🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொத்துக்கொத்தாய் மரணங்கள்! குலைநடுங்கச்செய்யும் ஓலங்கள்!

கொரானோ முதல்அலை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கி, பிணக்குவியல்களாய் காட்சியளித்ததை சர்வதேச ஊடகங்கள் மூலம் கண்டோம். முதல்அலை இந்தியாவைத் தாக்கினாலும், வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது பாதிப்பு குறைந்த அளவிலேயே இருந்தது. அதுவும் சென்னை. மும்பை போன்ற பெருநகரங்களை தாக்கிவிட்டு கொரானோ சற்று ஓய்வெடுத்துக்கொண்டது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் வளைகுடா நாடுகளில் வேலைதேடிச்சென்ற நமது உறவுகள் உயிர்ச்சேதாரமின்றி தப்பியதில் மகிழ்ந்திருந்தோம்.

கொரானோ அலைகள் ஓயாது என்று எச்சரிக்கைகள் வந்தவண்ணமிருந்தாலும், கொரானோ அரக்கன் ஓடிவிட்டான் என்ற நினைப்பில், வாழ்க்கையை ஓட்டியாக வேண்டிய கட்டாயத்தில், ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் அனைவரும் ஓடியோடி உழைக்கத்தொடங்கிவிட்டோம். அதேவேளை, அரசியல் களத்தில் கம்பளத்தாருக்கு அடையாளம் வேண்டி, கிடைத்த இடைப்பட்டகாலத்தில் விடுதலைக்களமும் அரசியல் எழுச்சி மாநாடொன்றை நடத்தி, சட்டமன்ற தேர்தல் களத்தில் கம்பளத்தாரை வேட்பாளர்களாக்கி, சமூகத்திற்கு அரசியல் எழுச்சியூட்டும் பணிகளை தொடங்கியது. 

அரசு நிர்வாகம், மக்கள் கவனம் அனைத்தும் தேர்தல் திருவிழாவில் மூழ்கியிருக்கும் வேளையில், புறமுதுகு காட்டி ஓடிவிட்டான் என்று நினைத்திருந்த கொரானோ அரக்கன், முன்பைவிட வீரியமாக தாக்கத்தொடங்கிவிட்டான். இந்தமுறையும் நகர்புறத்தோடு போய்விடும் என்று நம்பியிருந்த வேளையில், நம் யூகங்களுக்கு மாறாக, கிராமப்புற பகுதிகளுக்கும், அதுவும் நம் வாசல்தாண்டி வீட்டிற்குள்ளே வந்துவிட்ட கொடூரம் நடந்துவிட்டது. தடுப்பூசி என்ற பேராயுதம் அனைவருக்கும் கிட்டும் முன் நிராயுதபாணிகளாக இருந்த மக்களை கொடூரமாக தாக்கத்தொடங்கிவிட்டது.

தடுப்பூசி ஆயுதம் இல்லாவிட்டாலும், அறிவாயுதம் ஏந்தி கொரானோவின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று அறிஞர்கள் பலர் சொன்னாலும், பலநூற்றாண்டுகளுக்கு முன் கூர்தீட்டிய ஆயுதம் ஏந்தித் போராடிய கம்பளத்தான், அறிவாயுதம் ஏந்த வேண்டிய இப்போர்க்களத்தில் நூறாண்டுகடந்தும் கூர்மழுங்கிய ஆயுதத்தை வைத்துக்கொண்டு, வாளின் பெருமைபேசித்திரிவதே பிழைப்பாய்ப்போனது. போர்க்களத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளாமல் பிற்போக்குத்தனமாய் பேசித்திரியும் இனக்கூட்டம் ஒன்று உண்டெனில் அது நம்மைத்தவிர யார் இருக்கமுடியும்?

சுடும் சொற்கள் தான், என்ன செய்ய? வரும் செய்திகளும், பார்க்கும் காட்சிகள் ஏற்படுத்தும் ரணங்கள் அப்படி. சென்னையைத் தாக்கிய கொரானோ கோவையை வந்தடைய இருவாரங்கள் ஆகியது. சுதாகரித்துக்கொள்ள கால அவகாசம் இருந்தது, ஆனால் அறிவு இல்லாமல் போனது. அரசு ஊரடங்கு அறிவித்தாலும், இவன் ஊரடங்கியா இருந்தான்? அலட்சியம்... அலட்சியம்... அலட்சியம். எங்கெங்கும் அலட்சியம். நம்மை ஒன்றும் செய்யாது என்று அலட்சியம். முகக்கவசம் அணிவதில்லை, சானிடைசர் பயன்படுத்துவதில்லை, பரிந்துரைக்கப்பட்ட எந்த பாதுகாப்பையும் பின்பற்றவில்லை. அதற்காக இன்று சமூகம் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை அதிகம். கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் நாம் பறிகொடுத்தவர்களில் பெரும்பாலானோர் 40-60 வயதுடையவர்கள்.

