தியாகியின் 135-வது பிறந்தநாளில் நல்லெண்ணம், நல்லிணக்கம்,நல்லுறவு வளர்ப்போம்! - கொ.நாகராஜன் அறிக்கை..
அன்புள்ள உறவுகளே,
நமது மாமன்னர்கள் திருமலைநாயக்கர், வீரபாண்டிய கட்டபொம்மன், விருப்பாச்சி கோபால நாயக்கர், தளி எத்திலப்ப நாயக்கர் ஆகியோரின் ஜெயந்தி நாட்களில், அவர்களின் தியாகங்களை நினைவுகூறும் வகையிலும், வரலாற்று பக்கங்களில் நமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதேடு, சமகால உறவுகளிடம் ஒற்றுமையை வளர்த்துக்கொண்டு, நிகழ்காலத்தில் நமக்கான உரிமைகளை வென்றெடுக்க பயன்படுத்திக்கொள்கிறோம்.
அந்தவழியில், ஜனநாயக அரசியலுக்கு தேசம் திரும்பியபின் பல்வேறு இனக்குழுக்கள், தங்கள் மரபுவழி, இன,மொழி வழி, மண்சார்ந்த சகோதர இனங்களுடனும் சேர்ந்து தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை அரசியலும், அதிகார மட்டத்திலும் தக்க வைத்துக்கொள்கின்றனர். அதிகாரமில்லாத இனக்கூட்டம் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டு, பெரும்பான்மை இனங்ககளின் அடிமைகளாக்கப்படுகின்றனர். அந்தநிலைக்கு நாமும் சென்றுவிடாமல், இனத்தையும், கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றை காப்பாற்றிக்கொள்ள, நமக்கு இணக்கமான பிற சகோதர சமூகங்களை அடையாளம் கண்டு அவர்களோடு கரம் கோர்த்து பயணிப்பது காலத்தின் கட்டாயம்.
இணக்கமான நட்புறவை வளர்த்துக்கொள்ள மாமன்னர்கள், தியாகிகளின் ஜெயந்திகளில் பிற சமுதாயத்தினரும் கலந்துகொண்டு சிறப்பிப்பதும், அச்சமூக மக்களுடன் பரஸ்பரம் அன்பு பாராட்டிக்கொள்வதையும் கண்கூடாக பார்த்து வருகிறோம். இதை நமது சமுதாய மாமன்னர்களின் பிறந்த நாட்களிலும், நினைவு நாட்களிலும் சகோதர சமுதாயங்கள் கலந்துகொண்டு அன்பை வெளிப்படுத்தி வருவதைக் காணலாம்.
அந்தவகையில், கம்பளத்தார் சமுதாயம், ஜனநாயக அரசியல், அதிகாரமட்டங்களில் தங்கள் இருப்பையும், அடையாளத்தையும் உறுதி செய்துகொள்ள, நமது சகோதர சமுதாயங்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் நல்லுறவை வளர்த்திக்கொள்வது அவசியமாகிறது. இந்த நட்புறவின் மூலம் கிடைக்கும் பலன் ஒருவருக்கொருவர் கூடக்குறைவாக இருக்கலாம். ஆனால் பலன் என்று ஒன்று உண்டு என்பதை கடந்த காலங்கள் நிரூபித்துள்ளன.
இக்கருத்தின் அடிப்படையில் கம்பளத்தார் சமுதாயமும், இன, மொழி ரீதியான சகோதர சமுதாய தலைவர்களின் தியாகங்களையும், புகழையும் கொண்டாடுவதன் மூலம் நமது நல்லைண்ணத்தை வெளிப்படுத்துவதுடன், நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு விடுதலைக்களம் தொடக்ககாலம் தொட்டு, கால்நூற்றாண்டுகளாக தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அத்தொடர்ச்சியின் ஒரு நிகழ்வாக , சுதந்திரப்போராட்ட தியாகி டாக்டர்.வரதராஜுலு நாயுடு அவர்களின் 135-வது பிறந்தநாள் விழா வரும் வெள்ளிக்கிழமை (04.06.2021) காலை 11.00 மணியளவில் காணொளி வாயிலாக சிறப்பாக கொண்டாடவுள்ளோம். இந்நிகழ்ச்சிக்கு நிறுவனர்.கொ.நாகராஜன், தலைமை வகிக்கின்றார். வழக்கறிஞர் நல்வினை.திரு.விஷ்வராஜு M.A.,B.L., வரலாற்று ஆய்வாளர், முனைவர் திரு.செ.ஜகந்நாதன், தமிழ்ப்பேராசிரியர், மதுரை ஆகியோரின் சீறப்புரையைத்தொடர்ந்து, விழா நிறைவு பேருரையாற்றுகிறார். முனைவர் திரு.பா.இராம மோகன ராவ். I.A.S, (தமிழக அரசு முன்னாள் தலைமைச்செயலாளர்) அவர்கள். இந்நிகழ்வில் அனைவரும் இணையவழியில் கலந்து கொண்டு தியாகியின் நினைவைப்பேற்றிட அன்புடன் அழைக்கின்றோம்.
இவண்,
கொ.நாகராஜன்,
நிறுவன தலைவர், விடுதலைக்களம்.
01.06.2021