🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உள் ஒதுக்கீட்டு சட்டத்தை செயல்படுத்தாதீர்! - முதல்வருக்கு கோரிக்கை!

வணக்கம்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட நொடி முதல் கொரோனா பெருந்தொற்றுக்கெதிராக ஒட்டுமொத்த அமைச்சரவையும், அரசு நிர்வாகமும் பணியாற்றி வருவது, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பான கரங்களில் இருப்பதாக உணர்கிறோம். 

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தாக்கி, ஒட்டுமொத்த நாட்டினை சீரழித்தது வேண்டுமானால் ஏப்ரல் மாதத்தில் தொடங்கியிருக்கலாம். ஆனால் DNT-பிரிவிலுள்ள 68 சமுதாயங்களையும், MBC-பிரிவிலுள்ள 25 சமுதாயங்களையும் உள்ளடக்கிய 3 கோடி மக்களை முந்தைய எடப்பாடி.க.பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அரசு, கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவந்த சட்டம் 08/2021 மூலம் ஏற்கனவே சீரழித்து, நாசமாக்கி விட்டுச்சென்றுள்ளதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். 

அரசியல் சட்டத்திற்கு விரோதமாக, நிராகரிக்கப்பட்ட அம்பாசங்கர் கமிஷன் பரிந்துரையை மேற்கொள்காட்டி, தப்பும், தவறுமாக அவசரகதியில் ஒருசாதிக்கு மட்டும் 10.50% இடஒதுக்கீடு வழங்கி, 3கோடி மக்களை புதைகுழியில் தள்ளிவிட்டு சென்றுள்ளது. நீங்கள் சுட்டிக்காட்டியதுபோல், அன்றைய அரசு ஜனநாயகமுறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசல்ல, முறையின்றி வந்த அரசு முறையான செயலில் ஈடுபட்டால்தானே அச்சரியம். 

அதற்கே உண்டான குணாதிசங்களுடன் செயல்பட்ட முந்தைய அரசு, MBC பட்டியலிலுள்ள எந்த சமுதாயத்தினரையும் கலந்தாலோசிக்காமல், தங்களின் அரசியல் சுகபோகங்களுக்காக, அவசர அவசரமாக ஒரு சாதிக்கு மட்டும் உள்ஒதுக்கீடு எங்களை வஞ்சித்துவிட்டது. ஆனால் இந்த மண்ணில் விதைக்கப்பட்ட DNT சமுதாயத்தினரின் தியாகம் வீண்போகவில்லை. அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை நிரூபிப்பதைப்போல, அவசரமாக சட்டமியற்றியவர்களுக்கு எதிராக தேர்தல் களத்தை போர்க்களமாக்கி "ஒருமண்டல" காலம் முடிவதற்குள் ஆட்சிக்கு முடிவுகட்டி ஆறுதல் தேடிக்கொண்டோம்.

 "விடியலை நோக்கி" நீங்கள் புறப்பட்ட அதேநேரத்தில் தான் நாங்களும் புறப்பட்டோம்.ஸ்டாலின் தான் வர்றாரு விடியல் தரப்போறாரு என்ற கானம் காதுகளில் ரீங்கரமிட்டுக்கொண்டிருக்கொம்பொழுதே, தென் காசிமாவட்டம் ஆலங்குளம் தொகுதி பிரச்சாரக்கூட்டத்தில் DNT மக்களுக்கு வாக்குறுதியளித்தீர்கள். காலம் எங்களை கைவிடவில்லை. உதித்துவிட்ட உதயசூரியன் ஒளிவெள்ளத்தில் நம்பிக்கை பிறக்கிறது.சமூகநீதி தத்துவத்தை உயிராகக்கொண்டு இயங்கும் கட்சியின் ஆட்சியில் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

அவசர அவசரமாகவும், அநீதியாகவும் கொண்டுவரப்பட்டுள்ள உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 08/2021-ஐ எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ளதால், அச்சட்டத்தை உடனடியாக செயல்படுத்திடக்கூடாது என்று DNT-சமுதாயங்களின் சார்பிலும், தொட்டிய நாயக்கர் சார்பிலும் கோரிக்கை வைக்கின்றோம். 

நீங்கள் வாக்குறுதியளித்தபடி, முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் உரிய பங்கினை வழங்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அதுவரை பிப்ரவரி'2021-க்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று கோருகிறோம்.

இது குறித்து நேரில் சந்தித்து விளக்கமளிக்க 115 சமுதாய பிரதிநிதிகளும் ஆர்வமாக உள்ளோம். அதற்கு தங்களின் மேலான அனுமதிக்கு காத்திருக்கின்றோம்.

நன்றி.

இவண்,

திரு.M.பழனிச்சாமி, தலைவர்.

திரு.P.இராமராஜ், தலைமை ஒருங்கிணைப்பாளர்.

இராஜகம்பளத்தார் சமுதாய கூட்டமைப்பு.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved