10.5% இடஒதுக்கீட்டை எதிர்ப்பது தவறு! முட்டாள்களின் வாதத்திற்கு DNT-யின்பதிலடி!
உறவினர்களே, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு நிறுத்தி வைத்ததற்கு சீர்மரபினர் நல சங்கம் நன்றி தெரிவித்து சுவரொட்டிகள் ஓடுவது ஏன்?
பல உறவுகள் நமக்கு வேண்டிய இட ஒதுக்கீட்டை கேட்க வேண்டியதுதானே? ஏன் வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கின்றார்கள். குறிப்பாக பல ஊடகவியலாளர்கள் டிவி விவாதங்களிலும், யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கும்பொழுது, வன்னியகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது சரிதான், இடஒதுக்கீடு கேட்டு அவர்கள் 40 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள் என்று பலவிதமான விளக்கங்களை கூறி, தமிழகத்தின் பெரும் கொண்ட மக்களை முட்டாள்களாக்கி வருகின்றனர்.
வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு நாம் உட்பட அனைவருமே ஆதரவு தருகிறோம். கடந்த அதிமுக அரசு அவசர அவசரமாக சில மணி நேரங்களில் கொண்டுவந்த இட ஒதுக்கீடு சட்டம் 8/2021 நாம் இறுதிவரை எதிர்க்க வேண்டிய சட்டம். இதற்கான சில காரணங்களை மட்டும் சுருக்கமாக பட்டியலிடுவோம்.
முதல் காரணம், 10.5 விழுக்காடு ஏதோ வானத்தில் இருந்து விழுந்தது போலவும், அவர்களுக்கு கொடுத்தால் கொடுத்து விட்டுப் போகட்டும் என்பது போலும் விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே 115 சமூகங்கள் பெற்றுவந்த 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் இருந்து பிரித்து, அம்மக்களின் வாய்ப்பை குறைத்து 10.5 விழுக்காடு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே 115 சமூகங்களின் வாய்ப்புகள் பறிபோகும் போது அதை எப்படி வேடிக்கை பார்ப்பது? அதை எப்படி சரி என்று ஏற்றுக் கொள்வது?
30 வருடங்களாக 116 சமூகங்கள் பங்கிட்டுவந்த நதிநீரை, எங்களுக்குத்தான் முழுவதும் சொந்தம் என்று உரிமை கொண்டாடி, சண்டித்தனம் செய்கிறது ஒருதரப்பு. 30 ஆண்டுகளாக 115 சமூகங்களும் பயன்படுத்தி வந்தநீரை, ஒருவர் மட்டும் உரிமை கொண்டாடும்பொழுது முறையாக விசாரணை செய்து, பிரச்சினையை சுமூகமாக தீர்க்கவேண்டிய மன்னன், சண்டியனோடு கூட்டுக்களவானித்தனம் செய்துகொண்டு, 115 சமூகங்களையும் கேட்காமல், விவாதிக்காமல், சண்டியரை நீ இவ்வளவு எடுத்துக்கொள் என்று சொல்வது என்ன நியாயம்? இடஒதுக்கீட்டை பாகசாசனம் செய்யும்பொழுது இதுவரை அனுபவித்து வருபவர்களை கேட்கவேண்டுமா? கூடாதா?
மூன்றாவதாக, புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்கு ஒரு ஆணையத்தை நியமித்துவிட்டு புள்ளி விவரங்கள் எதுவுமே இல்லாமல் ஒரு ஜாதியினர் கொடுக்கும் புள்ளிவிவரங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு, பத்தரை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது எப்படி சரியாகும்?
நான்காவதாக ஒரு ஜாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கினால் மற்ற ஜாதிகளுக்கு ஏன் தனியாக இட ஒதுக்கீடு வழங்கவில்லை? மற்ற ஜாதிகள் எல்லாம் கீழானவர்களா? இழிவானவர்களா? இல்லை அவர்களும் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறதா? என்ன காரணத்திற்காக மற்ற ஜாதிகளுக்கும் தனித்தனியாக இட ஒதிக்கீடு வழங்கவில்லை? அப்படி ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியாக இட ஒதிக்கீடு வழங்கினால், இட ஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்த முடியும்? இப்படி நடைமுறைக்கு சாத்தியமில்லாத, செயல் படுத்த முடியாது, அரசியலுக்காக, ஜாதி உணர்வுகளை தூண்டுவதற்காக, மிகக்குறுகிய, பிற்போக்கான, பழமை வாதத்தின் அடிப்படையில் வைக்கப்படுகின்ற கோரிக்கைகள், சரியான கோரிக்கைதான், சமத்தான கோரிக்கைதான் திறமையானவர்கள் போராடினார்கள் வென்று விட்டார்கள் என்ற வாதங்கள் எல்லாம் பகுத்தறிவுக்கு கடுகளவும் பொருந்தாத வாதங்கள். அடிப்படையில் ஒரு ஜாதிக்கு தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையே மனித நேயத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும், சட்டத்திற்கும் நடைமுறைக்கும் ஒவ்வாத காரியம் என்பதை பொதுவெளியில் விவாதிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே ஒரு ஜாதிக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்தது சரி என்ற வாதமே கடுகளவும் சிந்தனையை பயன்படுத்தாமல் வைக்கின்ற உதட்டளவு வாதங்கள் என்பதை உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், தமிழக இட ஒதுக்கீடு சட்டம் வழங்குகின்ற இட ஒதிக்கீடு உரிமைகள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக மருத்துவ சேர்க்கையில் மறுக்கப்பட்டு வருகின்றது. அதைப்பற்றி எந்த அரசியல் கட்சிகளோ, எந்த ஊடகவியலாளர்களோ பேசுவது கூட இல்லை, ஏனென்றால் இவர்களுக்கு இட ஒதுக்கீட்டை பற்றி சரியாக புரிந்து கொள்வதற்கு நேரமில்லை.அன்றாடம் ஏதாவது ஒரு தலைப்பு அதில் தொடர்ந்து விவாதங்கள் என்று பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட விளக்கங்களையும் விமர்சனங்களையும் இனிமேலும் உறவுகள் நம்பக்கூடாது.
ஐந்தாவதாக, 10.5 விழுக்காடு சட்டம் எப்படியெல்லாம் சட்டத்தை மீறியது என்பதை நாம் பெரிய பட்டியலாக ஏற்கனவே வெளியிட்டு இருக்கின்றோம். அதில் கூறப்பட்டுள்ள காரணங்களை எல்லாம் சரியாக புரிந்து கொண்டு தொலைபேசியில் உங்களைத் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் தமிழகத்தில் இட ஒதுக்கீடு சட்ட எண் 45/1994 உள்ளது, அதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதிக்கீடு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த சட்டம் இதுவரை திருத்தப்படவில்லை. ஆகவே அந்த சட்டத்தையும் அரசு செயல்படுத்தித்தான் ஆக வேண்டும். இப்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 10.5 விழுக்காடு,7 விழுக்காடு, 2.5 விழுக்காடு என்று பிரித்து வழங்கப்படும் என்று சட்ட எண் 8/2021 போடப்பட்டுள்ளது. இப்போது அரசு எந்தச் சட்டத்தை செயல்படுத்த முடியும்? அதனால் தான் அரசு நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை 10.5 விழுக்காடு இட ஒதிக்கீடு சட்டத்தை செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்திருக்கின்றது.
ஆனால் சில அதிகாரிகள் சட்டத்தையும் தர்மத்தையும் சரியாக புரிந்து கொள்ளாமல், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பின் காரணமாக அவசர அவசரமாக புதிய சட்டத்தின்படி10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. மேலும் அவற்றையெல்லாம் 115 சம்பவங்கள் வேடிக்கை பார்ப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது. அது எப்படி அவர்கள் சமத்து நாம் ஏளனம் என்று ஏற்றுக்கொள்வது? எனவே உறவுகளே சீர்மரபினர் நல சங்கம் அநீதியான எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்க மாட்டோம். 100 விழுக்காடு நியாயமான சட்டப்படியான நிலைப்பாட்டை மட்டுமே எடுப்போம் என்று நம்புங்கள். அச்சமின்றி பயமின்றி அமைதியான முறையில் நமது உரிமைகளை உறுதியாக இறுதி வரை வெளிப்படுத்துங்கள். நன்றி.
இவண்,
சீர்மரபினர் நலச்சங்கம்.