாம் எங்கள் அழைப்புகளை அவர்கள் எடுப்பதேயில்லை. அதில் இன்னும் உட்சபட்சமாக சில மருத்துவர்கள் எங்கள் செய்திகளைக்கூட பார்ப்பதில்லை என்பதே உண்மை.
இதுமட்டுமல்ல, அவசர உதவிக்கு அரசு அதிகாரிகளையோ, அரசியல்வாதிகளையோ தொடர்புகொள்ளலாம் என்றால், அங்கும் ஆசிரியர்கள் தவிர்த்து அரசு ஊழியர்கள் எண்ணிக்கை விகிதம் பி,சி,டி பிரிவுகளில் மட்டும் லட்சத்திற்கு பத்துப்பேர் (100000:10), ஆளும்கட்சியில் ஒன்றியச்செயலாளரே இருபது லட்சம் பேருக்கு ஒருவர் (2000000:1) என்ற அவலநிலையில் தான் உள்ளோம்.
இந்த அவலநிலையையெல்லாம் போக்க வேண்டியது நமது நீண்டகாலம் திட்டமென்றாலும், இப்பொழுது கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மைக்காப்பாற்றும் பேராயுதம் "தடுப்பூசி" மட்டுமே. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் "முகக்கவசம்" மற்றும் "சமூக இடைவெளி"யை கடைபிடிப்பதும், அரசின் ஊரடங்கு கட்டுப்பாட்டை முழுமையாக மதித்து நடப்பது மட்டுமே ஒரே தீர்வு. ஆனால் இவற்றில் நமது சமுதாயம் மிகவும் பின்தங்கியிருப்பதாக சொல்கிறார், புதூர் ஒன்றிய தி.மு.கழக செயலாளர் திரு. செல்வராஜ் அவர்கள். நேற்று (20.05.2021) புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னவநாயக்கன்பட்டியில் தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்து காத்திருந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் கிராமத்தில் 7 பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக தன் வேதனையை வெளிப்படுத்தினார். எல்லோர் வீட்டிலும் படித்த இளைஞர்கள், டிவிக்கள் இருந்தபொழுதும், கொரோனாவின் தீவிரம் குறித்து விழிப்புணர்வு இன்றி, கொரோனா நம்மை தாக்காது என்று தவறான மூடநம்பிக்கையில் இருப்பது வேதனையாக இருப்பதாக சொல்கிறார்.
கரும்பூஞ்சை நோய் பரவலுக்கு அடிப்படையாக இருப்பது "கொரோனா" பெருந்தொற்றே என்பது மருத்துவ உலகம் சொல்லும் செய்தி. மக்கள் அந்த ஆபத்தை உணர்ந்து "கரும்பூஞ்சை" தொற்றின் மூலகாரணமான கொரோனா தாக்காமல் இருக்க "தடுப்பூசியை" செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும். அரசு மாநிலத்திலுள்ள 7 கோடிப்பேருக்கும் "ஆக்சிஜன் படுக்கையை" ஏற்பாடு செய்திட முடியாது. ஆனால் அனைவருக்கும் இலவச தடுப்பூசியை அளிக்க இயலும். அரசு தன் பொறுப்புணர்ந்து முதல்வரும், அமைச்சர் பெருமக்களும் , மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதாரப்பணியாளர்களும், இரவுபகல் பாராது சுற்றிச்சுழன்று பணியாற்றி வரும் சூழலில், மக்களும் தங்கள் உயிரின் முக்கியத்துவம், மதிப்பறிந்து தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.
நோயுற்றவர்களுக்கு நம்மால் ஆக்சிஜன் படுக்கையோ, கரும்பூஞ்சை நோய்க்கான மருந்தையோ கொடுக்க முடியாமல் போகலாம். ஆனால் நோய் வரும்முன் காத்திட நம் அனைவராலும் முடியும். எனவே, தடுப்பூசி போட்டுக்கொள்வதை சமுதாய இயக்கமாக மாற்றி, மக்களை காத்திட அரசியல் தலைவர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், சமுதாய இயக்கங்களும் முன்வரவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தற்பொழுது கோவை தனியார் மருத்துவமனையிலுள்ள நமது உறவினருக்கு "Liposomal Amphotericin B Injection" மருந்து 30 டோஸ்கள் தேவைப்படுகிறது.உங்கள் சுற்றுவட்டத்தில் மருந்து கிடைத்தால் 7395988767 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்.
மேலும், தமிழக அரசு கொரோனா இரண்டாம்கட்ட நிவாரணநிதி, பரிசுப்பொருட்கள் பெறுவோர், இணைநோய் இல்லாதவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அவசியம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
பொதுச்செயலாளர்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.