தொடங்கியது தொட்டிய நாயக்கர்களின் போஸ்டர் யுத்தம்!
10.5 விழுக்காடு வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அரசுப்பணி நியமனங்களில் முந்தைய நடைமுறையே தொடரும் என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்துறை அமைச்சர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால், அவசர அவசரமாக, நீதிக்கு புறம்பாக, அநீதியாக ஒருசிலரின் அரசியல் இச்சைகளுக்காக, முந்தைய அரசின் ஆயுட்காலத்தின் இறுதிநிமிடத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலுள்ள 115 சாதிகளைச்சேர்ந்த 3 கோடி மக்களுக்கு எதிராக உள் ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றினர்.
ஏற்கனவே தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு வழங்கும் சரத்தை உள்ளடக்கிய 69% இடஒதுக்கீட்டு சட்டம், அரசியல் அமைப்புச்சட்டத்தின் 9 அட்டவணையில் சேர்த்து பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், அதில் திருத்தம் செய்யாமல், புதிதாக ஒருசட்டத்தை போட்டது தவறு. மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தாமலும், தவறான புள்ளி விபரங்களை மோசடியாக காட்டி, சட்டத்தை ஏமாற்றி, ஒருசாதிக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கியது சட்டத்திற்கு புறம்பானது என்று MBC பிரிவிலுள்ள தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
அவசரகோலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த மோசடி சட்டத்தால், பெருங்கொண்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பு உரிமை பாதிக்கப்படும் என்பதால், புதிதாகப்பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழக அரசின் இந்த செயலுக்கு வழக்கமான மிரட்டல்தொனியில் அறிக்கை வெளியிட்டு அரசை பணியச்செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அதனை முறியடிக்க, தமிழக அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது, இச்சட்டத்தால் பாதிக்கப்படும் 115 சமுதாய மக்களின் கடமை. அந்தவகையில், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட68 சமுதாயத்தைச்சேர்ந்த சீர்மரபினர் நலச்சங்கத்தினர் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், மேலும் ஒற்றைச்சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியும் தமிழகம் முழுவது போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் களத்தில் முந்தைய அரசை ஆட்சியிலிருந்து அகற்றிட சபதமேற்று, முன்னாள் அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியதோடு, முதல்வர், துணைமுதல்வர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தின்பொழுது கறுப்புக்கொடி ஆர்ப்பட்டாம் நடத்தி பரபரப்பைக்கிளப்பி, சபதத்தில் வெற்றியும் பெற்றனர். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் மீண்டும் DNT சமுதாயத்தினர் களத்தில் இறங்கியிருப்பது, அரசியல் வட்டாரத்தை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது.