10.5% வன்னியர் உள்ஒதுக்கீட்டை தற்காலிகமாக நிறுத்துக! தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
![](https://thottianaicker.com/img/post/thumbimage/2021/06/07/1623045825.jpg)
மதிப்பிற்குரிய அய்யா,
வாழையடி வாழையாக சமூகநீதியை ஈன்று, பேணி, போற்றி பாதுகாத்து வரும் பேரியக்கத்தின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு 10.5% இடஒதுக்கீட்டு சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டி இக்கடிதத்தை சமர்பிக்கின்றோம்.
அதிமுக அரசு அதிகார இச்சைக்காக சட்ட/தர்ம வரம்புகளைமீறி சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் விதம் அவசர அவசரமாக 10.5% இடஒதுக்கீடு சட்டத்தை ஆட்சி அதிகாரம் முடிந்தபின் மோசடியாக கொண்டுவந்தனர். அச்சட்டத்தை வன்னிய மக்களும் ஏற்கவில்லை என்பது ஊரறிந்த உண்மை. இருப்பினும் பா.ம.க நிறுவனர் அரசை அச்சுறுத்தி அந்த அநீதியான சட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கின்றார். அரசு அச்சட்டத்தை நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை நிறுத்தி வைத்திருப்பது கீழ்ககாணும் காரணங்களுக்காக சரியான முடிவாகும்.
1. அச்சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதோடு இடைக்கால தடைகோரும் மனுவும் நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இச்சட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பதுதான் சரியானது. சிலதுறைகளில் உள் ஒதுக்கீடுடன் வெளியிட்டுள்ள அறிவிப்பு தவறானது.
2. 26.2.2021 இச்சட்டம் வந்தபின் உச்சநீதிமன்றம் மராத்தா வழக்கில் 5.5.2021ல் 102ம் அரசியல் அமைப்பு சட்டதிருத்தம் வந்தபின் பிற்படுத்தப்பட்டோரை வகைப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என்று தெளிவாக கூறியுள்ளதால் அச்சட்டம் ஆரம்பமுதலே அதிகாரமற்ற செல்லாத சட்டம். இவ்வழக்கில் தமிழக அரசும் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அரசு அதை மீறி செயல்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும்.
3. 69% இடஒதுக்கீடு வழங்கும் தாய் சட்டம் 45/1994 அரசியல் அமைப்பு சட்டத்தில் 9வது அட்டவணையில் ஓரளவிற்கு பாதுகாப்பாக உள்ளது. அச்சட்டத்தில் மாற்றம் செய்யாமல் BC 30%, MBC 20%, SC 18%, & ST 1%ம் ஆகிய விகிதத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. கடந்த காலங்களில் சரியான அறிவுரைகள் வழங்கப்படவில்லை.
4. மேலும் தாய் சட்டம் 45/1994 சரத்து 31Cன் கீழ் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்ற சட்டம் என்பதால் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை தாண்டினாலும் செல்லும் என்ற பெரும் கவச குண்டலத்தோடு பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை சிதைக்கும் வண்ணம் ஜனாதிபதியின் ஒப்புதல் இல்லாமல் மாற்றம் செய்வது தமிழக 69% விழுக்காட்டிற்கு சாவுமணி அடிப்பது போன்றது.
5. சரத்து 338B(9)ன்படி பிற்படுத்தப்பட்டோர் நலன்சார்ந்த எந்த கொள்கை முடிவையும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கலந்து ஆலோசித்து தான் செயல்படுத்தமுடியும். ஆனால் சட்டம் 8/2021 தேசிய ஆணையத்தை அனுகாமலேயே போடப்பட்டதாலும் மேலும் 115 சாதிகளில் யாரையும் கலந்து ஆலோசிக்காமலும் தமிழக ஆணையத்தின் ஆலோசனைகளை பெறாமல் தலைவரின் கடிதத்தை மட்டும் வைத்து சட்டம் போட்டது அதிகாரமற்ற அகராதியான அராஜக செயல்.
எனவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, நிபுணர்குழு மூலம் இடஒதுக்கீட்டை முறைப்படுத்தி, சட்டத்தை முறைப்படி திருத்தி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேறும் விதம், ஒரே DNT சான்று, DNT வகுப்பிற்கு தனி இடஒதுக்கீடு வழங்கிடவும், அதுவரை MBC/DNTக்கு 20% இடஒதுக்கீட்டையே செயல்படுத்த பணிந்து வேண்டிக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.
7.6.2021