மேற்குமாவட்ட மரணங்கள் - அலட்சியத்திற்கு சமுதாயம் கொடுக்கும் விலை!
அன்பான உறவுகளுக்கு வணக்கம்,
தமிழகத்தில் கொரானோ பெருந்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக கடந்த ஒருசில வாரங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட சொந்தங்களை பறிகொடுத்துள்ளோம் என்ற செய்தியை கேட்கும்பொழுது மிகவும் வேதனை அளிக்கிறது. கோவை மாவட்டத்தில் குளத்துப்பாளையம், ஈச்சனாரி, மாச்சநாய்க்கன்பாளையம், நல்லட்டிபாளையம், மாசநாயக்கனூர், தாமரைக்குளம், குள்ளக்காபாளையம், பொன்னாபுரம், ராமபட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் நமது சொந்தங்கள் இந்தக் கொடிய நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கோவை மாவட்டத்தின் தென்பகுதியில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட நமது சொந்தங்களை இழந்துள்ளோம். இதில் பெர்ம்பாலும் நடுத்தர வயதுடையவர்கள் என்பது கொடுந்துயரம். கொரானோ என்ற கொடுந்தொற்றால் குடும்ப உறுப்பினர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் கோவை மாவட்ட இராஜகம்பளம் சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில்,கிராமப்புறங்களிலுள்ள நமது சொந்தங்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும், அலட்சியத்தாலும், பலர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதும், நோய் அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு உரிய சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளாத போக்கும்,மூச்சுத்திணறல் ஏற்பட்ட பின்னரே மருத்துவரை நாடுவதும், அபாயகட்டத்தில் உடனடியாக ஆக்சிஜன் படுக்கை வேண்டி அழைக்கும்பொழுது உரிய உதவிகளை செய்யமுடியாத கையறுநிலை ஏற்படுவதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். உடனடி மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளாததால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொத்துக்கொத்தாக மடிவதும், அவர்களுக்கு இறுதிமரியாதைக்கூட செய்யமுடியாத நடைபிணமாய் உறவுகள் தவிப்பதும் மரணத்தைவிட கொடிய வலியாகவுள்ளது.
இதேநிலை, ஈரோடு,நாமக்கல், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் எதிரொலிக்கிறது. கொரானோ, கரும்பூஞ்சைத்தொற்று, கொரானோவிற்கு பிந்தைய பாதிப்புகள் என மரணித்திற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், ஆரம்பகட்ட கவனக்குறைவு, அலட்சியம், முகக்கவசம் இன்றி சுற்றுவது போன்றவையே அடிப்படைக்காரணங்கள் என்பதை அறியாத ஜனங்களாக இருப்பது வேதனை. பெருந்தொற்றின் வீரியம் குறையும் வரை உறவுகள் திருமணம் போன்ற சுபகாரியங்களை தவிர்ப்பது பல உயிர்களை காக்க உதவிகரமாக இருக்கும். மங்கல நானேற்றி மகிழ்ந்து, உறவுகளின் ஆசீர்வாதம்பெற்று புதுவாழ்வு தொடங்கும் ஒரு நிகழ்வு, பலருக்கு மரண வாயிலை திறக்கும் நிகழ்வாக முடிகிறது. தவிர்க்கமுடியாத நிகழ்ச்சிகளை, கூட்டத்தைக் கூட்டாமல் எளிய முறையில் நடத்துவது சமூகத்திற்கும், நாட்டிற்கும் நலம் பயக்கும்.
இழந்தது வேதனை என்றாலும் இனியாவது அனைவரும் விழிப்போடிருந்து உயிர்காத்திட அனைவரும் உறுதியேற்போம். தடுப்பூசியே நம் உயிர்காக்கவல்ல பேராயுதம். உறவுகளை தடுப்பூசி செலுத்த ஊக்கப்படுத்தி மூன்றாவது அலையிலிருந்து தற்காத்துக்கொள்ளவேண்டும் என்று கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.