முதல்தலைமுறை பட்டதாரி, முதல்தலைமுறை தொழிலதிபர், இப்பத்தான் வீடு கட்டினார், இப்பத்தான் தொழில் செட்டாச்சு, பெரிய பொண்ணு காலேஜ் போறா... பையன் பத்தாவது படிக்கிறான் என்று பரிதவிக்கும் குரல் ஒருபுறமென்றால், முதல்ல வீட்டுக்காரருக்கு வந்துச்சு.. அப்புறம் அந்தம்மாவுக்கு வந்துச்சு அப்படியே மகளுக்கும் வந்திருச்சு. நேத்து நைட் செத்துப்போயிட்டாரு... அம்மாவும் புள்ளையும் ஆஸ்பத்திரியில இருக்காங்க என்று ஈரக்குலையை நடுங்கச்செய்யும் குரல்கள் திருப்பூர் பாரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை ஈச்சனாரி, குளத்துப்பளையம், பொள்ளாச்சி, கரூர் அரவக்குறிச்சி போன்ற பகுதிகளில் இருந்து வந்தவண்ணமுள்ளது.

இந்தக்கொடூரத்தை உணராத ஒரு பெருங்கூட்டம் ஒன்று கூட்டமாக உட்கார்ந்து தாயத்து, சீட்டு விளையாட்டு, கும்பலாக கூடி கறிவிருந்து என்று சுற்றித்திரிவதும், திருமண வீட்டார்கள் சுயக்கட்டுப்பாடின்றி முகூர்த்த ஏற்பாடுகளை செய்து உறவுகளைக்கூட்டி கும்பல் சேர்ப்பதும் நடந்தவண்ணமே உள்ளது. இதைப்பார்க்கையில் இன்னும் எத்தனை, எத்தனை உயிர்களை காவுகொடுக்கப்போகிறதோ இந்த கம்பளத்தார் சமூகம் என்ற பதைபதைப்பு பற்றிக்கொள்கிறது. இன்னொருபுறம், கொரானோ தொற்றுக்குள்ளானோர் வெளியே சொல்லாமல், எவ்விதக்கட்டுபாடுமில்லாமல் சுற்றித்திரிவதையும் பார்க்கமுடிகிறது. இத்தனை துன்பங்களுக்கும் மத்தியிலும், இளைஞர்கள் மதுவிருந்துண்டு மகிழும் புகைப்படங்களை பார்க்கையில், இந்தத்தலைமுறையைவிட அடுத்த தலைமுறை சமூக அடையாளங்களை இழந்து, அந்தஸ்தையும் இழந்துவிடுமோ என்ற கவலை தொற்றிக் கொள்கிறது. ஒரே சமுதாயத்திற்குள்ளேயே ஒதுக்கப்பட்டவர்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதை மறுப்பதற்கில்லை.

இச்சமுதாயத்தை மேம்படுத்தும் கனவுடன் அமைப்பைத்தொடங்கி, பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் மத்தியில் கால்நூற்றாண்டு கடந்து இந்த அமைப்பை நடத்தி வந்தாலும், நம் நோக்கத்திற்கும், எண்ணங்களுக்கும் மாற்றான எதிர் திசையில் சமூகம் பயனிப்பதை எண்ணி வேதனையடைகிறோம். சமூக அக்கறையுள்ள பெரியோர்களையும், இளைஞர்களையும் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள உங்களால் இயன்ற விழிப்புணர்வை இச்சமூகத்திற்கு வழங்குங்கள். குடும்ப உறுப்பினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்யுங்கள். கடந்த இருமாதத்திற்கு முன்பே கோவேக்ஸின் தடுப்பூசி எடுத்துக்கொண்டவன் இந்த கொ.நாகராஜன் என்ற வகையில், உறுதியாக சொல்கிறேன், தடுப்பூசி குறித்தான வதந்திகளை நம்பாதீர். உங்கள் உயிர் குறித்து நீங்கள் அக்கறையில்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் முக்கியம். நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம். கரம் கோர்ப்போம்.. கொரானோவை வெல்வோம்

இவண்,

கொ.நாகராஜன்,

நிறுவன தலைவர், விடுதலைக்களம்.

 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved