🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மிரட்டலுக்கு அடிபணியாத அரசுக்கு தோள்கொடுப்போம்!- குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாப்போம்!

சமுதாய உறவுகளுக்கு வணக்கம்.

கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிநாளில் ஒருசமுதாயத்திற்கு மட்டும் 10.5% உள்ஒதுக்கீடு வழங்கிட வழிவகை செய்திடும் 08/2021 சட்டத்தால் தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 115 சாதியினரின் குழந்தைகள் மேல்நிலைப்பள்ளி,கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு பெரும் ஆபத்து வந்துள்ளது.

நல்வாய்ப்பாக, கடந்த சட்டமன்றத்தேர்தலில் நமக்கு துரோகம் இழைத்த அரசு தோற்கடிக்கப்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆட்சியில் தப்பும், தவறுமாக, அவசர அவசரமாக அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் செல்லுபடி ஆகத்தக்கதல்ல என்பதை ஒருசில வாரங்களுக்கு முன் மஹாராஸ்டிரா அரசு கொண்டுவந்த "மராத்தா இடஒதுக்கீடு" சட்டத்தை செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்ததின் மூலம் உறுதியாகியுள்ளது.

இந்தத்தீர்ப்பின் மூலம், சட்டமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டுவருவதாலேயோ அல்லது அதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கிவிட்டதாலேயோ அது முழுமையான சட்டமாகிவிடாது என்பதை சாமானியனும் புரிந்து கொள்ளலாம். அதிமுக அரசு கொண்டுவந்த இந்த செல்லுபடியாக சட்டத்தை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்துகொண்ட தற்போதைய திமுக அரசு, அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என்பதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் சமீபத்திய பேட்டி மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

அமைச்சரின் இந்தப்பேட்டிக்கு நீண்ட நெடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு எதிர்வினையாற்றியுள்ளதின் மூலம் அரசுக்கு மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார் பாமக-யின் நிறுவன தலைவர் மருத்துவர்.திரு.ராமதாஸ் அவர்கள். இந்த உள்ஒதுக்கீட்டிற்கெதிராக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் இருப்பதாலும், உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சமீபத்திய மராத்தா இடஒதுக்கீடு தீர்ப்பு உள்ளதாலும், தமிழ்நாடு அரசு நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க விரும்புகிறது. ஆனால் அதற்கு இடம்கொடுக்காமல் 115 சமுதாயத்தினருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் மருத்துவரின் அறிக்கை அமைந்துளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓமியோபதி மருந்து வழங்குனர், மருத்துவ உதவியாளர் பணிக்கு 555 பேரை தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிக்கையிலும்,உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையிலும், முந்தைய இட ஒதுக்கீட்டு முறையே கடைபிடிக்கப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளதை இவ்வறிக்கையில் சுட்டிக்கட்டியுள்ளார் மருத்துவர் இராமதாஸ். அன்றைய முதல்வர் எடப்பாடி.க.பழனிசாமி அரசின் பலவீனங்களை பயன்படுத்தி, தேர்தல் ஆதாயத்திற்காக மோசடியாக சட்டத்தைக் கொண்டுவந்தவர்கள், தமிழக அரசின் அறிவிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயங்குவதிலிருந்தே இவர்களின் மோசடியை புரிந்துகொள்ள முடியும்.

தமிழக அரசின் இந்த நிலைப்பாடு நீதி,நியாயங்களுக்கும், சத்தியத்திற்கும், சமூகநீதிக்கும் கட்டுப்பட்டதாக உள்ளது. தமிழக அரசின் இந்த முடிவிற்கு நாமும் வலுசேர்க்கும் வகையில் ஒத்துழைக்க வேண்டும். அப்படி நாம் ஒத்துழைக்காமல், இடஒதுக்கீடு குறித்து போதிய புரிதலின்றி இருந்தால், ஆட்சியாளர்களை மிரட்டி காரியம் சாதித்துக் கொள்பவர்களின் கை ஓங்கும்.

எனவே 115 சமுதாயங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் முடிவிற்கு ஆதரவுக்கரம் நீட்டி நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்வது அறிவார்ந்தவர்களின் தலையாய கடமை. இதுகுறித்து விவாதிப்பதற்கும், இடஒதுக்கீட்டு சட்டம் குறித்து உங்கள் சந்தேகங்களை போக்கிக்கொள்ளவும், இன்று மாலை 8 மணிக்கு நடைபெறும் காணொளி கூட்டத்தில் கலந்துகொள்ள இளைஞர்களையும், மாணவ சமுதாயத்தையும், சமுதாய அக்கறையுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Zoom.
Meeting ID: 823 7776 1838
Passcode: 9880717228

இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved