இளைய ஜமீன்தாருக்கு விடுதலைக்களத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!
அம்மையநாயக்கனூர் இளைய ஜமீன்தார், அமரர்.V.S.ராஜா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி யொட்டி விடுதலைக்களம் நிறுவனத்தலைவர் திரு.கொ. நாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.
அன்பார்ந்த சொந்தங்களே!
நமது இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் மூத்த முன்னோடியாய், ஆற்றல்மிகு செயல்வீரராய் இருந்தவரான, இளைய ஜமீன்தார் அமரர்.V.S.ராஜா அவர்களின் முதாலாமாண்டு நினைவு நாளான இன்று, இச்சமுதாயத்திற்கு அவராற்றிச்சென்ற பணிகளை நினைவுகூறி, விடுதலைக்களத்தின் சார்பில் புகழ் வணக்கம் செலுத்துகிறோம்.
மறைந்த இளைய ஜமீன்தார் அவர்கள், இராஜகம்பள மகாஜன சங்கம் மற்றும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் உள்ளிட்ட நம் சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகளில் மிக முக்கிய பொறுப்புகளை வகித்து, அவ்வமைப்புகளை கட்டமைத்த முன்னோடிகளில் ஒருவர். ஜமீந்தாரராக இருந்தாலும், ஏறக்குறைய அரைநூற்றாண்டுக்கும் மேலாக பட்டி தொட்டியெல்லாம் பயணம் செய்து சமுதாயத்திற்கு சேவையாற்றிய பெருமகனார்.பல்வேறுதுறைகளிலும் தன் முத்திரை பதித்தவரான திரு.ராஜா அவர்கள், பத்திரிக்கைதுறையில் நிருபராகவும், சிறப்பாசிரியராகவும் சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணமே செய்து கொள்ளாமல் இச்சமுதாயத்திற்காக அல்லும் பகலும் பாடுபட்டு தன் முழுவாழ்வையே அர்ப்பணித்து வாழ்ந்தவர். 1972 ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் இரண்டாவது மாநாட்டில், மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அதனையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டங்களிலும், மாநாடுகளிலும் தன் பங்களிப்பை உறுதி செய்தவர்.
சேலம் மாவட்ட நீதிபதியாக இருந்தபொழுது முக்கிய வழக்குகளில் வரலாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கி, நீதிமன்ற மாண்புகளை மேலோங்கச்செய்த அம்மையநாயக்கனூர் ஜமீன்தார் நீதியரசர் பெருமரியாதைக்குரிய உயர்திரு. கிருஷ்ணராஜா அவர்களினுடைய நெருங்கிய உறவினர் V.S.ராஜா என்பது கூடுதல் தகவல்.
உலகை அச்சுறுத்திவரும் கொரானோ பெருந்தொற்று காரணமாக அம்மையநாயக்கனூர் சென்று அன்னாருக்கு புகழஞ்சலி செலுத்தமுடியாத வருத்தம் வாட்டினாலும், இன்று மாலை 6 மணியளவில் இராசிபுரம் விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில் பெருமகனாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி கூட்டத்தை விடுதலைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
விடுதலைக்களம்,
தலைமை அலுவலகம், இராசிபுரம்.
29/05/2021.