🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆட்சிமாற்றத்திற்கு அடிகோலியவர்களின் அழுகுரல் கேட்பிர்! முதல்வருக்கு மாநிலச்செயலாளர் கடிதம்!

ஆட்சிமாற்றத்திற்கு அடிகோலியவர்களின் அழுகுரல் கேட்பிர்! தமிழக முதல்வருக்கு சீர்மரபினர் நலச்சங்கத்தின் மாநிலச்செயலாளர் திரு.சௌந்திரபாண்டியன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள்.

சீர்மரபினர் பழங்குடி மக்களின் கோரிக்கை குறித்து முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருபதாவது.

வாழையடி வாழையாக சமூகநீதியை ஈன்று, பேணி, போற்றி பாதுகாத்து வரும் சமூகநீதி பேரியக்கத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்கள் சமூகநீதிக்கு எதிரான 10.50% இடஒதுக்கீடு சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கக்கோரி  3 கோடி மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்களின் சார்பில் வேண்டுகிறோம். 

கடந்த அதிமுக அரசு அதிகார இச்சைக்காக சட்ட/தர்ம வரம்புகளைமீறி, சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் வகையில், அவசர அவசரமாக 10.5% இடஒதுக்கீடு சட்டத்தை ஆட்சி அதிகாரம் முடியும் தருவாயில் மோசடியாக கொண்டுவந்தனர். அச்சட்டத்தை வன்னிய மக்களும் ஏற்கவில்லை என்பது ஊரறிந்த உண்மை. இருப்பினும் பா.ம.க நிறுவனர் அறிக்கைகள் மூலம் அரசை அச்சுறுத்தி, அந்த அநீதியான சட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கின்றார். அரசு அச்சட்டத்தை நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை நிறுத்தி வைத்திருப்பது கீழ்க்காணும் காரணங்களுக்காக சரியான முடிவாகும். 

1. அச்சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதோடு இடைக்கால தடைகோரும் மனுவும் நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இச்சட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பதுதான் சரியானது. சிலதுறைகளில் உள் ஒதுக்கீடுடன் வெளியுட்டுள்ள அறிவிப்பு தவறானது.

2. 26.2.2021 இச்சட்டம் வந்தபின் உச்சநீதிமன்றம் மராத்தா வழக்கில் 5.5.2021-இல் 102-ஆம் அரசியல் அமைப்பு சட்டதிருத்தம் வந்தபின் பிற்படுத்தப்பட்டோரை வகைப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என்று தெளிவாக கூறியுள்ளதால் அச்சட்டம் ஆரம்பமுதலே அதிகாரமற்ற செல்லாத சட்டமாகிறது. இவ்வழக்கில் தமிழக அரசும் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அரசு அதை மீறி செயல்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும்.

3. 69% இடஒதுக்கீடு வழங்கும் தாய் சட்டம் 45/1994 அரசியல் அமைப்பு சட்டத்தில் 9வது அட்டவணையில் ஓரளவிற்கு பாதுகாப்பாக உள்ளது. அச்சட்டத்தில் மாற்றம் செய்யாமல் BC 30%, MBC 20%, SC 18%, & ST 1%ம் ஆகிய விகிதத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. கடந்த காலங்களில் சரியான அறிவுரைகள் வழங்கப்படவில்லை.

4. மேலும் தாய் சட்டம் 45/1994 சரத்து 31Cன் கீழ் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்ற சட்டம் என்பதால் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை தாண்டினாலும் செல்லும் என்ற பெரும் கவச குண்டலத்தோடு பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை சிதைக்கும் வண்ணம் ஜனாதிபதியின் ஒப்புதல் இல்லாமல் மாற்றம் செய்வது தமிழக 69% விழுக்காட்டிற்கு சாவுமணி அடிப்பதாக உள்ளது.

5. சரத்து 338B(9)ன்படி பிற்படுத்தப்பட்டோர் நலன்சார்ந்த எந்த கொள்கை முடிவையும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கலந்து ஆலோசித்து தான் செயல்படுத்தமுடியும். ஆனால் சட்டம் 8/2021 தேசிய ஆணையத்தை அணுகாமலேயே போடப்பட்டதாலும், மேலும் 115 சாதிகளில் யாரையும் கலந்து ஆலோசிக்காமலும், தமிழக ஆணையத்தின் ஆலோசனைகளை பெறாமலும், தலைவரின் கடிதத்தை மட்டும் வைத்து சட்டம் போட்டது,  அதிகாரமற்ற அகராதியான அராசக செயலாகும்.

6.தேர்தல் பரப்புரையின்போது DNT ஒற்றைச் சான்றிதழ் வழங்குவது குறித்தும் தவறான உள்இட ஒதுக்கீடு (10.5) குறித்தான உங்கள் விமர்சனங்களும் சரியான புரிதல்களும் சமூக நீதி காவலர்களின் பரம்பரையில் வந்த இந்த புதிய சூரியனின் விடியலில் நம்  DNT-மக்களின் வேதனை எல்லாம் சூரியனைக்கண்ட பனிபோல் அகன்று விடும் என்ற ஒற்றைச் சிந்தனையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எங்களால் முடிந்த அளவு பணியாற்றி வெற்றியும் கண்டோம்.

எனவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, நிபுணர்குழு மூலம் இடஒதுக்கீட்டை முறைப்படுத்தி, சட்டத்தை முறைப்படி திருத்தி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதம், ஒரே DNT சான்று,  DNT வகுப்பிற்கு தனி இடஒதுக்கீடு வழங்கிடவும், அதுவரை MBC/DNTக்கு 20% இடஒதுக்கீட்டையே செயல்படுத்த பணிந்து வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறு அக்கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved