🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காலன் பறித்துக்கொண்டான், கழகம் காத்து நின்றது!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள சின்னமுளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நமது கம்பளத்தார் சமுதாயத்தில் பிறந்த இராஜாமணி. 30 வயதே நிரம்பிய பட்டதாரி இளைஞரான இராஜாமணி ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனியார் நிதிநிறுவனமொன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். மறுமலர்ச்சி திமுக-வின் இணையதள அணியில் தீவிரமாக செயலாற்றிவந்த இராஜாமணி போலி தமிழ் தேசியவாதிகளை "மீம்ஸ்கள்" மூலம் கிண்டல் செய்வதால், கட்சியின் முன்னனி தலைவர்கள் முதல் அனைவருக்கும் அறிமுகமானவர். கடந்த 2019-இல் இவரின் திருமணம் சொந்த ஊரில் நடைபெற்றபொழுது இணையதள நண்பர்கள் பெருமளவில் கலந்துகொண்டதில், சின்னமுளையூர் கிராமமக்கள் அதிசயத்துப்போயினர். 

கடந்த மேமாதம் முதல்வாரத்தில்  கொரானோ பெருந்தொற்று காரணமாக நெல்லூரிலிருந்து சொந்தவூரான சின்னமுளையூருக்கு திரும்பியவர், மனைவி மற்றும் நான்கு மாத கைகுழந்தையுடன் ஊரடங்கை கழித்துவந்தார். கடந்த மாதக் கடைசியில் கொரனோ தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டபொழுது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டவுடன், கரூர் அரசு மருத்துவமனை டீனிடம் நேரடியாகப்பேசி ஆக்சிஜன் படுக்கைக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். 

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட இராஜாமணிக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இராஜாமணி அனுமதிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து வைகோ அவர்களும், துரை வைகோ அவர்களும் இராஜாமணியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடன் விசாரித்து வந்தனர். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கொரானோ பெருந்தொற்றிலிருந்து குணமடைந்தவர்நுரையீரல் பாதிப்பை சரிசெய்ய ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன்-04ஆம் தேதி இரவு 11 மணியளவில் சிறுநீர் கழித்துவிட்டு படுக்கைக்கு செல்கையில் திடீரென மயங்கிவிழுந்து மரணமடைந்தார். 

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளில் நான்கு மாத கைக்குழந்தையுடன் நிற்கதியாய் நின்ற இராஜாமணியின் மனைவிக்கு தோள்கொடுக்க முன்வந்தனர் மதிமுக இணையதள நண்பர்கள். கழகப்பொதுச்செயலாளரின் ஒப்புதலோடு வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் அவெஞ்ஜர் ஜெய் முன்னெடுப்பில். ஆன்லைன் மூலம் நிதிசேகரிப்பில் கடந்த ஒருவாரமாக ஈடுபட்டனர். இதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நண்பர்களும் தாராளமாக நிதியுதவி அளித்தனர். நேற்று முன்தினம் 12-ஆம் தேதியோடு ரூபாய் 4,66,501 (ரூபாய் நான்கு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்தி ஐநூற்றி ஒரு ருபாய்) நிதியை சேகரித்து முடித்துக்கொண்டு தலைமைக்கு தெரியப்படுத்தினர். அடுத்தநாளே மாவட்டக்கழக நிர்வாகிகளோடு இராஜமணியின் சொந்த ஊருக்கு நேரில் சென்று இராஜாமணியின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து, நிதி உதவியை வழங்கினார் துரை வைகோ. மேலும் நர்சிங் படிப்பை முடித்துள்ள இராஜாமணியின் மனைவிக்கு திண்டுக்கல் அல்லது மதுரையிலுள்ள நல்ல தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை வாங்கித்தருவதாக உறுதியளித்தார். 



மேலும், இராஜாமணி மனைவியிடம் நான் உங்கள் சகோதரன் எப்பொழுது எந்த உதவி வேண்டுமானாலும் தன்னைத்தொடர்பு கொள்ளலாம் என்றவர், செவிலியர் பணிக்கு அரசு நடத்தும் தேர்வில் வெற்றிபெற்று நேர்முகத்தேர்வுக்கு தேர்வாகும் பட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாங்கித்தருவதாக வாக்குறுதியளித்தார். அப்பொழுது அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடம் பேசிய துரைவைகோ, அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், நோய் அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவரை அனுகவும் அறிவுறுத்தினார். 

இணையதளம் மூலம் கட்சிப்பணியாற்றி, நல்ல நண்பர்களைப் பெற்றிருந்த திரு.இராஜாமணியின் திடீர் மரணம் நண்பர்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும், மனைவி மற்றும் குழந்தையின் எதிர்காலம் கருதி, உடனடியாக நிதி சேகரிப்பில் ஈடுபாட்டு குறைந்த கால அவகாசத்தில் நிதி உதவி அளித்தது, அதுவும் மதிமுக போன்ற அரசியல் அதிகாரத்தை சுவைக்காமல், கால்நூற்றாண்டுகாலமாக தோல்வியையே சந்தித்து வரும் இயக்க நண்பர்கள் கொடையுள்ளத்தோடு உதவியது அனைவரையும் நெகிழச்செய்தது.

நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்ட மதிமுக இணையதள நிர்வாகிகளுக்கும், நங்கொடை வழங்கிய நல்உள்ளங்களுக்கும், கட்சித்தொண்டரை தாயுள்ளத்தோடு மருத்துவமனையில் சேர்த்தது முதல் தினமும் நலம் விசாரித்து கடைசிவரை இராஜாமணியை காப்பாற்ற போராடிய மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ, திரு.துரை வைகோ மற்றும் மாவட்டக்கழக நிர்வாகிகளுக்கும், கட்சித்தலைமை வரை இவ்விசயத்தைக்கொண்டு சென்று இறுதிவரை போராடிய விருப்பாச்சி கோபால நாயக்கரின் வாரிசுதாரரான திரு.ஸ்ரீதர் வேலுச்சாமி ஆகியோருக்கும், இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved