🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொரோனாவால் 30 வயது இளைஞரை பறிகொடுத்தோம்! தடுப்பூசி செலுத்திக்கொள்வதொன்றே தீர்வு!

உறவுகளுக்கு வணக்கம்.

திண்டுக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த 30 வயதே நிரம்பிய நம் சமுதாய இளைஞர் ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஒருவாரகால தீவிர சிகிச்சைக்குப்பின்னரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவருக்கு, தரமான சிகிச்சை வழங்க மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் மருத்துவமனை டீனிடம் நேரடியாக தொடர்புகொண்டு வேண்டிக்கொண்டார். திரு.துரைவைகோ அவர்களும் தினமும் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் உடல்நிலை முன்னேற்றம் குறித்து விசாரித்துக்கொண்டே இருந்தார். இருந்தும் சிகிச்சைபலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த கவலையளிக்கிறது.

இச்சம்பவங்கங்களை இங்கே குறிப்பிடக்காரணம், முதலில் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பை மீறி தொற்று ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சைபெற வேண்டும். ஆனால் நம்மவர்கள் அதைச்செய்யாமல் மருந்துக்கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடுவது, நாட்டு வைத்தியர், உள்ளூரிலுள்ள செவிலியர், போலி மருத்துவர் போன்றவர்களிடம் ஊசிபோட்டுக்கொண்டு நோயின் தீவிரம் தெரியாமல் உள்ளனர்.

இன்று காலமான இளைஞருக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தான் திருமணமானது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா நோய்தொற்றின் இரண்டாவது அலை மிக மோசமாக உள்ளது. இதில் மேற்கு மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி மரணத்தை தழுவும் செய்திகள் நித்தமும் வந்தவண்ணம் உள்ளன. தமிழக அரசு மேற்கு மாவட்டங்களுக்கு முழுமையான ஊராடங்கை நீடித்துள்ள நிலையில் யாரும் தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். அரசு குறிப்பிடும் பாதுகாப்பு வழிமுறையை தவறாமல் கடைபிடிக்கவும்.

தடுப்பூசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அனைவரும் போட்டுக்கொள்ளவும். கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று சொல்லப்பட்டுவரும் நிலையில், பெற்றோர்கள் தடுப்பூசி போடாமல் இருப்பதால் குழந்தைகளுக்கு எளிதில் பரவ வழிவகை செய்யும். அப்படி நம்மால் குழந்தைகள் பாதிக்கப்படும் பட்சத்தில், பெற்றோர்கள் உயிர் வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறோம். அந்தநிலைக்கு செல்லாமல், தடுப்பூசி குறித்த அச்சம் தவிர்த்து தாமாக முன்வந்து, தடுப்பூசி போடுமிடத்தை தேடிச்சென்று எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள அனைவரையும் இருகரம் கூப்பி தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவண்.
மு. பழனிசாமி,
அறக்கட்டளை தலைவர், நாமக்கல்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved