🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தொட்டிய நாயக்கர் மாணவச்செல்வங்களுக்கு தடையாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்க!

தமிழகத்தில் நீட் தேர்வின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு பாதிப்புகளை ஆராய மாண்புமிகு நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடித விபரம்.
ஐயா,
தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் சுமார் 40 லட்சம் பேர் தமிழகத்தில் வசிக்கின்றோம்.  இதில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் கிராமப்புறங்களில் விவசாயக்கூலிகளாக உள்ளனர். 95%-க்கும் அதிகமான எங்கள் சமுதாய மாணவ-மாணவிகள் கிராமப்புற அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

தமிழகத்தில் நீட் தேர்வுமுறை அமுல்படுத்தப்படுவதற்கு முன்புவரை, +12 மதிப்பெண்கள் அடிப்படையில் சராசரியாக 5 முதல் 8 பேர் வரை ஆண்டுதோறும் எங்கள் சமுதாயத்தைச் சார்ந்த மாணவ-மாணவியர் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப்பெற்று வந்தனர். 

ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின்பு, முதல் இரண்டு ஆண்டுகளில் மருத்துவப்படிப்பில் தொட்டியநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியர் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை. 

அதற்குப்பின்னரும் கூட நகர்ப்புறங்களிலிலுள்ள தனியார் பள்ளியில் படித்து,  கோச்சிங் சென்டரில் இரண்டு வருடங்கள் பயிற்சி பெற்றவர்களே நீட்தேர்வில் வெற்றிபெற்று மருத்துவப்படிப்பில் சேர்ந்தனர். அதுவும் ஆண்டுக்கு ஓரிருவருக்கே அந்த வாய்ப்புகிட்டியது. ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர் தேர்வெழுதிய பொழுதும்  மருத்துவ இடம் கிடைக்காமல் போனதிற்கு 3-5 லட்சம் வரை கட்டணம் செலுத்தி, தனியார் நீட் கோச்சிங் சென்டரில் பயிற்சி எடுக்க, எங்கள் சமுதாய மாணவ-மாணவியருக்கு பொருளாதார வசதியின்மையே காரணமாக உள்ளது.

கடந்த கல்வியாண்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கிய காரணத்தால் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர்.  இது ஒன்றே "நீட் " தேர்வு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் நலனுக்கும், சமூகநீதிக்கும் எதிரானது என்பதற்கு சாட்சி.

கொரோனா பெருந்தொற்றினாலும், பொருளாதார தேக்கநிலையாலும் பல பெற்றோர்களின் வேலைவாய்ப்பு பறிபோயுள்ள சூழலில், தொழில்முனைவோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை 5-லட்சம் செலவு செய்தாவது தனியார் "நீட்" கோச்சிங் சென்டரில் சேர்த்து குழந்தையை மருத்துவராக்கிவிடலாம் என்றெண்ணியிருந்த நகர்ப்புற நடுத்தரக்குடும்பங்களின் கனவும் தகர்ந்துபோய்விட்டது.

சமூக சமத்துவத்தை நிலைநாட்டுவதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசின் கொள்கையாக இருக்கமுடியும்.  ஆனால் அதற்குமாறாக பல்வேறு பாடத்திட்டங்களில் படித்துவரும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக்கனவை எட்டாக்கனியாக்கும் விதமாக, மேல்தட்டு மக்களால் படிக்க வாய்ப்பு பெரும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாக்களை அமைத்து தடைகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், 12-ஆம் வகுப்புவரை தேர்வு பெற்றதை அல்லது 12 வருட படிப்பையே நிராகரிக்கும் விதத்தில் அரசே "நீட்" தேர்வை புகுத்துவது ஏழை,எளிய மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசுக்கு அழகல்ல. 

இதுதவிர, நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின், அத்தேர்வில் வெற்றிபெற்று மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளவர்களில் 70% அதிகமானோர் நகர்ப்புற, பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் என்பது தாண்டி +12 முடித்து இரண்டு வருடங்கள் நீட் பயிற்சி எடுத்தவர்களாக உள்ளனர். இதனடிப்படையில் சராசரியாக 23 வயதில் மருத்துவப்படிப்பு முடித்தநிலையில், தற்பொழுது அந்த சராசரி வயது 25-26 ஆக உயர்ந்துள்ளது. இதனால் திருமண வயது அதிகரித்து, மேற்படிப்புக்கு செல்லும் வாய்ப்பு குறைகிறது. இது சமூகத்தில் பல்வேறு எதிர்மறையான பின்விளைவுகளையும், சிக்கல்களையும் உண்டாக்கும்.

எனவே இந்த கல்வியாண்டே "நீட்" தேர்வை ரத்து செய்து சாதாரண மக்களின் குழந்தைகளையும் மருத்துவராக முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

இவண்,
பொதுச்செயலாளர்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை. 
பதிவு எண்: 20/2006.
தொடர்பு எண்: 04442022480,7395988767
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved